Featured Home (TOP)

Recent Comments

Tuesday, July 14, 2015

Unknown

முன்னாள் ஜனாதிபதிக்கும் தனக்கும் தொடர்புகள் இல்லையென ஹிஸ்புல்லா சொல்வது பொய்! – பொறியியலாளர் அப்துர் றஹ்மான்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தனக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று சக வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருப்பது, அப்பட்டமான பொய்யாகும். அவருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இப்போதும் நெருக்கமான தொடர்புகள் இருந்து வருவதை எம்மால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா. சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுபவருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் காத்தான்குடியிலுள்ள முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்த பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அங்கு மேலும் கூறியதாவது:

இந்நாட்டு மக்களின் விருப்பத்திற்கமைவாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு, நல்லாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் மைத்திரிபால சிறிசேனா அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் ஸ்திரமான நாடாளுமன்றப் பலம் இல்லாமையின் காரணமாகவே பல தீர்மானங்களைச் செயற்படுத்த முடியாமல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மக்கள் இலகுவாக விளங்கிக் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், அடுத்து வரும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் நல்லாட்சி நிர்வாகத்திற்கு உறுதுணையாக நின்று ஆதரவளிக்கக்கூடியவர்களையே மக்கள் தமது பிரதிநிதிகளாகத் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டும் என்பதாகும்.

எனினும், கடந்த அரசாங்கக் காலத்தில் பல்வேறு ஊழல் மோசடிகளிலும், அதிகாரத்துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்ட பலரையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது வெற்றிலைச் சின்னத்தில் வேட்பாளர்களாக இப்போது களமிறக்கியுள்ளது. இதனால், ஜனாதிபதி ஆட்சிமாற்றத்திற்கு முன்னோடிகளாகச் செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ உள்ளிட்ட பல கட்சிகளின் முக்கியஸ்தர்களும், நாமும் பெரும் அதிருப்தியடைந்துள்ள நிலையில்தான், மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமையிலான நல்லாட்சியினை நாடாளுமன்றத்திலும் உறுதிப்படுத்துவதற்காகவே இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் நாமும் ஒன்றிணைந்து போட்டியிடுகின்றோம்.

இருந்த போதிலும், அன்று மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் தரப்பில் மிகவும் முக்கியமானதொரு பங்காளியாகச் செயற்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, தேர்தல் முடிந்த கையோடு தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு செயற்படுவதாகக் கூறியிருந்தார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வேளையிலும் அவர் தமக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்பதை வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்.

அவ்வாறெல்லாம் சகோதரர் ஹிஸ்புல்லா மக்களை ஏமாற்றும் வகையில் கூறி வருகின்ற போதிலும், அவருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இப்போதும் நெருக்கமான தொடர்புகள் இருந்து வருகின்றன என்பதை எம்மால் நிரூபிக்க முடியும்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது, ஊழல் மோசடி ஒழிப்புப் பிரிவினர் அதனை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளையில், நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆதரவாக ஒன்றுகூடி போராட்டம் நடாத்தியவர்களில் ஹிஸ்புல்லாவும் அடங்கியிருந்தார் என்பதை ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் படம்பிடித்துக் காட்டியிருந்தன.

அதேபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு அவரது நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் கூறிக்கொள்ளும் சகோதரர் ஹிஸ்புல்லா, நாட்டு மக்கள் வழங்கிய அந்த நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைப் பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அவ்வாறுதான் யுத்த வெற்றி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் வெற்றி விழா நிகழ்வுகளை தனித்தனியே ஏற்பாடு செய்திருந்தபோது, சகோதரர் ஹிஸ்புல்லா மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த விழா நிகழ்வைப் புறக்கணித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த விழாவுக்கே சென்றிருந்தார் என்பதையும் நமது மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட, வேட்புமனுக்கள் தாக்கல் யெயப்படுவதற்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த இரகசியக் கூட்டத்திலும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கெர்ணடதை இந்த காணொளியில் நீங்கள் காணலாம். (ஊடகவியலாளர்களுக்கு குறித்த காணொளி இயக்கிக் காண்பிக்கப்பட்டது)

இவ்வாறெல்லாம் முன்னாள் ஜனாதிபதியுடன் இன்று வரை நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்ற சகோதரர் ஹிஸ்புல்லா, எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு எதிராக அமோகமாக வாக்களித்திருந்தார்கள் என்பதை கருத்திற் கொண்டுதான், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு இந்த மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களுடைய வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மிகத் தந்திரமாக தனக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று அப்பட்டமாகப் பொய் சொல்லி வருகின்றார். இவரது பொய்யையும், அரசியல் தந்திரோபாயத்தையும் மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி ஆட்சி மாற்றம் என்பது, எம்மைப் பொறுத்த வரைக்கும் நல்லாட்சிக்கான ஒரு ஆரம்பமேயாகும். அதனை முழுமைப்படுத்தி நாட்டில் அமுல்படுத்த வேண்டுமாயின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது மக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களான வெற்றிலை வேட்பாளர்களுக்கு எதிராகவும், நல்லாட்சிக்கு உறுதுணையாகக் களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாகவுமே தமது வாக்குகளை வழங்க வேண்டும்.

