Featured Home (TOP)

Recent Comments

Sunday, January 31, 2016

avathani Media Network

சுவாமி விவேகானந்தரின் ஜனன தின விழா காரைதீவு கண்ணகி சனசமூக நிலையத்தில்!



(பத்மராஸ் கதிர்)

சுவாமி விவேகானந்தரின் 153 வது ஜனன தின விழா நிகழ்வுகள் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் தலைவர் திரு.எஸ்.நேசராஜா அவர்களின் தலைமையில் கண்ணகி சனசமூக நிலையத்தில் வெகுசிறப்பாக இன்று(31) ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது.

சுவாமிஜியின் திவுருவப்படம் கழகத்திற்கு கொண்டுவரப்பட்டு நந்திகொடியேற்றல் சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தல் இடம்பெற்றதுடன் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் கௌரவிப்பு,பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி.ச.கணேசராஜா அவர்கள் கலந்து கொண்டதோடு மேலும் ஆன்மிக அதிதிகள் கௌரவ அதிதி மற்றும் சிறப்பு அதிதிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததோடு கழக உறுப்பினர்கள் அறநெறி மாணவர்கள் ஆசிரியர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.





Read More
avathani Media Network

"கல்வியின் நோக்கத்தினை புரிந்து கொள்ளாத வரை நமது பிரச்சினைகளையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது" பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

"அறிவியற்துறை மிக வேகமாக வளர்ந்து செல்லும் இக்கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி அடைவு மட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றிய ஒரு முறையான ஆய்வு மிகமிக அவசியமாகின்றது. கல்வி என்பது மிக விரிந்த பார்வையுடனும், சமகால உலக நியமங்களுக்கு ஏற்பவும் நோக்கப்படவேண்டிய ஒன்றாகும்.  கல்வியின் நோக்கத்தினையும், அதன் பரப்பினையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத வரை நமது சமூகம் எதிர் நோக்கும் கல்விப் பிரச்சினைகளையும் எம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது" என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தொவித்தார்.


இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளும் கல்விப் பிரச்சினைகள் பற்றிய ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்வதற்கான  அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று (31.01.2016) 'அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்றது. அதன் தலைவர் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் தலைமையில் கொழும்பு ரேனுகா ஹோட்டலில் நடைபெற்ற இவ்வங்குரார்ப்பண நிகழ்வில் 'தனியார் உயர் கல்வியின் தாக்கங்களும், பங்களிப்பும்' என்ற தலைப்பில் கருத்துரை வழங்குவதற்காக பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இங்கு அழைக்கப்பட்டிருந்தார்.


இலங்கையின் முன்னணி உயர் கல்வி நிறுவனமான BCAS Campus நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இங்கு உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது...


'அறிவியற்துறை மிக வேகமாக வளர்ந்து செல்லும் இக்கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி அடைவு மட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றிய ஒரு முறையான ஆய்வு மிகமிக அவசியமாகின்றது. கல்வி என்பது மிக விரிந்த பார்வையுடனும், சமகால உலக நியமங்களுக்கு ஏற்பவும் நோக்கப்படவேண்டிய ஒன்றாகும். ஆனால், முஸ்லிம் சமூகத்தின் கல்வி அடைவு பற்றி பேசப்படுகின்ற பல தருணங்களில் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை ஒப்பீடு செய்வதிலும், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு எத்தனை பேர் தெரிவாகின்றனர் என்ற ஒப்பீடுகளுடனும் பலரது பார்வைகளும் மட்டுப்படுத்தப்பட்டு விடுகின்றன. இது மிகவும் துரதிஸ்டவசமானது. கல்வியின் நோக்கத்தினையும், அதன் பரப்பினையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத வரை நமது சமூகம் எதிர் நோக்கும் கல்விப் பிரச்சினைகளையும் எம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.


பல்கலைக் கழக அனுமதியினை நமது சமூகத்தில் எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதற்கு சமமாகவே ஏனைய பல விடயங்களிலும் நாம் கரிசனை கொள்ள வேண்டும். முறையான ஆரம்பக் கல்வி, பாடசாலை இடைவிலகல், ஆங்கில மற்றும் கணனி விஞ்ஞானத்துறையிலான ஊக்குவிப்பு, பல்கலைக் கழக வாய்ப்புக் கிடைக்காதோருக்கான மாற்றுவழிகள், தொழில் கற்கைகள், கல்வியின் மூலமாக கிடைக்கும் ஒழுக்க பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் ஆழுமை விருத்தி அத்தோடு துறை சார் பிரயோக அறிவு என ஏனைய பல்வேறு விடயங்களிலும் நமது கவனம் குவிக்கப்படவேண்டும். 


