நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக இரா. சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.
அத்துடன் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கடிதத்தின் பிரதியொன்றும் சபாநாயகர் கரு ஜெயசுரியவுக்கும் அனுப்பிவைத்துள்ளதாக அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர் கட்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகளவு காணப்படுகின்றனர்.
இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, நாடாளுமன்ற சபாநாயகர் பதவி, பிரதமர் பதவி, ஆளும் கட்சியின் அமைப்பாளர் பதவி, எதிர் கட்சியின் அமைப்பாளர் பதவி ஆகிய அனைத்து பதவிகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வெற்றிக்காக ஒத்துழைத்த நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பெரும் அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எதிர் கட்சித் தலைவர் பதவிக்கு குமார வெல்கம நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்த போதும்,
எதிர் கட்சித் தலைவர் பதவிக்கு தாங்கள் யார் பெயரையும் தெரிவிக்கப்போவதில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் விஷ்வா வர்ணபால நாடாளுமன்றத்திற்கு தெரிவித்ததாகவும்
இதனாலேயே சபாநாயகர் கரு ஜெயசுரிய நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனை எதிர்கட்சி தலைவராக நியமித்தாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