இந்த நாட்டில் ஜனாதிபதி ஆட்சி மாற்றத்திற்காக முஸ்லிம்கள் தரப்பில் முதன்மைப்பங்காளியாக எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியே களமிறங்கியது என்பது உங்களுக்குத் தெரியும். இப்போதும் அந்த நல்லாட்சிக்கான அத்திவாரமாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதிகாரத்துடன் செயற்படப் போகும் நாடாளுமன்றத்திற்கு தகுதியான பிரதிநிதிகள் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகவே நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து, அதில் தன்னையும் ஒரு கட்சியாக இணைந்துக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நாம் போட்டியிடுகின்றோம்.

எனவே, அடுத்த நாடாளுமன்றத்தில் நல்லாட்சிக்காகவும், இன ஐக்கியத்திற்காகவும் உரத்தும், உறுதியாகவும் குரல் கொடுக்கக்கூடியவர்களாக எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர்கள் இருப்பார்கள் என்பது, எமது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் வாக்களர்களின் முன்னணித் தெரிவாக இருக்கும் என நம்புகின்றோம் என அவர் தெரிவித்தார். 

Read More
Unknown

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் NFGGயின் ஊடகவியலாளர் சந்திப்பு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்குப் பிராந்திய தலைமையாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளருமான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட தலைமைத்துவசபை உறுப்பினர்களான பொறியியலாளர் MM.பலுளுள் ஹக் மற்றும் MMM.ஜனூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது வேட்பாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தேர்தல் தொடர்பில் உரையாற்றியதுடன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளித்தார்.






Read More
Unknown

ஸஹ்ரான் மௌலவியும் ஸகர் நேரமும்


எங்களுடைய நோன்பை ஆரம்பிக்கும் நேரத்திலும் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பொதுவாக எங்களுடைய அமல்கள் காலம், நேரம் குறிப்பிடப்பட்டுத்தான் விதியாக்கப்பட்டிருக்கின்றது. நோன்பானது முஸ்லிம்களின் 9வது மாதமான றமழான் மாதத்தில் நோற்க வேண்டுமென விதியாக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் பஜ்ருடைய நேரத்திலிருந்து மஃரிபுடைய நேரம் வரை உண்ணாமலும் பருகாமலும் இருந்து நோன்பை கடமையாக்கும்படி பணிக்கப்பட்டிருக்கின்றோம். அதுபோல தொழுகை நேரங்களிலும், ஐவேளை தொழுகை நேரங்களையும் இஸ்லாம் எங்களுக்கு தெளிவாக வரையறுத்து கூறியுள்ளது. அதே போல ஹஜ்ஜுடைய கடமைகளையும் எமது இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்ற பணிக்கப்பட்டிருக்கின்றது. அதே போல ஸக்காத்தும் ஒரு வருடம் முடிந்த கையிருப்பில் உள்ள தங்கம்,பணத்திற்கு ஸகாத் கடமையாக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு எந்த அமல்களை எடுத்துக்கொண்டாலும் நேரம், காலத்தை தெளிவாக சந்தேகமின்றி இஸ்லாம் எடுத்துக்கூறுகின்றது. இதிலேதான் தற்போது காத்தான்குடி தேசிய தௌகீத் ஜமாத்தை சேர்ந்த சஹ்ரான் மௌலவி சகர் செய்யும் நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றார். அதாவது நாங்கள் தற்போது சுபஹு தொழுகைக்காக அதான் சொல்கின்ற 4 மணி 30 நிமிடம் பிழை. இது நபி (ஸல்) அவர்கள் வரையறுத்துக்கூறிய நேரத்திற்கு பிழையானது என்கின்றார். 'வைகறை எனும் வெள்ளைக்கயிறு இரவு எனும் கறுப்பு கயிரில் இருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்' என அல்குர்ஆன் கூறுகின்றது. 

இதிலிருந்து பஜ்ரின் ஆரம்ப நேரமும் சஹர் முடிவு நேரமும் ஒன்று என புலனாகின்றது. 

