(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)
கடந்த 2015ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தில் அமர்ந்த போதே அவரது ஆட்சி எவ்வாறு அமையும் என்பதைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை எங்களிடம் இருந்தது. அதன் காரணமாகவே 2006ம் ஆண்டில் நாம் இந்த மண்ணில் 'நல்லாட்சி' எனும் அரசியல் சித்தாந்தத்தை முன்வைத்து சமூக அரசியற்களத்தில் பிரவேசித்தோம். எமது நல்லாட்சி அரசியல் சித்தாந்தம் பத்து வருடங்களுக்குள்ளாக இந்த நாட்டின் பழமை வாய்ந்த தேசிய பெரும்பான்மை அரசியற் கட்சிகளாலும், தமிழ் மக்களின் கட்சிகளாலும், மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மகிந்த ராஜபக்ஷவையும் அவரது கூட்டத்தாரையும் தேசிய அரசியலில் இருந்து ஓரங்கட்டச் செய்துள்ளது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் நடைபெற்ற ஸ்ரீ.ல.மு.கா – ந.தே.மு அரசியற் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அவ்வாறு குறிப்பிட்ட அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி அங்கு மேலும் தெரிவித்ததாவது:
இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கும், ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்கும் அனுகூலமாக இருந்து வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா அம்மையாரின் ஆட்சியைத் தொடர்ந்து 2005ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரத்தைப் பெற்று ஆட்சியில் அமர்ந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், 2008ம் ஆண்டு இந்த நாட்டில் இடம்பெற்று வந்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த கையோடு, அந்த வெற்றி அலையோடு இரண்டாவது தவணைக்கான ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி மீண்டும் ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
ஆனால் முதலாவது தவணைக் காலத்தில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அவர், இரண்டாவது தவணைக் காலத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ், மலையகச் சிறுபான்மை மக்களை சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிபணிந்தவர்களாக இருக்கச் செய்வதின் மூலம் பெரும்பான்மை மக்களின் பாதுகாவலராகவும், இந்த நாட்டின் மன்னராகவும் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு ஒரு சர்வாதிகாரத்தனமான மன்னராட்சியை நிறுவ முயன்றார்.
இந்த சர்வாதிகார அடக்குமுறை ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டு அவரது கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இந்த நாட்டின் தேசிய வளங்களைக் கொள்ளையிடுவதிலும், அபிவிருத்திப் பணிகளில் கொமிஷன்கள் பெற்று குபேரார்களாகுவதிலும் குறியாக இருந்து செயற்பட்டனர்.
இந்த நிலையில்தான் நாம் 2006ம் ஆண்டில் இந்தக் காத்தான்குடியில் முன்வைத்த அராஜக ஆட்சி முறைக்கு எதிரான நல்லாட்சிக் கோஷத்தை நாடு முழுவதிலுமுள்ள பொதுமக்களும், புத்திஜீவிகளும், மகிந்த கும்பலிடமிருந்து இந்த நாட்டை மீட்க வேண்டுமென்ற அவாக்கொண்டு அதற்கான வழிமுறைகளைச் சந்தித்த அரசியல்வாதிகளும் செவியேற்றுத் திரும்பிப் பார்த்தனர்.
காத்தான்குடி நகர சபையில் 2006ம் ஆண்டு 3223 வாக்குகளைப் பெற்று ஒரு உறுப்பினரோடு சமூக அரசியற்களத்திற்கு வந்த நாம், 2011ம் ஆண்டு நடைபெற்ற நகர சபைத் தேர்தலில் 110 மடங்கு ஆதரவுத்தளத்தைப் பெற்று இரண்டு உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டதானது இலங்கையின் தமிழ் முஸ்லிம் சிங்கள அரசியல் தலைவர்களின் பார்வையையும், சிந்தனையையும் நல்லாட்சிக் கோஷத்தின் பக்கமும், கொள்கையின் பக்கமும் திருப்பியது.
இதன் விளைவாக நாம் இந்த நாட்டின் தேசிய அரசியல் தலைவர்களுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளையும், ஒப்பந்தங்களையும் செய்து கொண்டு நாட்டின் நலன்களையும், நாட்டு மக்களின் நலன்களையும், சமூகங்களுக்கிடையிலான இன ஐக்கியத்தையும் கருத்திற்கொண்டு கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணத் தேர்தல் களங்களில் பணியாற்றியதன் மூலம் சிங்கள, தமிழ் அரசியல் தலைவர்களிடம் நன்மதிப்பான புரிதல்களைப் பெற்றோம்.
இதனடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கரமசிங்ஹ, அனுரகுமார திசாநாயக்க, சம்பிக்க ரணவக்க, பாலித ரங்கா பண்டார, ராஜித சேனாரத்ன, மாதுளுவாவே சோபித தேரர், அத்துரலிய ரத்ன தேரர், வட்டரக்கே விஜித தேரர், த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தன் ஐயா, சுமந்திரன் போன்ற தலைவர்களுடன் நாம் நல்லாட்சி பற்றி கடந்த காலங்களில் விரிவாகக் கலந்துரையாடி ஆட்சி மாற்றத்திற்கான விதைப்புக்களைச் செய்து வந்தோம்.
