மழைக்காலத் தொடக்கத்திலும் பனிப்பொழிவுக் காலத்திலும் பருவநிலை மாறுவதால், மாசடைந்த காற்றிலும், நிலம் மற்றும் நீரிலும் உறக்க நிலையில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் வீரியம் பெற்று மக்களைத் தாக்கப் புறப்படுகின்றன. இதன் விளைவால், ஃபுளு காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்கள் வேகமாகப் பரவுகின்றன.
டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தற்போது அதிக இடங்களில் பரவி, அடுத்தடுத்து பல்லாயிரக்கணக்கான பேரை பலி வாங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளை இது அதிகமாக தாக்குகிறது என்பதால் உயிர்ப்பலிகளைத் தடுக்க முடியாமல் தமிழகத்தின் சுகாதாரத்துறை திணறுகிறது. இந்தக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு இயந்திரம் மட்டுமே போதாது. மக்களுக்கும் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போதுதான் நம்மால் டெங்குவை ஜெயிக்க முடியும்.
எது டெங்கு?
‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் வருகிறது டெங்கு காய்ச்சல். இந்தக் கிருமிகளில் மொத்தம் நான்கு வகை. ஏதேனும் ஒரு வகை நம்மைத் தாக்கினாலும் டெங்கு காய்ச்சல் வந்துவிடும். இப்போது பரவும் டெங்கு காய்ச்சல் 1வது, 3வது வகையைச் சேர்ந்தது. இது தண்ணீர், காற்று, இருமல், தும்மல் போன்றவற்றால் பரவுவதில்லை. கொசுவால் மட்டுமே பரவுகிறது.
‘ஏடஸ் எஜிப்தி’ (Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது, டெங்கு வருகிறது. பொதுவாக, கொசுக்கள் சாக்கடை, அசுத்தமான நீர்நிலைகள், நீண்டகாலம் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் வாழ்வது வழக்கம். ஆனால், டெங்கு கொசுக்களோ சுத்தமான நீர்நிலைகளில் மட்டுமே வளரக்கூடியவை. மற்ற கொசுக்கள் பெரும்பாலும் இரவில்தானே கடிக்கும்? ஆனால், டெங்கு கொசுக்களோ பகலில்தான் கடிக்கும். அதுவும் பெண் கொசுதான் கடிக்கும். காரணம், அது முட்டையிடுவதற்கு நம் ரத்தத்தில் உள்ள புரதம் தேவைப்படுகிறது.
அறிகுறிகள் கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடும். குழந்தைகள், பெரியவர்கள் என வயது வேறுபாடின்றி அனைவரையும் இந்த நோய் தாக்கக்கூடியது. பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் டெங்கு காய்ச்சல் அவர்களை அவ்வளவாக பாதிப்பதில்லை. இந்தக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே.
நோயின் ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண் வலி, வாந்தி, களைப்பு, இருமல் ஆகிய மிதமான அறிகுறிகள் மட்டுமே காணப்படும். நான்காம் நாளில் காய்ச்சல் கடுமையாகும். மூட்டுவலி அதிகமாகும். எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. அடுத்து உடலில் அரிப்பு இருப்பதோடு, சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். டெங்கு வைரஸ் ரத்தக்குழாய்களை பாதிப்பதால், அவற்றில் துளை விழுந்து ரத்தத்தைக் கசியவிடும். இதன்விளைவால் ஏற்படும் சிவப்புப் புள்ளிகளே இவை.
ஆபத்து எப்போது?
பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சி நிலை (Dengue Shock Syndrome) உருவாகும். இவர்கள்தான் ஆபத்து மிகுந்தவர்கள். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்க சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.
டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்பு மூட்டுகள் ஆகியவற்றில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிரிழப்பு ஏற்படுவதுண்டு.
என்னென்ன பரிசோதனைகள்?
