Featured Home (TOP)

Recent Comments

Saturday, June 20, 2015

Unknown

நம்மைப் போல் ஒருவர் (யாவும் உண்மையான கற்பனை)


(I . L . M . றிபாஸ்)


காட்சி 1

இப்ராஹீம் நானா கடும் கோபமாக காணப்பட்டார்


இப்ராஹீம் நானா நல்ல மனிதன்,அடிப்படையில் இவர் ஒரு வியாபாரியாக இருந்தாலும் சமூக விடயங்களில் ஈடுபடுபவர், பல பொது நிறுவனங்களிலும்   பள்ளிவாயல்களிலும் நிருவாகத்தில் இருப்பவர் நீதி நேர்மை என்பதில் கண்டிப்பாக  இருப்பார் பிழை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பார்.



தம்பி புஹாரி இவன்ட விசயத்தில நீங்க பேச வர வேணாம் இன்னும் பேசினிங்க  எண்டா நம்முட உறவுக்கே பங்கமாப் போகும்" என எச்சரித்தார்.


“நானா நீங்க இவ்வளவு கோபமா இருக்கிறதுக்கு அப்படி என்னாதான்  பிழை செஞ்சிட்டான் இந்த உபைதுல்லா ? “ பவ்வியமாக கேட்டார் புகாரி நானா.

“தம்பி இவன் இருபது வருசத்துக்கு முன்னாடி எண்ட கடைக்கு வரக்க இவனுக்கு போட ஒழுங்கான  செருப்பும் கிடையாது, அப்படி வந்தவன எண்ட கடையில சேர்த்து படிப் படியா பதவியையும் கூட்டி இப்ப கேசியரா வெச்சிருக்கன். இவனுக்கு இப்ப ஐம்பதாயிரத்துக்கு மேல சம்பளமும் குடுக்கன் ஆனாத்தம்பி இவன் கட்டியிருக்கிற ஊடும் வாங்கிப் போட்டிருக்கிற சொத்தும் என்னவிடயும்  கூட, ஒர்ற வாகனத்தைப் பாருங்க? இவனுக்கு இருபத்து நாலு மணித்தியாலமும் எண்ட கடையிலதான் வேல வேற உம்மா வாப்பட சொத்தோ பொண்டாட்டியால வந்த சொத்தோ ஒண்டும் கிடையாது எப்பிடித்தம்பி இதல்லாம்? எங்கேயோ உதைக்கிதுல்ல.”

தனது நியாயமான சந்தேகத்தை வெளிப்படுத்தினார்

“ஏன் நானா உங்கட கடைய அழகாத்தான வெச்சிருக்காரு நல்லத்தான எலாருக்கிட்டேயும் நடந்துக்கிராறு?”


“அதெல்லாம் பம்மாத்து தம்பி கட பாக்க வடிவாத்தான் இருக்கு கணக்கு வழக்க பாக்கக்கதான் இவன் வந்த காலத்துக்கு பெரிசா எந்த முன்னேத்தமும் இல்ல என்கிறது விழங்குது.”


“அது சரி நானா! இவ்வளவு  காலம் இருந்தவரு இப்ப போய் அவருக்கு தண்டன குடுக்கோணும் எண்டு நிக்கிறது சரியா? அது மட்டும் இல்லாம கோட்டுல கேஸ் போட்டு விசாரிக்கச் சொல்லுறது அவ்வளவு நல்லா  இல்ல”.

“என்ன  புகாரி சொல்லுற நீ?”

“நம்மளப் படைச்ச கருண உள்ள அல்லவே பிழை செஞ்சா இம்மயிலையும் மருமையிலயும் தண்டிக்கிறான், பிழை செஞ்சிருக்கான் எண்டு தெளிவா தெரியுது அதுக்கு ஆதாரமும் இருக்கு அவனுக்கு போய் பரிஞ்சு பேசிறியே உனக்கு வெக்கமா இல்லையா? இனிமே  இது பற்றி எனக்கிட்ட பேச வராத வந்தா உண்ட மரியாதையும் கெட்டுப் போயிடும்”
. பொரிந்து தள்ளினார் இப்ராஹீம் நானா  

“கண்ணுக்கு முன்னால இவன் செஞ்சிருக்கிற தப்பெல்லாம் தெரியுது இவன திருப்பி திருப்பி மன்னிக்கச் சொன்னா அப்பிடி மன்னிச்சா என்னப்போல முட்டாள் கிடையாது, தம்பி ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் எண்டாலும் யோசிக்கணும் அப்படி யோசிக்காட்டி தலைக்குள்ள  மூளை இருக்கிறதுக்கே அர்த்தம் இல்லாமப் போயிடும் சரியா? உங்கட வேலையப் பாருங்க தம்பி!”
சொல்லிவிட்டு புறப்பட்டார்.