முஸ்லிம் பெண்களின் பர்தா ஆடையொழுங்கு, ஹலால் உணவு போன்ற விடயங்களிலும் பௌத்த மக்களிடம் விதைக்கப்பட்டிருந்த தவறான அபிப்பிராய பேதங்கள் குறித்தும் இந்த பௌத்த மதத் தலைவர்களுடனும், சிங்கள அரசியல் தலைமைகளுடனும் நாம் கலந்துரையாடல்களை நடாத்தி அவர்களுக்கு புரிதல்களை ஏற்படுத்தினோம்.
இந்த நம்பிக்கை அத்திவாரத்தின் மீதுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரபீடத்திலிருந்து அப்புறப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான பொதுமுன்னணி கூட்டமைப்பில் எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது மிக வலுவான நம்பிக்கையுடன் முந்திச் சென்று பங்களிப்பை வழங்கி நாடு முழுவதும் மாற்றத்திற்கான பிரச்சாரத்தைச் செய்தது.
எமக்கு நல்லாட்சிக் கொள்கையின் மீது இருக்கின்ற நம்பிக்கை போலவே, இந்த நாட்டிலும் நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்பதிலும் உறுதியான நம்பிக்கை இருந்தது. அதனால் நாம் ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்களைப் போல் பதவி அதிகாரங்கள் குறித்து இறுதி நேரம் வரைக்கும் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. எமது பங்களிப்பை மிகத் தூய்மையான எண்ணத்துடன் எத்தகைய பிரதிபலன்களையும் எதிர்பாராது, பேரம் பேசல்களை முன்னெடுக்காது வழங்கினோம்.
அந்த நல்லாட்சிக்கான ஆட்சி மாற்றத்தின் இரண்டாவது ஆட்டத் தொடர்தான் இப்போது நடைறெவுள்ள பொதுத் தேர்தலாகும்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சராக இருந்து கொண்டே, இறுதி நேரத்தில் எமது நல்லாட்சி மாற்றத்திற்கு ஆதரவளித்து பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனா அவர்களுக்கு இந்நாட்டிலுள்ள தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 62 இலட்சம் மக்கள் திரண்டெழுந்து வாக்களித்திருப்பதானது, 62 இலட்சம் மக்கள் இந்த நாட்டில் நாம் முன்வைத்த நல்லாட்சிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதையே எமக்கு உணர்த்தியது.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்து மைத்திரி அவர்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்த போதிலும், நல்லாட்சி விழுமியங்கள் பொதிந்த அவரது 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஒத்துழைப்பு நல்கவில்லை. அடிக்கடி குழப்பம் விளைவித்துக் கொண்டும், நாட்டைக் கொள்ளையடித்தவர்களைப் பாதுகாப்பதற்காகப் போராட்டங்கள் நடாத்திக் கொண்டும் காலத்தை இழுத்தடித்தனர். இறுதியில் 62 இலட்சம் மக்கள் ஏற்படுத்திய இந்த நல்லாட்சியையே சிதறடிக்கும் வகையில் சதி நடவடிக்கைகளையும் தொடரத் தொடங்கினர். இதன் காரணமாகவே நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டது.
மக்களின் ஆணைக்கமைவாக அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகாக்களும் இப்போது இந்த நாட்டில் அமுலுக்கு வந்துள்ள 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகூடிய அதிகாரத்தைக் கொண்டுள்ள நாடாளுமன்றத்தையும், அதன் பிரதமர் பதவியையும் கைப்பற்றிக் கொள்ளவும், பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்து, அதனை நிறைவேற்றுவதன் மூலம் அரசியல் யாப்பின்படி பதவியில் இருக்கின்ற பிரதமரை ஜனாதிபதியாக்குவதற்கும் இவர்கள் திட்டமிட்டுச் சதி செய்து இப்போது தேர்தல் களத்தில் 'வெற்றிலை'ச் சின்னத்துடன் இறங்கியுள்ளனர்.
