அமான் - கிழக்கு மாகாண சபையின் எஞ்சியிருக்கின்ற இரண்டரை வருட ஆட்சியில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசினைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஒருவர் முதலமைச்சராக வந்திருப்பதும் அதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் வேறு சில தமிழ்த் தலைவர்களும் பலமான அதிருப்தியினை வெளியிட்டு வருவதனையும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிகின்றோம்.
கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரை பல்லின மக்களும் சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பிரதேசமாகும். அதனை சீர்குலைக்கும் முகமாக சகல இனவாத அரசியல்வாதிகளின் கடும்போக்கும் அதற்கு உரமிட்டு வளர்க்க கூடிய சில ஊடகங்களின் சதிவலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொணடு செல்கின்றமையினை அவதானிக்க கூடியதாக உள்ளது.
கிழக்கு மாகாண சபை ஆட்சி அதிகாரம் என்பது தமிழ் பேசும் அத்தனை மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமே தவிர அரசியல் கட்சிகள் தமது திறமைகளை நிரூபிக்கின்ற அல்லது பழி தீர்த்துக் கொள்கின்ற ஒரு களம் அல்ல. ஆனால் தற்போது அப்படியான துரதிஸ்டமான சம்பவங்கள்தான் இரு தரப்பிலும் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் பெரும் மனக் கசப்பிற்குள்ளாகுவது சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்ற பொது மக்களே என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ்த் தலைமைகளும் முஸ்லிம் தலைமைகளும் சில யதார்த்தங்களைப் புரிந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். தமிழ்த் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டிய சில யதார்த்தங்கள். இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்திற்கு முன் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக ஒரு முஸ்லிம்தான் ஆட்சியில் இருந்தார். SLMC க்கும் TNA க்கும் இடையில் காணப்பட்ட ஒப்பந்த பிரகாரம் தற்போதும் கிழக்கு மாகாண சபை ஆட்சி ஒரு முஸ்லிமிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த ஒப்பந்தத்தினை ஜன நாயக ரீதியில் ஒப்புக் கொண்டுதான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னும் பின்னும் சபை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தனவே தவிர ஆசன எண்ணிக்கைகளை அடிப்படையாக கொண்டு அல்ல. தற்போது மாத்திரம் ஆசன எண்ணிக்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த முதலமைச்சர் விவகாரத்தை பூதாகரமாக ஆக்கியிருப்பது ஜன நாயகத்திற்கு முரணான செயலாகவே தோன்றுகின்றது.
எது எப்படி இருந்த போதிலும் உங்களுக்கு மக்கள் தந்த ஆணையினை மதித்து செயல்பட வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கின்றது என்பதனையும் இங்கு மறுக்க முடியாது. இந்த இடத்தில்தான் தற்போதிருக்கும் முதலமைச்சருடன் சேர்ந்து மக்களுக்கான சேவையினை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதுதான் இரு இனங்களுக்குமிடையிலான பிணைப்பு அற்றுப் போகாமல் இருப்பதற்கு சிறந்த வழியாக அமையும். இது பற்றி தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் சிலர் தற்போது சிந்தித்து அமைச்சுப் பதவிகளினூடாக மக்களுக்கான சேவையினை ஆற்றுவதற்கு முன்வந்திருப்பதும் அதனை அக்கட்சியின் தலைமைகள் ஏற்றுக் கொண்டிருப்பதும் உண்மையில் வரவேற்கத்தக்க செயலாகும்.
இதற்கு மாறாக முதலமைச்சர் என்ற ஒரு மாங்கனிக்கு மாறி மாறி இரு சமுகமும் கல்லடிப்பதால் அதன் ருசியினை இருவருமே இழந்துவிட நேரிடலாம்..
இலங்கை அரசியல் வரலாற்றில் பல்வேறு விட்டுக் கொடுப்புக்களையும் சகிப்புத்தன்மையினையும் கொண்ட வரலாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு உள்ளது. எனவே, இந்த ஜனநாயக மரபுகளுக்கு முரணில்லாமல் கொடுக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினையும் பெருமனதோடு ஏற்றுக் கொண்டு இனங்களுக்கிடையிலான பரஸ்பரம் விட்டுக் கொடுப்பு சகிப்புத்தன்மையினை வளர்ப்பதில் நீங்கள் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்பது நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
முஸ்லிம் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டிய சில யதார்த்தங்கள். தற்போதைய முஸ்லிம் அரசியல் என்பது மக்கள் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஒரு விளையாட்டு மைதானத்தில் எதிரணியை வீழ்த்தி அதனை வெற்றிக் கொண்டாட்டமாக மாற்றுவதிலேதான் முனைப்புக் காட்டுகின்றது. இந்த போட்டி மனப்பாண்மை மாற்று இனக் கட்சிகளோடு மட்டுமல்லாமல் முஸ்லிம் கட்சிகளுக்குள்ளும் காணப்படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் ஒரே கட்சிக்குள்ளும் பிரதேசவாத அடிப்படையில் போட்டியும் பொறாமையும் நடந்தேறுவது முஸ்லிம் அரசியல் வரலாற்றிலேதான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இதற்கு சிறந்த உதாரணம் இவ்வளவு இழுபறிகளுக்கு மத்தியில் தமது கட்சிக்கு கிடைத்த முதலமைச்சர் பதவி கூட தனக்கு கிடைக்கவில்லை அல்லது தனது பிரதேசத்திற்கு கிடைக்கவில்லை என்று கட்சியின் தலைவருடைய உருவபொம்மை தொடண்டர்களாலேயே தென்கிழக்கில் எரிக்கபட்டது. அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பிரதேச மாகாண சபை உறுப்பினருக்கு கட்சியின் உறுப்புரிமை பறிக்கப்பட்டதும் மீண்டும் மன்னிப்புக் கோரி கட்சிக்குள் உள்வாங்கப்பட்டதும் இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய செயல்பாடுகளாகும்.
