Featured Home (TOP)

Recent Comments

Wednesday, November 18, 2015

avathani Media Network

காத்தான்குடி (தொடர்-3)



(Kattankudy Mohamed Nizous)
ஓலைக் குடிசையில் வாழ்ந்தார்
ஊரில் வரும்படி தாழ்ந்தோர்.
காசு பணம் கூட உள்ளோர்
களிமண்ணால் கட்டினார் இல்லம்.
ஆலூடு உள்ளூடு என்றும்
அடுப்படி சாப்பறை என்றும்
நாலு பகுதிகள் இருக்கும்
நடுவில் உஞ்சில் பறக்கும்.
முன்னுள்ள சாப்பறை ஒட்டி
முற்றத்தில் குருத்து மண் கொட்டி
தென்னங் குற்றிகள் வெட்டி-மண்
சரியாமல் போடுவார் சுற்றி.
மாவும் தென்னையும் கமுகமும் -அதில்
கூவும் குயிலும் சேவலும்
தாவும் அணிலும் பூனையும்
யாவும் இயற்கையின் படைகள்
இருந்த ஊரின் கொடைகள்.
கிணற்றுக்குள் மதுர மரக் கொட்டு -அதில்
கிடைக்கும் நீர் அமுதம் கொட்டும்
சாம்பலால் பல்லை விளக்கி
சோம்பலின்றி திலாந்தினால் அள்ளி
ஆம்பிளைங்க குளிக்கின்ற வேளை
அது பழகிய ஊரின் அழகிய காலை.
பெரிசாக ஆகும் முன்னே
பெண்கள் திருமணம் முடித்து
கரிசணையாய் குடும்பம் காத்தார்.
புருசனை நம்பி வாழ்ந்தார்
வரிசையாய் பிள்ளைப் பெற்றார்
அறுசுவை உணவு சமைத்தார்.
விரிசல்கள் குறைந்த வாழ்க்கை.
(ஊர் ஊரும்....)
----------------------------
பி.கு.- எனது தாய் மாமாவும் பிரபல நாவல் ஆசிரியருமான ஜுனைதா ஷெரீப் அவர்களின் சின்ன மரைக்கார் பெரிய மரைக்கார் நாவலை அடிப்படையாகக் கொண்டு இது எழுதப்படுகிறது.
Read More
avathani Media Network

நிந்தவூரில் மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவப் பரிசோதனையும், விளிப்புணர்வுக் கருத்தரங்கும். -ஆரம்ப நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம்-


(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூர் பிரதேசத்திலுள்ள பெண்களிடத்தில் மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறியும் நோக்கிலும், இப்புற்று நோய் தொடர்பாக மக்களை விழிப்படையச் செய்யும் நோக்கிலுமான மருத்துவப் பரிசோதனையும், விழிப்புணர்வுக் கருத்தரங்கும் நேற்று நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம் பெற்றது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.பறூஸா நக்பர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் சுகாதார, சுதேச மருத்துவ, ஊட்டச்சத்து பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.பாயிஸ், மெடிறெஸ்ட் நிறுவனத் தலைவர் ஏ.எம்.ஜாபீர், பிரமுகர்.எஸ்.அன்வர்டீன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.

இதே வேளை '50 வீதமான பெண்கள் இப்புற்று நோய் உண்டாகி, காலதாமதமான பிறகே வைத்தியத்தை நாடுகின்றனர். இதனால் அதிகமானோர் மரணத்தைத் தழுவுகின்றனர். எனவே, நோய் உண்டாக ஆரம்பிக்கும் போது அல்லது, அதற்கு முன்னர் மருத்துவம் செய்வது நன்மை தரும்' என சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.பறூஸா நக்பர் தெரிவித்தார். 

சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'புற்றுநோய் ஒரு கொடிய நோயாகும். இது அதிகமாகப் பெண்களின் மார்பகத்தையும், அவர்களின் கருப்பையையும் தாக்குகின்றது. இதிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவே இப்பரிசோதனைகளைச் செய்கின்றோம். இன்று அரசாங்கமானது ஒரு புற்று நோயாளிக்கு சுமார் 90 இலட்சம் ரூபாவைச் செலவிடுகின்றது. இவ்வளவு காலமும் இலங்கையில் ஒரே ஒரு புற்று நோய் வைத்தியசாலை மட்டுமே இருந்தது. அது மகரகமையில். தற்போது நாம்; இரண்டாவது வைத்தியசாலையாக மட்டக்களப்பில் ஒன்றைத் திறந்து வைத்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.

அதிகமான பெண்கள் இப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, பெண்கள் தமது மார்பைத் தாமே பரிசோதிப்பதற்கான சிறியரக இயந்திரமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. இறுதியில் இவ்வுபகரணங்களில் சில பிரதியமைச்சரினால் வைத்திய அதிகாரி பறூசாவிடம் ஒப்படைக்கப்பட்டன. 










Read More
avathani Media Network

அலரிமாளிகைக்கு 16 வாகனங்களில் வந்த 15 அதிகாரிகள்:பிரதமரும் குழப்பத்துக்குள்ளாகி கடுப்பாகினாராம்

எதிர்வரும் காலங்களில் அலரி மாளிகையில் இடம்பெறும் வைபவங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தனித் தனி வாகனங்களில் வரக்கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம், அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்கு வருகை தந்த அரச அதிகாரிகள் 15 பேர் 16 வாகனங்களைப் பயன்படுத்தியிருந்த நிலையில் அவர் இவ்வாறு கடுமையான கட்டளையினைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது, அதிகாரி ஒருவர் வந்த வாகனம், அவரது மனைவியின் தேவைக்காக வெளியில் செல்ல, கலந்துரையாடலை முடித்த அதிகாரி பிரிதொரு வாகனத்தை வரவழைத்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இது குறித்து அலரிமாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டு செல்ல பிரதமர் கடுப்பாகியுள்ளார்.

இந்நிலையிலேயே, இனிவரும் காலங்களில் அலரிமாளிகைக்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தனி வாகனங்களில் வரக் கூடாது என்றும், ஒரு வாகனத்தில் குறைந்தது நான்கு அரச அதிகாரிகளாவது சேர்ந்து வருகை தர வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் அரச நிறுவனங்களின் வீண்செலவுகளைத் தவிர்ப்பதுடன், எரிபொருள் சிக்கனத்தையும் கடைப்பிடிக்க முடியும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Read More
avathani Media Network

மட்டக்களப்பு மாவட்டத்தினை முன்னேற்றகரமானதாக மாற்றுவதே நோக்கம்: பி.எஸ்.எம்சார்ள்ஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிலைத்து நிற்கக் கூடிய பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தி உட்கட்டுமானத்தினை மேம்படுத்தி தொடர்ந்தும் வறுமைக் கோட்டிற்குள் இருக்கின்ற மக்களை மேம்படுத்தி மாவட்டத்தினை ஒரு சிறந்த முன்னேற்றகரமானதாக மாற்றுவதே நோக்கமாகும் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்ற யு.எஸ்.எய்ட்டின் வாழ்வாதார அபிவிருத்திக்கான உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இறைச்சிக் கோழி வளர்ப்பு முகாமைத்துவ பயிற்சி செயற்றிட்டத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதிபி.எஸ்.எம்சார்ள்ஸ்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு சமூகப்பிரச்சினைகளுக்கு மத்தியில் அவற்றினைத் தீர்ப்பதற்கான மெல்ல மெல்ல நடந்து கொண்டிருக்கிறோம். 5 லட்சத்து 80ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாவட்டத்திற்குத் தேவையாக இருக்கின்ற முட்டை, பால், இறைச்சிக் கோழி, மரக்கறிகள், பழங்கள் என்பவற்றிலே 80 வீதமானவைகள் வேறு மாவட்டங்களிலேயிருந்தே வந்து கொண்டிருக்கிறது.
இந்த மாவட்டத்தில் மனித வளம் இருக்கிறது. நில வளம், நீர்வளம் இருக்கிறது. இதை விடவும் இயற்கை அழகு, இயற்கையோடு இணைந்த பல்வேறு வளங்கள் தரப்பட்டுள்ளபோதும் இவற்றை எங்களுடைய மாவட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயற்பாட்டை முன்னெடுக்காமல் இருப்பது தான் இலங்கையிலே இரண்டாயிரத்து பன்னிரண்டாம், 13ஆம் ஆண்டுகளில் வறுமை கூடிய மாவட்டமாக தெரிவிக்கப்படக் காரணம்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் படி 2013, 2014ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின் படி அந்த வறுமை 0.9 வீதம் குறைக்கப்பட்டு 23ஆவது மாவட்டமாகக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் மிக மிக மெதுவாக எங்களுடைய பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்சினைகளுக்கிடையிலே 80 பேருக்கான வாழ்வாதாரத் தொழில் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது ஒரு அத்தியாயமாகும்.
புரட்சி என்பதோ, மாற்றம் என்பதோ ஒரு நாளில் ஏற்படுத்தப்படுவதல்ல. ஒரு சிறு விடயம் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும். மட்டக்களப்பு மாவட்டத்தின் இருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நிலைத்து நிற்கக்கூடிய பல்வேறு உட்கமைப்பு ரீதியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நீண்ட கால அடிப்படையில் மாவட்டத்தின் வறுமையை ஒழிக்கும் என்று நம்புகிறோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் படி 180,000 பேர் எந்தவித தொழிலும் இல்லாதவர்களாக உள்ளனர். இவர்களில் 18 வயது முதல் 30 வயதுக்கிடைப்பட்ட 100,000 இளைஞர், யுவதிகளும் அடங்குகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகுதல், சிறுவயதுத் திருமணம், விவகாரத்து, பெண்கள் வெளிநாடு செல்லுதல் ஆகியனவும் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடையாக உள்ளன.
மேலும், தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய இடங்களை விட மிக குறைந்து காணப்படுகின்றது. ஏனெனில் முன்கூட்டியே வெள்ள அனர்த்தம் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பான நடவடிக்கைகளை நாம் எடுத்தமையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 148 குடும்பங்கள் திங்கட்கிழமை அவர்களது இருப்பிடங்களிலிருந்து வேறு இடத்தில் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் அன்று மாலையிலேயே அவர்கள் அவர்களுடைய இருப்பிடம் சென்றுவிட்டார்கள். இன்றைய நிலையில் எந்தவிடமான இடம் பெயர்வுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை. யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஒப்பிட்டளவில் கடந்த வருடங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் இவ்வருடத்தில் வெள்ள அனர்த்தம் பாதிப்புக்கள் இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வெள்ள அனர்த்தப் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச நிறுவனங்கள் பல உதவிகளை வழங்கியிருக்கின்றன. குறிப்பாக உலக வங்கி ஆயிரத்து நூறு மில்லியனுக்கு மேற்பட்ட தொகையை வெள்ள அனர்த்திலிருந்து பாதுகாப்பதற்காக வழங்கியிருக்கிறது. அதைவிட ஐ.ஓ.எம்.போன்ற நிறுவனங்களும் பல திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றனர்கள்.
அதனை விடவும் வெள்ளம், வரட்சி ஆகிய இரண்டுக்கும் சம்பந்தப்பட்டிருக்கின்ற கித்துள் றுகம் குளங்களை இணைப்பதற்கான வேலைத்திட்டம் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டு இந்த வருடத்தில் அத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்குரிய வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அதைவிடவும் முந்தானை ஆற்றினை உலக வங்கியின் உதவியுடன் ஆய்வுக்குட்படுத்தி வரட்சி, வெள்ளம் ஆகிய அனர்த்தங்களை எதிர் கொள்ளும் வகையிலான சோதனைக்கான உபகரணங்கள் முந்தானை ஆற்றிலும், இந்த மட்டக்களப்பு வாவியின் ஓரங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிலைத்து நிற்கக் கூடிய பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தி உட்கட்டுமானத்தினை மேம்படுத்தி தொடர்ந்தும் வறுமைக் கோட்டிற்குள் இருக்கின்ற மக்களை மேம்படுத்தி மாவட்டத்தினை ஒரு சிறந்த முன்னேற்றகரமானதாக மாற்றுவதே நோக்கமாகும். இந்த மாற்றம் எங்களால் ஏற்படுத்தப்படுவதல்ல. நீங்களும் மாற வேண்டும். நீங்கள் என்று மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அன்று நிச்சயமாக இந்த மாவட்டம் உங்களுக்குரிய மாவட்டமாக மாறும் என்று தெரிவித்தார்.
Read More