சுனாமி பேரழிவு நிகழ்ந்து இன்றுடன் பதினொரு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள போதிலும், மூதூரில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் சொந்த வீடின்றி, உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக மூதூர் பிரதேச செயலாளர் யூசுப் தெரிவித்தார்.
சுனாமி பேரழிவில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூறி நாடளாவிய ரீதியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், சுனாமி அனர்த்தம் நடைபெற்று பதினொரு வருடகாலம் ஆகியுள்ள நிலையிலும் இன்னமும் மூதூரில் 118 குடும்பங்கள் தங்களுக்கென்ற சொந்த வீடுகள் இல்லாது உறவினர் மற்றும் நண்பர்களது வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் இன்னமும் தரிசு நிலங்களாகவே காட்சி அளிக்கின்றது எனக் குறிப்பிட்டார்.
மேற்படி நிகழ்வில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் சுனாமி அனர்த்தத்தில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களில் தெரிவுசெய்யப்பட்ட சில குடும்பங்கள் அரசின் வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள், காசோலைகள் மற்றும் உதவிப்போருட்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் யூசுப், திருகோணமலை மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் விராஜ் திசாநாயக்க மற்றும் இராணுவ அதிகாரி கப்டன் பிறேமதிலக, கிராம சேவையாளர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