அது மட்டுமல்லாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாக அமைச்சுப் பதவிகளை பெற்றிருந்தும் கூட கட்சி உடைந்து விடக் கூடாது என்ற காரணத்தினால் அதனை தமிழ்த்தலைமைகள் லாவகமாக கையாளும் சாணக்கியத்தினையும், தன் இனத்தைச் சார்ந்த ஒருவர் முதலமைச்சராக வரட்டும் என்று கையெழுத்திட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஷிப்லி பாரூக் அவர்களுக்கு கட்சியின் தலைமைத்துவத்தினால் கொடுக்கப்பட்டிருக்கின்ற அழுத்தங்களையும் முஸ்லிம்கள் ஒரு கணம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
நிலமை இவ்வாறிருக்க கடந்த இரண்டரை வருட ஆட்சியில் 17வது திருத்தச் சட்ட மூலத்தினை ஆதரித்து சிறுபாண்மையினரின் மாகாண அதிகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க உதவிய முஸ்லிம் அரசியல் தலைமைகள் தற்போது முதலமைச்சுப் பதவியினை பெற்றிருப்பது 'அரசியல் சாணக்கியம்' என்று சொல்வதும் தமிழ்த் தலைவர்களுக்கு அந்த சாணக்கியம் இல்லை என்று சொல்வதும் மிக மிக வேடிக்கையான செயலாகும்.
உண்மையில் மக்களுக்கான சில பிரச்சினைகளை மக்களோடு மக்களாக நின்று தமிழ்த் தலைவர்கள் போராடி வருகின்றமையினால்தான் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் பெற்றுக் கொண்டிருக்க கூடிய அமைச்சுப் பதவி போன்ற சில பதவி நிலைகளை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். இதனை முஸ்லிம்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
யுத்த குற்றம், அரச படைகளால் நில ஆக்கிரமிப்பு, காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள், யுத்த கைதிகள் விடுதலை, புலம்பெயர்ந்தவர்கள் பிரச்சினை என அவர்கள் சார்ந்த பல பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகளான தமிழ்த் தலைவர்கள் மக்களுடன் நின்றுதான் கடந்த அரசாங்கத்திலும் சரி இந்த அரசாங்கத்திலும் சரி குரல் கொடுத்து வருகின்றார்கள். மாறாக முஸ்லிம் தலைமைகள் போன்று மக்கள் பிரச்சினைகளை கணக்கிலெடுக்காமல் பதவிகளை மாத்திரம் வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியும் அரசாங்கங்களுடன் பேரம் பேச ஆரம்பித்தால் சில முஸ்லிம் கட்சிகளுக்கு முகவரியே இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கின்றது.
ஆனால், இனிமேல் அவர்களையும் அப்படியான பதவிகளை வைத்து பேரம் பேசும் நிலைமைக்கு மக்களே அவர்களைத் தள்ளிவிடும் நிலைதான் தற்போது உருவாகி வருகின்றது. இதற்கு நமது முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தான்தோன்றித் தனமான சில நடவடிக்கைகளும் உரமூட்டுவதாய் அமைந்துள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் கிழக்கு மாகாண சபையினைப் பொறுத்தவரை தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரதானமாக பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகள் கூட்டிணைந்தே ஆட்சியமைக்க வேண்டும். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்த பிற்பாடு அப்படியொரு அர்த்த பூர்வமான சந்தர்ப்பத்தினை TNA ஏற்படுத்தி கொடுத்திருந்த போதிலும் அதனை SLMC உதாசீனப்படுத்தியிருந்தது.
இருந்த போதிலும் மீண்டும் இவ்விரு கட்சிகளின் கூட்டினால் ஏற்படுத்தப்படுகின்ற முதலமைச்சுப் பதவிதான் நியாயமானதாகவும் ஆக்க பூர்வமானதாகவும் நிலையானதாகவும் அனைத்து இன மக்களுக்கும் விசுவாசமானதாகவும் இருக்கும். எனவே, வீண் பிடிவாதங்களையும் வறட்டு கௌரவங்களையும் விட்டு மக்களின் அபிலாஸைகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வது அனைத்து கட்சிகளின் தலையாய கடமையாகும்.
-அமான்-