இந்த நோயைத் தொடக்கத்திலேயே சரியாகக் கணிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆரம்பக்கட்ட அறிகுறிகள் வைரஸ் நோய்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால் உடனே நோயை உறுதி செய்ய இயலாது. டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM), எலிசா (Elisa), பி.சி.ஆர். (PCR) ஆகிய பரிசோதனைகளில் டெங்கு பாதிப்பு உள்ளது தெரிய வரும்.
இந்தப் பரிசோதனைகளைச் செய்வதற்கு வசதி இல்லாத ஊர்களில் குழந்தையின் ரத்தத்தில் தட்டணுக்களின் அளவைத் தெரிந்து கொண்டு இந்த நோயை மறைமுகமாகக் கண்டுபிடிக்க முடியும். பொதுவாக ஒருவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு இது 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம்.
பயம் வேண்டாம்!
டெங்கு ஓர் உயிர்க்கொல்லி அல்ல. நூறில் 96 பேருக்கு நோய் சரியாகிவிடும். 4 பேருக்கு மட்டுமே ஆபத்து நெருங்கும். சரியான நேரத்தில், சரியான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஆகவே, டெங்குவுக்கு பயப்படத் தேவையில்லை.
என்ன சிகிச்சை?
டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் குறைக்கவும் உடல் வலியைப் போக்கவும் மட்டுமே மருந்துகள் தரப்படும். வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுக்கலாம் உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; உப்பும் சர்க்கரையும் கலந்த கரைசல், பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
இந்தச் சிகிச்சையில் பெரும்பாலோருக்கு நோய் கட்டுப்பட்டுவிடும். சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் ஏற்றப்பட வேண்டும். இன்னும் சிலருக்கு தட்டணுக்கள் மோசமாக குறைந்துவிடும். அதை ஈடுகட்ட தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்த வேண்டும். இதற்கு உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற வேண்டும்.
தேவை தட்டணுக்கள்
நம் நாட்டில் தட்டணுக்கள் தாராளமாகக் கிடைப்பதில்லை. ஒரு பாட்டில் ரத்தத்தைத் தானமாகப் பெற்றால் அதிலிருந்து கிடைக்கும் தட்டணுக்கள் ஒரு யூனிட் என்று அழைக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ள குழந்தைக்குக் குறைந்தது ஆறு யூனிட் தட்டணுக்கள் தேவை. இதற்கு ஆறு பாட்டில் ரத்தம் தேவைப்படும். இந்த அளவுக்கு ரத்தம் கிடைப்பது என்பது மிகவும் கடினம். பொதுமக்களிடம் ரத்த தானத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பெருகினால் மட்டுமே இந்தத் தேவையை முழுமையாக நிறைவுசெய்து, டெங்கு காய்ச்சலின் பிடியிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.
டெங்குவைத் தடுக்க என்ன வழி?
டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்குத் தடுப்பூசி இல்லை. கொசுக்களை ஒழிப்பது ஒன்றே தலையாய வழி. கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச் சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவர்த்தி, கொசு விரட்டி, கொசு ஸ்பிரே போன்றவையும் பலன் கொடுக்கும். கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசிக்கொள்ளலாம். கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம்.
வீட்டைச்சுற்றி சாக்கடை மட்டுமல்ல, சாதாரண தண்ணீர்கூட தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தெருக்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டுச்சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ அல்லது ‘மாலத்தியான்’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும் தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டா மெத்ரின்’ (Deltamethrin) மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும். தேங்கிய நீர்நிலைகள் அனைத்திலும் இந்தக் கொசு மருந்தை அடிக்க வேண்டியது முக்கியம். மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில் 1,000 கன அடி இடத்துக்கு 4 அவுன்ஸ் ‘கிரிசாலை’ புகைக்க கொசுக்கள் இறக்கும். குடிநீர்த் தொட்டிகளில் ‘டெமிபாஸ்’ (Temephos) மருந்தைத் தெளிக்க வேண்டும்.