காட்சி 2

“முதல் சீட்டு உங்களுக்குத் தானே தம்பி உழுந்த நீங்க திருப்பி கட்ட மாட்டன் எண்டு சொன்னா எப்பிடித்தம்பி  காசு கட்டின சனத்துக்கு என்ன பதில் சொல்லுறது? பாருங்க தம்பி காசக் குடுத்த ஏழைச்  சனம் எண்ட பின்னாடி உங்கட ஊட்டு வாசல்ல கால் கடுக்க நிண்டுக்கிட்டு இருக்கு!

புலம்பினாள் ஆயிசா தாத்தா

“அதெல்லாம் எனக்குத் தெரியாது சீட்டுக் காச நீங்க எனக்கிட்ட குடுத்தையா சீட்டுக்  கட்டினவனுக்கிட்ட போய்ப் பாருங்க”
விரட்டினான் சைபுல்லாஹ்


“பள்ளித் தலைவர் இப்ராஹீம் நானாக்கிட்ட  போய்க் கேப்பம் வாங்க”
என பல கனவுகளோடு  சீட்டுக்கட்டி ஏமாந்து போன சனங்களை அழைத்துக் கொண்டு இப்ராஹீம் நானாவிடம் நியாயம் கேட்க புறப்பட்டனர் அப்பாவி சனங்கள்.

“நீதி எண்டா நீதிதான் இது என்ன  பச்ச அநியாயம் இதுக்கு சரியான நடவடிக்கை எடுக்க வேணும்”


உறுதியாக கூறினார் இப்ராஹீம் நானா

“இதுக்கு எப்படி நடவடிக்கை எடுக்கிறது எண்டு பாருங்க இல்லாட்டி போலிசுக்கு போவம்”

என ஏமாந்த சனங்களுக்கு ஆறுதல் கூறினார்.


காட்சி 3
“வெளிநாட்டுல இருந்து வந்த சக்காத்து காசில கட்டின வீடுதான இது எங்கிட கஷ்டத்தப் பாத்து தான அவங்க தந்தாங்க உங்களுக்கிட்ட காசத் தந்து கட்டச் சொன்னதுக்காக வீட்டக் கட்டிப் போட்டு இப்படி எங்கள அடிச்சு விரசிப்போட்டு வீட்டப் பறிச்சு  எடுக்கிறிங்களே இது ஆகுமா?” 

என புலம்பினால் பரீதா.


“இந்தக் கதையெல்லாம் செரிவராது ஊட்ட விட்டு இப்ப எழும்போணும் இல்லாட்டி பொலிசுக்கு போக வேண்டி வரும்”

வீட்டில்  இருந்த பொருட்களை வீதியில் வீசியவாறு விரட்டினான் ரூஹுல்லா

இந்த செய்தியை கேட்ட இப்ராஹீம் நானா கொதித்துப் போனார்

“இதுக்கு சரியான பாடம் கத்துக் குடுக்கோணும் என்ன அநியாயம் இது”
என  கைகளைப் பிசைந்தார்.
“பள்ளித் தலைவர் எண்ட வகையில் என்னால முடிஞ்சத கட்டாயம் செய்வன்”
என்று  பரீதாவுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

காட்சி 4
தம்பி நாலு குமார் பிள்ளைகளை வெச்சிக்கிட்டு கஷ்டப்படுறோம் இதுக்குள்ள என்கிட காணியில எங்களுக்கு உரிமை இல்ல எண்டு செல்லுரீன்களே இது என்ன அநியாயம் தம்பி ?" 

என்று வயிற்றிலும் வாயிலும் அடித்தவாறு பதறினாள் ஆமினா



"அந்தக் கதையெல்லாம் சரிவராது உனக்கென்ன  காணிப் பிரச்சினை ஒண்ட பிள்ளைகள எங்கயாவது கொண்டுபோ இல்லாட்டி நஞ்சக் குடிச்சிட்டு சாகு, எண்ட பொஸ்ஸுக்கு நான் நல்ல புள்ளயா நடக்கோணும் ஒண்ட கத ஒண்டும் சரிவராது வாய மூடிக்கிட்டு கிட "
என ஆமினாவை அதட்டினான் இனாமுல்லாஹ்.