இலங்கையில் நடாத்தப்பட்ட எந்தவொரு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் இருந்திருக்காத சூட்சுமங்களும், நரித் தந்திரங்களும் இந்தத் தேர்தலிலே 'தேன் தடவிய நஞ்சுப் பண்டமாக' எமக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான ஆட்சி மாற்றத்தின் முதலாவது இன்னிங்ஸில் நிறைவேற்று அதிகாரத்தை மாற்றுவது எனும் ஒரே இலக்கை நோக்கி களமாடி வெற்றி பெற்ற நாம், இந்த இரண்டாவது இன்னிங்ஸில் பல கோணங்களில் எமது அவதானிப்புக்களைச் செலுத்தி நாடாளுமன்ற அதிகாரத்தைப் பெற்று நல்லாட்சியை மேலும் வலுப்படுத்தி உறுதிப்படுத்தும் ஆட்டத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஒவ்வொரு வேட்பாளரும், இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சி அரசாட்சியைத் தகர்த்தெறிவதற்காகக் களம் இறங்கியுள்ள மகிந்த ராஜபக்ஷவின் கைக்கூலிகள் என்றே நாம் பார்க்க வேண்டும். வெற்றிலைக்கு நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தேர்தல் களத்தில் இறங்காமல் போனஸ் பட்டியலில் ஒளிந்து கொண்டிருக்கின்ற கோத்தா போன்ற நாட்டை விழுங்கி ஏப்பமிட்ட பெரிய சுறாக்களையும் நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வந்து, மகிந்தவைப் பலப்படுத்தி அவரது அதிகார மயக்கத்தில் இவர்களெல்லாம் எமது நாட்டை மீண்டும் கொள்ளையிட்டுக் கொள்வதற்கும், மீண்டும் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் போன்றவற்றையெல்லாம் ஊக்கப்படுத்தி இந்த அழகிய தேசத்தை ஒரு பர்மாவாக மாற்றுவதற்கே வழிவகுக்கும்.
நாங்கள் ஜனவரி 08ம் திகதி ஏற்படுத்திய நல்லாட்சிக்கான ஆட்சி மாற்றத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்காக, நல்லாட்சிக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றியடையச் செய்வதற்காகவே கடந்த காலங்களில் நாம் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸுடன் இந்தப் பொதுத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளோமே தவிர, வேறு எந்தப் பேரம் பேசல்களுக்காகவோ அல்லது சுய இலாபங்களுக்காகவோ அல்ல என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது இயக்கத்தின் தனித்துவம் இழக்கப்படாத வகையில், இந்த மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வழியேற்படாதவாறு, நாம் ஏற்படுத்திய நல்லாட்சி அரசை வலுப்படுத்தும் நோக்கத்துடன்தான் நாமும், ஸ்ரீ.ல.மு.காங்கிரஸும் இந்தத் தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கு இணங்கியுள்ளோம். எமது இந்தக் கூட்டிணைவு தொடர்பான உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படும். அதனை ஒளிவு மறைவின்றி ஊடகங்களுக்கும், இந்த இரண்டு மாவட்ட வாக்காளர்களுக்கும் நாம் வெளிப்படையாக வழங்குவோம்.
ஸ்ரீ.ல.மு.காங்கிரஸுடன் நாம் இன்று இணைந்திருந்தாலும் நல்லாட்சிக் கொள்கை கோட்பாடுகளுக்கு மாறாக அக்கட்சி செயற்படும்போது எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் எமது கண்டனங்களையும், விமர்சனங்களையும் எந்தவிதமான தயக்கமும் இல்லாது பகிரங்கமாக வெளிப்படுத்துவோம். அந்த விடயத்திலே நாங்கள் மு.கா.வுடன் இணைகின்ற ஏனைய அரசியல் தனி நபர்களைப் போன்று நாம் மௌனிகளாக இருக்க மாட்டோம். எமக்கான கொள்கை கோட்பாடுகள், செயற்பாடுகளில் நாம் எமது தனித்துவத்தை எப்போதும் பேணிப்பாதுகாத்தவர்களாகவே செயற்படுவோம்.
எனவே, இங்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசிகளாகவும், இந்த மண்ணின் மைந்தர்களாகவும் போட்டியிடுகின்றவர்களை இந்தத் தேர்தலில் நாம் நிரந்தரமாக அஸ்தமிக்கச் செய்வதன் மூலமே இந்த ஊரிலும், இந்த மாவட்டத்திலும், இந்த மாகாணத்திலும், இந்தத் தேசத்திலும் ஒரு முழுமையான மாற்றத்தையும், நல்லாட்சி நிர்வாகத்தையும் ஏற்படுத்தலாம் என்பதில் எங்களைப் போல் இவ்வூர் மக்களும் பற்றுறுதியுடன் இருப்பதுடன், எஞ்சியிருக்கின்ற 25 நாட்களிலும் அந்த இலக்கை அடைவதற்காக ஊண், உறக்கம், ஓய்வுகளை எல்லாம் தியாகம் செய்து ஒவ்வொரு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டி, காத்திரமான கருத்துக்களை வாக்காளர்களுக்கு எடுத்துக்கூறி எமது மக்களுக்கு நல்வழியையும், நல்லாட்சியையும் கொடுப்பதற்கு உழைக்குமாறு ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.
குறிப்பாக உலமாக்கள், தஃவா அமைப்புக்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் போன்றவர்களும் இந்தத் தேர்தலில் களத்தில் வெளிப்படையாக இறங்கி நமது மார்க்கம் வலியுறுத்துகின்ற நல்லாட்சியை இந்த நாட்டிலும், நமது மண்ணிலும் நிறுவுவதற்கும் செயற்படுத்துவதற்கும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