கொசுக்கள் வாழும் இடங்களான மேல்நிலைத் தொட்டிகளையும் கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடி வைக்க வேண்டும். தண்ணீரை மூடி உள்ள பாத்திரங்களில் ஊற்றிவைப்பது பாதுகாப்பானது. குப்பைத்தொட்டிகள், தேங்காய் மூடிகள் ஆகியவற்றில் கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பாழடைந்த கிணறுகள் இருந்தால் மூடிவிட வேண்டும். வீட்டிலுள்ள தண்ணீர்த் தொட்டி களை அடிக்கடி சுத்தம் செய்து, குறைந்தது இரண்டு மணி நேரம் காயவைக்க வேண்டும். சிமென்ட் தொட்டிகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர், ஏர்கண்டிசனர் ஆகியவற்றில் உள்ள தண்ணீரையும் இவ்வாறே சுத்தப்படுத்த வேண்டும்.
தண்ணீர்த் தொட்டிகள், குடிநீர் மேல் நிலைத் தொட்டிகள், குளியலறைத் தொட்டிகள், பால்கனி, ஜன்னல்களின் ‘சன்ஷேடு’கள், ஏர்கூலர், பூந்தொட்டிகள், அழகுஜாடிகள், உடைந்த ஓடுகள், தகர டப்பாக்கள், தேங்காய் ஓடுகள், டயர்கள், பிளாஸ்டிக் வாளிகள், கப்புகள், பேப்பர் தம்ளர்கள், ஆட்டு உரல் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேல்நாடுகளில் கொசுத்தொல்லை ஏன் இல்லை?
டெங்கு போன்ற தொற்று நோய்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்ட மேலை நாடுகளில் இல்லவே இல்லை. தொற்றுநோய்களை அங்கு நிரந்தரமாக ஒழித்துவிட்டார்கள். அவர்களுக்கு மட்டும் எப்படி அது சாத்தியமாயிற்று? நம் நாட்டுச் சுகாதாரத் திட்டங்கள் பெரும்பாலும் தற்காலிக நிவாரணங்களை அடிப்படையாகக் கொண்டவை. மேல்நாட்டுத் திட்டங்களோ எதிர்காலத்துக்கும் பயன்படும் வகையில் தொலைநோக்குப் பார்வை கொண்டவை. ஒரு நோய்க்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேல்நாட்டினர் மேற்கொள்ளும்போது, எக்காலத்திலும் அந்த நோய் அங்கு வராமல் தடுக்கும் நிரந்தரத் திட்டங்களைப் பரிசீலித்து மேற்கொள்கிறார்கள்.
அதனால்தான் அவர்கள் தொற்றுநோய் ஒழிப்பில் முழுவெற்றி பெறுகிறார்கள். உதாரணத்துக்கு, இந்தியா வில் கொசுக்கள் வளர இடம் கொடுத்து விட்டு, அதை ஒழிப்பதற்கு மருந்து தெளித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை, பிற நீர்நிலைகளில் ‘கம்பூசியா அஃபினிஸ்’ (Gambusia affinis) எனும் மீன்களை வளர்க்கிறார்கள். இவை கொசுக்களின் லார்வாக்களைத் தின்றுவிடும். இதனால் கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும். கொசுக்களை வேரோடு ஒழிக்கும் தொழில்நுட்பம் இது.
அடுத்து, வீடு, அலுவலகம், ஆலைகள், உணவு விடுதிகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர்தான் பல சுகாதாரக் கேடுகளுக்குக் காரணம் என்பதை அறிந்து, அக்கழிவுநீரை சுற்றுச்சூழல் பாதிப்பின்றி வெளியேற்றுவதற்கும், அதை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கும் முறையான அமைப்புகளை வைத்துள்ளார்கள். திறந்தவெளிச் சாக்கடைக்கு அங்கு அனுமதி இல்லை. பதிலாக, பாதாளச் சாக்கடை அமைப்பதை எல்லா ஊர்களிலும் அது கிராமமாக இருந்தாலும் சரி, நகர்ப்புறமாக இருந்தாலும் சரி கட்டாய மாக்குகிறார்கள்.
