இலங்கையர் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை இந்திய நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க அமைச்சர் ரவி கருணாநாயக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய அடையாள அட்டைகள் வழங்குதலுக்குப் பொறுப்பான தேசிய ஆட்பதிவுத்திணைக்களம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. எனினும் இந்த திணைக்களத்தின் ஊடாக டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் செயற்பாட்டில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ச்சியாக தலையிட்டு வருகின்றார்.
கடந்த நூறு நாள் அரசாஙகத்தின் பதவிக்காலத்தில் ரவி கருணாநாயக்க இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றையும் சமர்ப்பிக்க முயற்சித்துள்ளார். எனினும் அன்றைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்தே கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக ரவியின் முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
தற்போது இவ்விவகாரத்துக்குப்பொறுப்பாக அமைச்சர் எஸ்.பி. நாவின்ன செயற்படுகின்றார்.
எனினும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை குறித்து பிரஸ்தாபித்தது மாத்திரமன்றி, எதிர்வரும் ஜனவரி தொடக்கம் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார்.
இந்திய நிறுவனம் ஒன்றிடம் இந்தப் பணிகளை ஒப்படைத்து, அதன் மூலம் சிற்சில வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்காகவே அவர் இவ்வாறு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