இவளுக்கு  இருக்கிற அறிவுக்கு இவள் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டாள் என்பதும் அவர்கள் கொடுக்கும் சின்ன சின்ன நிவாரணங்களுக்காக கையேந்தி நிற்பதுடன் தன்னை பெரிதாக புகழ்பவர்கள் என்பதும் அவனுக்கு தெரியும்.


அவளும் அழுது புலம்பி விட்டு அடங்கிப்போனாள் அவன்  சொன்ன  புளுகிற்கும்  பொய்களுக்கும் மயங்கி தனக்கு காணிப் பிரச்சினை இருப்பதையே மறந்து போனாள்.



இந்த செய்தியை கேள்விப்பட்ட இப்ராஹீம் நானாவிற்கு ஆத்திரம் அடங்கவில்லை

இதென்ன அநியாயம் இருக்கிற அந்த சின்ன காணிக்க அவஸ்தைப்  பட்டுக்கிட்டு நெருக்குவாரப் பட்டுக்கிட்டு கிடக்கிற அந்த பாமரச் சனத்த இப்பிடியா ஏமாத்துறது, கக்கூசி பாக்குக்கு பக்கத்தில கிணத்தக் கட்டிக்கிட்டு நஜீசான தண்ணிய குடிச்சிக்கிட்டு கிடக்கிற சனத்துக்கு உரிமையான காணியையே தேவை இல்லையெண்டு சொன்னா இது பச்ச துரோகம் இல்லையா? இதுக்கு சரியான நடவடிக்க எடுக்க வேணும்"

உறுதிப் படக் கூறினார் இப்ராஹீம் நானா. இப்படி ஊரின் பல பிரச்சினைகளில் தலையிட்டு ஒவ்வென்றுக்கும் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் தண்டனை வாங்கிக் கொடுப்பதிலும் உறுதியாக இருந்தார்.

“வாப்பா உங்களுக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேல மத்தவங்கட பிரச்சினைக்கு தீர்வு காணப் போய் வீணான பிரச்சினைகளை அள்ளிப் போட்டுக்கிறீங்க?"
கேட்டான் அவரது மகன் அக்ரம்.


“தம்பி மனிசனாப் புரந்தா கொஞ்சம் சூடு சொறன இருக்க வேணும் மத்தவண்ட பிரச்சனை எண்டு பாத்துக்கிட்டு இருந்தா அந்த பிரச்சினை நம்மிட வீட்டுக் கதவையும்  தட்டும், நீதிக்கு குரல் கொடுக்கிறது மார்க்கக் கடமை எண்டு உனக்கு தெரியாதா?

என்று மகனிடம் கேள்வியை தொடுத்தார்.


“அது சரி வாப்பா மனிசன் ஒரு தரம் ரெண்டு தரம் செய்ற தவறுக்காக தண்டிக்க வேணுமா மன்னிச்சு உடலாம்தனே”

அக்ரம் வினவினான்


“என்ன தம்பி மடத்தனமா கதைக்கிற ஒருத்தன் பிழை செய்துட்டு மன்னிப்புக் கேட்டுக்கிட்டே இருப்பான் அவன மன்னிச்சு அவனுக்கு அதிகாரத்தையும் கொடுத்தா நம்முள மாதிரி முட்டாள் யாரு இருக்கப் போறான். தம்பி நல்லா யோசிச்சுப் பாரு ஒருத்தன் ஒருமுற திருடிட்டு இல்லாட்டி கொலை செஞ்சுபோட்டு இல்லாட்டி மோசடி செஞ்சுபோட்டு இந்த முறை என்ன மன்னிச்சுக்கங்க அடுத்த முறை செய்ய மாட்டன் எண்டு சொன்னா எந்த நீதிமன்றம் மன்னிச்சு விடும் இல்லாட்டி நம்முட மார்கத்தில மன்னிப்புக் கேட்டா தண்டனை குடுக்காம விட்டுடுங்க எண்டு சொல்லி இருக்கா? தம்பி நல்லாப் புரிஞ்சுக்க மன்னிக்கிறதுதான் மனிசன் அந்தத் தப்ப மீண்டும் செய்றதுக்கு குடுக்கிற அனுமதி சரியா? நம்முட நபி சொன்னாங்களே தன்ட மகள் பாத்திமா திருடினாலும் கையை துண்டிப்பேன் எண்டு மறந்து பெயித்தியா?” 