மேலைநாடுகளில் தெருக்களில் குப்பையைக் காண்பது குதிரைக்கொம்பு. ஆனால், இந்தியாவில் குப்பை இல்லாத தெருவைக் காண்பித்தால் கோடிப் பணம் தருகிறேன் என்று சவால் விடலாம். பாதாளச் சாக்கடைகளோ மிகக் குறைவு. எங்கும் திறந்தவெளிச் சாக்கடைகளே உள்ளன. அதிலும் தெருச் சாக்கடை மற்றும் வாறுகால்களில் குப்பை அடைத்துக் கொள்வதால், கழிவுநீர் தேங்கி கொசுக்களின் உற்பத்தி இடங்களாக அவை மாறிவிடுகின்றன. மழைக்காலங்களில் இந்தப் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து சாக்கடைகள் எல்லாமே கொசுக்களின் கூடாரமாக மாறிவிடுகின்றன.
கிராமங்களில் கழிவுநீர் கண்மாய்களில் கலப்பதால், அங்கும் கொசுத் தொந்தரவு அதிகரிக்கிறது. பெரும்பாலான கிராம மக்கள் காலைக் கடன்களை முடிப்பதற்குக் கண்மாய்க் கரைக்குத்தான் போவார்கள். அப்போது கொசுக்கடி தொந்தரவால் டெங்குவை பெற்றுக்கொள்கின்றனர். கிராமங்களிலும் சரி, நகர்ப்புறச் சேரிகளிலும் சரி, குடிதண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும் போதெல்லாம் சிமென்ட் தொட்டிகளில் தண்ணீர் சேமித்துக் கொள்வது வழக்கம். அப்போது அந்தத் தொட்டிகளைச் சரியாக மூடிவைப்பதில்லை. இப்படி மூடப்படாத தண்ணீர் தொட்டிகளில் டெங்கு கொசுக்கள் சுகமாக வாழும்.
டெங்கு காய்ச்சலை நிரந்தரமாக ஒழிக்க வேண்டுமானால், கொசுக்கள் வாழும் இந்த இடங்களை எல்லாம் முதலில் சரி செய்ய வேண்டும். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்துமே பாதாளச் சாக்கடை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள திறந்தவெளிச் சாக்கடைகளை பாதாளச் சாக்கடைகளாக மாற்றுவதற்கும், புதிதாகத் தோன்றும் குடியிருப்புகளுக்கு முதலிலேயே பாதாளச் சாக்கடை அமைப்பதைக் கட்டாயமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த ஆபத்து தெருவோர, சாலையோரத் திறந்தவெளிக் கழிப்பிடங்கள். எப்படி தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதித்தனரோ, அப்படி தெருக்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும். இதற்கு மாற்று ஏற்பாடாக, ஒவ்வொரு தெருவிலும் தேவையான தண்ணீர் வசதியுடன் இலவசக் கழிப்பறை வசதி செய்து தரவேண்டும். இந்த இரண்டையும் சரியாகச் செய்துவிட்டால் போதும், 90 சதவிகிதம் கொசுக்களை ஒழித்துவிடலாம்.
திட, திரவக் கழிவுகள் குவிந்துகிடக்கும் சாலையோரங்களும் தெருக்களும்தான் அடுத்த இலக்கு. வீட்டுக்கழிவுகள் மற்றும் பணியிடக் கழிவுகளை அகற்றுவதிலும் பொதுமக்களிடம் போதிய பொறுப்புணர்ச்சி இல்லை. குப்பைகளையும் பிற கழிவுகளையும் தெருவில் வீசாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியாகப் பிரித்துப் பைகளில் போட்டால், குப்பை சேகரிப்பவர்களுக்கும் வசதியாக இருக்கும். தெருவும் சுத்தமாக இருக்கும். இதன் மூலம் கொசுக்கள் வாழ இடமில்லாமல் போகும். டெங்குவின் பாதிப்பி லிருந்து நம்மை மீட்க வேண்டியது அரசின் கடமைதான் என்றாலும், எல்லாவற்றுக்கும் அரசை எதிர்பார்க்காமல், நாம்தான் அக்கறையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட்டு, சுற்றுப்புறச் சுகாதாரத்தை பேணிக்காத்து, நம் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
