(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)
இன்று (21) வெள்ளிக்கிழமை இரவு 08:00 மணிக்கு ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய தலைமைக்காரியாலயத்திற்கு வருகை தரவுள்ளாதாகவும், அங்கு நீங்களும் சென்று தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் தொடர்பான நமது மக்களின் ஆதங்கங்கள், எதிர்பார்ப்புக்களை தலைவரின் முன்னால் எடுத்துரைக்குமாறும் கொழும்பில் இருந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் இரவு 07:30க்கு எனக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
அதற்கமைய நான் ந.தே.மு. தலைமையகத்திற்கு விரைந்தேன். அங்கு என்னைக் கண்டதும் தலைமைத்துவ சபை உறுப்பினர் ஏ.ஜீ.எம். ஹாறூன் என்னிடம் வந்து, 'இங்குள்ள நிலைமைகள் எல்லாம் தலைவருக்குத் தெரியும். அவரை வரவேற்று ஒரு சிற்றுண்டி வழங்கி அனுப்பி வைப்பதே இன்றைய நிகழ்வின் நோக்கம்' என்றார்.
அதனை மறுத்த நான், 'இல்லை. அப்துர் றஹ்மான்தான் என்னை இங்கு அவசரமாகச் செல்லுமாறு கூறினார். தலைவரிடம் நமது தேசியப்பட்டியல் தேவை பற்றியும், அதற்கான தர்க்கரீதியான காரணங்களையும் என்னை எடுத்துரைக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். அதன்படி நான் நமது கோரிக்கையையும், அதன் முக்கியத்துவங்களையும் தலைவர் முன்பாக எடுத்துரைக்க வேண்டும். அவருக்கு நீங்கள் 'டீ பார்ட்டி' வைத்து அனுப்புவதென்றால் நான் இங்கே வந்திருக்கத் தேவையில்லை' என்றேன். அதற்கவர் எதுவுமே பேசாமல் அப்பால் சென்றார்.
இதுபற்றி நான் பொறியியலாளர் அப்துர் றஹ்மானுக்கு தொலைபேசியில் தெரிவித்தேன். அதனைக் கேட்ட அவர், 'இல்லையில்லை.. நீங்கள் நான் சொன்னவாறு அங்கு பேசுங்கள். தலைவர் நமது இடத்திற்கு வருகின்றார். நமது மக்களின் கருத்துக்களையும் அவர் நேரில் அறிய வேண்டும்' என்றார். அதற்கு நான், 'இதனை நீங்கள் இங்குள்ள ஏற்பாட்டாளர்களிடமும் சொல்லி வையுங்கள்' என்றேன்.
சற்று நேரத்தில் தலைவர் ஹக்கீம் வந்தார். கூடவே அப்துர் றஹ்மானுக்கு தேசியப்பட்டியல் பதவியை வழங்குவதில் தேசிய தௌஹீத் ஜமாஅத்திடம் அதிருப்தி தெரிவித்த பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கும் வந்தார். அனைவரும் மிக மரியாதையுடன் அவர்களை வரவேற்றனர்.
நிகழ்வை ஆரம்பித்த ந.தே.மு. தலைமைத்துவ சபை உறுப்பினர் ஜவாஹிர் ஆசிரியர், 'தலைவரின் காத்தான்குடி வருகையானது, நேற்று நமதூரில் இடம்பெற்ற வன்முறைகளை நேரடியாகப் பார்வையிடும் நோக்கம் கொண்டது. அதனால் தலைவரின் நேர வரையறையைக் கருத்திற்கொண்டு தலைவர் இப்போது பேசுவார்' எனத் தெரிவித்தார்.
அதையடுத்து மு.கா. தலைவர் ஹக்கீம் அங்கு உரையாற்றினார். அவரது உரையுடன் நிகழ்வு முடிவுற்றது. ஆதரவாளர்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு 'றஹ்மான் சேருக்கு தேசியப்பட்டியல் எம.பி. கிடைக்குமா?' என்று ஆளாளுக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.
தலைமைத்துவ சபையினர் மு.கா. தலைவரையும், எமது தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு அதிருப்தி தெரிவித்து ஆப்பு வைத்த ஷிப்லி பாறூக் போன்றவர்களையும் மிக கண்ணியமாக அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டிப் பரிமாறலில் ஈடுபட்டனர். அங்கு என்ன பேசப்பட்டது என்பது எனக்குத் தெரியாது.