தெளிவாக விளக்கினார் இப்ராஹீம் நானா


அநீதி இளைத்த அனைவருக்கும் தண்டனை வாங்கிக் கொடுப்பதில் உறுதியாக இருந்தார்  உபைதுல்லாஹ், சைபுல்லாஹ், ரூஹுல்லாஹ், இனாமுல்லாஹ் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்பது நிச்சயமாகிய போது சகலரிடமும் கூறி பெருமைப் பட்டுக் கொண்டார்.

அன்று பள்ளிவாயல் வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பியவரை வரவேற்றவாறு

“உங்களுக்கு நம்மிட மினிஸ்டருக்கிட்ட இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கு உங்கள கட்டாயமா வரட்டாம் என்று சொல்லிட்டுப் போனாங்க” என்று சொன்னாள் அவரது மனைவி சீனத்.

“அப்பிடியா எத்தன மணிக்காம்?”

என்று கேட்டவர் சரியாக குறிப்பிட்ட நேரத்திற்கு அமைச்சரின் அலுவலகத்திற்கு ஆஜரானார்.

அமைச்சரின் அலுவலகம் மிக சன நெரிசலாக காணப்பட்டது இப்ராஹீம் நாணாவைக் கண்ட அமைச்சர் வாங்க இப்ராஹீம் நானா என்றுவிட்டு மற்ற ஒருவருடன் தனது கவனத்தை திருப்பினார். அந்த அலுவலகத்தில் அவர் அமர்வதற்கு ஒரு கதிரை கூட  கிடைக்கவில்லை, நெருக்குப் பட்டவராகவே அங்கு நின்று கொண்டிருந்தார்.


அமைச்சர் தனது திட்டங்கள் பற்றியும் அவருக்கு வர இருக்கின்ற பல கோடி நிதி பற்றியும் கூறிக் கொண்டிருந்தார் ஒவ்வருவருக்கும் ஒரு கொந்தராத்தும்  வேலைகளும் தருவதாக உறுதி அளித்தார். வரும் தேர்தலை  எப்படியாவது தான் வெல்லவேண்டும் அதற்காக எந்த முறையை கையாண்டாலும் பரவாயில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்தார்.

“இப்ராஹீம் நானா நீங்கதான் நம்முட ஊருல போடாம இருக்கிற வோட்டை எல்லாம் கலக்ட் பண்ணோணும் அதுபோல அந்த வோட்டெல்லாம் போர்றதுக்கான ஏற்பாட்டையும் கோடினேட் பண்ண வேணும். இதுக்கு எலக்சன் அதிகாரிகள கைக்குள்ள போடுறதுக்கு அவங்களுக்கு
தேவையான

 சரக்கு சாமான்களையும் ரெடி பண்ணோணும் சரியா?” என்று கட்டளையிட்டார்.


ஏனையவர்களுக்கும் தேர்தலில் செயற்படும் விதம் பற்றியும் எதிர் தரப்பினரை என்ன குறுக்கு வழியிலாவது தோற்கடிக்க வேண்டும்  என்பது பற்றி விளக்கமாக கூறிக் கொண்டிருந்தார்.


இப்ராஹீம் நானாவிட்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை சிலையாக நின்றிருந்தார்.


அவரது கண்முன்னால் மகனுக்கு சொன்ன உபதேசங்கள் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தன. அவர் தண்டனை வாங்க்கிக் கொடுக்க  துடித்துக்   கொண்டிருந்த  உபைதுல்லாஹ், சைபுல்லாஹ், ரூஹுல்லாஹ், இனாமுல்லாஹ் ஆகியோர் எள்ளிநகையாடுவதும் ஊருக்குத்தானடி உபதேசம் என்று எக்காளமிடுவதும் அவரது காதுகளில் ஒழித்துக் கொண்டிருந்தது. இதன் பின்னரும் இந்த அநியாயங்களுக்கு துணை போனால் தான் ஊரில் பொதுமக்களுக்கு சொல்லும் நியாயத்திற்கும் செலுத்த நினைக்கும் நீதிக்கும் அர்த்தம் அற்று போனாதாக உணர்ந்தார்.

அவரது கால்கள் நேர்மையை நோக்கி நடைபோட்டது



Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :