நாடு போதைப்பொருள் வர்த்தகத்தின் மத்தியஸ்தானமாகிப் போயுள்ள நிலையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் பதவியே அனுமதிப்பத்திரம் இவ்வாறு நாட்டுக்கு பொருந்தாத அரசியல் கலாசரத்தை மாற்றியமைக்க நாட்டின் அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பொது மக்களால் மட்டுமே முடியும் எனவும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
தூய்மையான அரசியல் பிரஜைகளை உருவாக்குவோம் என்ற தலைப்பில் கொழும்பு விஹாரமாதேவி பூங்கா உள்ளக அரங்கில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற நாடளாவிய ரீதியில் மக்களிடம் பெறப்பட்ட 10 இலட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய புத்தகங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் எம்.பி.விஜித ஹேரத், முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிசாந்த வர்ணகுலசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாளர் எரான் விக்கிரமரட்ண, அத்துரலியே ரத்ன தேரர், பிரஜைகள் முன்னணியின் செயலாளர் ஜே.ஸ்ரீரங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய மாதுலுவாவே சோபித தேரர்,
எமது நாடு இன்று போதைப்பொருள் வர்த்தகத்தின் மத்தியஸ் தானமாகியுள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களே என தெரிந்த போதும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் இல்லை. இதனால் நாட்டின் பாராளுமன்றம் போதைப்பொருள் வியாபாரிகளால் நிரம்பிப்போயிருந்தமையையே இது வரையில் எம்மால் காண முடிந்தது.
போதைப்பொருள் மத்தியஸ்தானமாக நாடு மாறியுள்ளமையினால் நாட்டின் அரசியல் தலைவர்கள் பலர் இவ்வர்த்தகத்தில் ஈடுபடும் போது அவர்களுக்கு காப்பாகவும் அனுமதிப்பத்திரமாகவும் தமது பதவியினையே பயன்படுத்திக் கொண்டனர்.ஆனால் அவர்கள் மக்கள் சேவை நிமித்தமே பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டனர். அவர்களை மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பினர்.
மக்கள் சேவைக்காக பாராளுமன்றம் செல்பவர்கள் ஊழல்வாதிகளாக இருப்பது முறையன்று. அதனால் மக்கள் இனிவரும் காலங்களில் பாராளுமன்றத்திற்கு அவ்வாறானவர் செல்லாதிருப்பதை உறுதி செய்வது அவர்களின் கடமையாகும் அதற்காக எதிர்வரும் தேர்தலின் போது நாட்டு மக்கள் தமது பிரதிநிதிகளை கல்வி ஞானமுள்ள, அரசியல் அறிவுமிகுந்த மக்களுக்கு சேவையாற்ற விரும்புபவர்களையே பாராளுமன்றம் அனுப்ப முன்னின்று செயற்பட வேண்டும்.
அடிப்படை அரசியல் அறிவில்லாதவர்களை பாராளுமன்றம் அனுப்பியுள்ளமையினாலேயே அண்மையில் சீர்திருத்தம் செய்யப்பட்ட முக்கிய சட்டதிட்டங்கள் சிலவற்றையும் 20 ஆவது திருத்தத்தையும் நாட்டு மக்கள் இழக்க நேரிட்டது என்றார்.
virakesary.lk