நபி(ஸல்) அவர்கள் பஜ்ரை இரண்டாக பிரிக்கின்றார். அவை பொய்யான பஜ்ர், உண்மையான பஜ்ர் ஆகும்;. முதலாவது வெளிச்சம் பொய்யான பஜ்ர் ஆகும். வானம் தெளிவான உள்ள காலத்தில் அடிவானத்தில் நிலைக்குத்தாக அதாவது செங்குத்தாக தூணைப்போன்று தோற்றமளிக்கும் வெளிச்சத்தை பொய்யான வெளிச்சம் என்று இஸ்லாம் அடையாளப்படுத்துகின்றது. இந்த வெளிச்சமானது சுபஹு தொழுகைக்கு அடையாளமோ, நோன்பாளி சகர் உணவை நிறுத்தி கொள்வதற்குரிய அடையாளமோ அல்ல. இதனை அறிவியலில் சோடியாக்கள்லைட் (ணுழனயைஉயட டுiபாவ) என்றழைக்கின்றனர். 

சூரிய மண்டலத்தில் பூமிக்கு வெளியே இருக்கும் தூசி மண்டலத்தில் சூரிய ஒளிபட்டு எதிரொளிப்பதால், இந்த செங்குத்தான ஒளி ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் பொய்யான பஜ்ர் ஆனது உண்மையான பஜ்ர்க்கு ஏரத்தாள 20 நிமிடங்களுக்கு முன்நிகழும் என வானியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

உண்மையான பஜ்ர் ஆனாது 2வது வெளிச்சமாகும். இது அடிவானம் வழியே கிடைமட்டமாக வலது மற்றும் இடது புறமாக பரவும் வெள்ளைக்கோடு ஆகும். இதுதான் சுபஹு தொழுகையின் ஆரம்ப நேரமும் சஹர் முடிவு நேரமும் ஆகும்.

இதிலே சஹ்ரான் மௌலவியின் வாதம் என்னவென்றால் நமது நாட்டிலே தொழுகைக்கான அதான் கிட்டத்தட்ட 4.30 மணியளவிலே சொல்லப்பட்டு தொழுகை நிறைவேற்றப்படுகின்றது. இது பொய்யான பஜ்ர்க்கும் முந்திய நேரமாகும். இவர்கள் அதான் சொல்லி ஏரத்தாள 30 அல்லது 40 நிமிடங்களின் பின்னர்தான் உண்மையான பஜ்ர் ஆரம்பமாகின்றது. றமழான் காலத்தில் உண்மையான பஜ்ர்க்கு முன்னதாகவே இன்னும் சொல்லப்போனால் பொய்யான பஜ்ர்க்கு முன்னதாகவே சுபஹ் தொழுகையை நிறைவேற்றிவிட்டு மக்கள் கலைந்து சென்றுவிடுகின்றார்கள். இருட்டில் பாங்கு சொல்லி இருட்டில் தொழுது முடிக்கிறார்கள் என்கிறார் சஹ்ரான் மௌலவி.

சஹ்ரான் மௌலவி சொல்வது போல் தவறு காணப்படுகிறதா என்பதை நாங்கள் விரிவாக ஆராய வேண்டும். ஏனெனில் இது வானியல் சம்பந்தமாக விஞ்ஞான பூர்பமாக ஆராயக்கூடிய பிரச்சினையாகும். அகில இலங்கை ஜம் இய்துல் உலமாவும் ஏனைய வானியல் அறிஞர்களும் சஹ்ரான் மௌலவியும் இணைந்து இலங்கையில் சுபஹ் விடயத்தில் தவறு நடைபெறுகிறதா என்பதை விரிவாக ஆராய வேண்டும்.

அதிகாலை நேரத்திலே விடியலுக்குரிய இந்த வெளிச்சம் எந்த நேரத்தில் உருவாகிறது என்று கிழக்கிற்கு சென்று துல்லியமாக துறைசார்ந்த அறிஞர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். உண்மையிலே இலங்கையிலே பஜ்ர் நேரத்தில் தவறு ஏற்பட்டிருந்தால் அதனை உடனடியாக திருத்த ஆவண செய்யவேண்டும். ஏன்னெனில் இது மார்க்கம். இதுவரை தவறு நடைபெற்றிருந்தாலும் இனியாவது சரியாக செய்ய வேண்டும். இதே தவறின் படியே செல்லவேண்டும் என்பது நியதியல்ல.

தமிழ்வாணன் (கறுப்பு கண்ணாடியார்) எழுதுகின்றார் முன்னொரு காலத்தில் 'ஈ' க்கு 4 கால்கள் என்ற நம்பிக்கை இருந்து வந்ததாம். 'ஈ' க்கு 4 கால்கள் என்று யாரோ சொன்னதை வைத்து மனித இனம் அவ்வாறு நம்பி வந்தது. யாருக்கும் 'ஈ' ஐ பிடித்து எத்தனை கால்கள் என்று பாரக்க வேண்டும் என்று தோன்றவில்லை பின்னர் நீண்ட காலத்தின் பின் 'ஈ' ஐ பிடித்த ஆராய்ந்த போது அதற்கு 6 கால்கள் உண்டு என்று கண்டு பிடிக்கப்பட்ட பின்னர்தான் 'ஈ' க்கு 6 கால் உண்டு என்ற கருத்து மனிதர்கள் மத்தியில் நிலவத்தொடங்கியது என தமிழ்வாணன் எழுதுகின்றார்.

இதே போல இப்போதும் நமது மக்கள் மத்தியில் அன்னப்பறவைக்கு தண்ணீரையும் பாலையும் பிரித்து அருந்தும் தன்மை இருப்பதாக நம்புகின்றோம். இது  தவறான நம்பிக்கையாகும். உண்மையில் அன்னத்திற்கு நீரையும் பாலையும் பிரித்து அருந்தும் தன்மையில்லை. அன்னம் என்பது சோறு சோற்றுக்குத்தான் பாலையும் நீரையும் பிரிக்கும் தன்மை உண்டு என்று சொல்கின்றார்கள்.

எங்களுடைய மெத்தை பள்ளிவாயலில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். சுமார் 20 வருடங்களுக்கு முன் மெத்தை பள்ளிவாயல் அமைந்திருக்கும் திசை பிழை. அதனுடைய கிப்லா பிழை என சந்தேகிக்கப்பட்டது. வருடத்தில் ஒரு நாள் வரும் அன்று கஃபாவிற்கு மேல் சூரியன் சரி நேராக வரும். அந்த நாளில் கிப்லாவை அறிந்து கொள்ள முடியும். இந்த குறித்த தினத்தில் நாங்கள் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள கிப்லா பார்க்கும் பல அறிஞர்களை வரவழைத்து பெருமளவு பணம் செலவு செய்து கிப்லா பார்க்கப்பட்டது. ஏற்கனவே இருந்த கிப்லா பிழை என்பது நிருபனமானது. அன்று பகல் 2.30 மணியளவில் கிப்லா பிழை என்பது தெரிந்ததும் அன்று அசர் தொழுகைக்கு புதிய கிப்லா நிர்ணயிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட புதிய கிப்லாவிலே தொழுகை நடாத்தப்பட்டது. அப்போது நான் மெத்தை பள்ளிவாயல் தலைவராக இருந்தேன். எங்களுடைய முன்னோர்களான மு.இ.மு., ஆவன்னா மானா ஹாஜியார், அஹமட் லெப்பை போன்றோர் தொழுது வந்த கிப்லா இது. இதனை நாங்கள் மாற்ற மாட்டோம். என நாங்கள் அடம்பிடிக்கவில்லை. தவறு என்று தெரிந்த மறுகணமே சரியான கிப்லாவை நோக்கி தொழுகை நடாத்தப்பட்டது. 

எனவே சஹர் நேரத்தில் தவறு இருந்தால் அதனை நாங்கள் திருத்த வேண்டும். இந்த நேர தவறினால் நோன்புக்குக்கூட பாதிப்பில்லை. ஆனால் நிச்சயமாக இது சுபஹ் தொழுகையில் பாதிப்பு ஏற்படுத்தும். இது விஞ்ஞான பூர்வமாக வானியல் அறிஞர்களை கொண்டு தீர்வு காணக்கூடிய பிரச்சினைதான் இதில் சிக்கல்கள் எதுவுமே இல்லை. நாங்கள் பாரக்க வேண்டியது பஜ்ர் சம்பந்தமான குர்ஆன் வசனம் சரியானதா?, கதீஸ்கள் சரியானவையா? என பார்த்து கிழக்கிலே விடியும் நேரத்தில் தோன்றுகின்ற வெளிச்சத்தையும் வைத்து அறிவு பூர்வமாக தீர்மானிக்க முடியும். அதை விட்டு விட்டு 'ஈ' க்கு நான்கு கால்தான், அன்னப்பறவைக்கு நீரையும் பாலையும் பிரிக்கும் சக்தி உண்டு என அடம்பிடிக்காமல் சுபஹ் நேரத்தை உண்மையாக அறிந்து அதன்படி புதியதொரு நேர அட்டவணை தயாரிக்கப்ட்டு, அதன்படி தொழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் ஏனைய துறைசார்ந்த அறிஞர்களும், சஹ்ரான் மௌலவியும் முன்வந்து புதியதொரு சர்ச்சை மார்க்த்தில் ஏற்பட இடமளியாது தீர்வு காணவேண்டும் என்பதே அல்லாஹ்வின் நல்லடியார்களின் விருப்பமாகும். 

Read More