அந்த வகையில், முஸ்லிம் கல்வி மகாநாட்ட்டின் ஏற்பாட்டில் நடாத்தப்படுகின்ற இந்த ஆய்வு பத்து தலைப்புக்களில் ஒரு விரிவான பரப்பைக் கொண்டிருக்கிறது என்பது திருப்தியளிக்கிறது.


இன்றைய புதிய உலக ஒழுங்கில் ஏனைய துறைகளில் இருப்பது போலவே உயர் கல்வித்துறையிலும் தனியார் துறையினரின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. நம்நாட்டில் பல்கலைக் கழகத்திற்கு தகுதி பெறும் 150000 க்கும் அதிகமான மாணவர்களில் 25000 பேர்களுக்கு மாத்திரமே அரசாங்கத்தினால் பல்கலைக் கழக வாய்ப்பினை வழங்கக் கூடிய இருக்கிறது .இந்நிலையில் ஏராளமான ஏனைய மாணவர்களுக்கான வாயப்புக்களை வழங்கக்கூடிய வழிமுறையாக தனியார் உயர் கல்வித்துறை இன்று இலங்கையில் மாறியிருக்கிறது. அரசாங்கம்கூட இதனை ஒரு தேசிய பங்களிப்பாகவே கருதி இதனை மேலும் மேம்படுத்துவதனை தனது கொள்கையாக வகுத்துக் கொண்டிருக்கிறது.


தனியார் உயர்கல்வித்துறையானது ஏராளமான வாய்ப்புக்களைக் தருவது போலவே பல்வேறு புதிய புதிய சவால்களையும், பிரச்சினைகளையும் அது ஏற்படுத்தியிருக்கிறது. இந்நாட்டில் தனியார் உயர் கல்வி நிறுவனமொன்றை ஸ்தாபித்து தொடர்ந்தும் தலைமை தாங்கி வழி நடாத்துகின்றவன் என்ற அடிப்படையில் இத்துறையில் எனக்கு 16 வருட அனுபவமிருக்கிறது.
இதனடிப்படையில், தனியார் உயர் கல்வியினை நெறிப்படுத்தித் தரப்படுத்துகின்ற ஒரு முறையான கட்டமைப்பு இந்நாட்டில் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்பது ஒரு பாரிய பிரச்சினையாகும். எனது வெளிநாட்டு அனுபவத்தோடு இவ்விடயத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அந்நாடுகளின் தனியார் உயர் கல்வித்துறை மிக நுணுக்கமாக நெறிப்படுத்தப்படுகின்றது. அதன் மூலம் தரமான கல்விச் சேவையினை தமது மாணவர்களுக்கு அவர்கள் உத்தரவாதப்படுத்துகின்றனர். இந்த நிலைமை இன்னும் இங்கு உருவாகவில்லை. உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளுடனான பல சந்திப்புக்களின் போது நான் இதனை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறேன்.


அதேபோல் முஸ்லிம் சமூகம் தனியார் உயர் கல்வித்துறையை பயன்படுத்திக் கொள்வதில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் ஒன்று நமது மாணவர்களின் ஆங்கில மொழியாற்றல் போதைமை. மற்றையது பொருளாதாரச் சிக்கல்கள்.  இந்த இரண்டுக்குமான தீர்வுகளை ஒரு ட்டமைக்கப்பட்ட ஒழுங்கின் ஊடாக வழங்க முடியுமெனின் தனியார் உயர் கல்வித்துiறியின் உச்சகட்டப் பலன்களை முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொள்ள முடியும்.


இந்நாட்டின் சிறுபான்மை மக்களாக நாம் வாழுகின்ற போதிலும் கூட நாம் பல்வேறு துறைகளிலும் கனிசமான பங்களிப்பினை நாட்டுக்கு வழங்கி வருகிறோம். ஆனால், முறையான புள்ளி விபரங்களுடன் இவை முன்வைக்கப்படுவதில்லை. அந்த வகையில் எனது தலைமையில் இயங்கும் உயர் கல்வி நிறுவனமானது முழு நாட்டிலும் ஏனையோர்களால் செய்யமுடியாத பல பங்களிப்புக்களை உயர் கல்வித்துறையிலும், தொழில் வாயப்புக்களை உருவாக்குவதிலும் அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுப்பதிலும் செய்திருக்கிறது. இந்நாட்டின் குடிமகனாகவும், அதே வேளை ஒரு முஸ்லிம் பிரஜையாகவும் இருந்து செய்யப்பட்ட இந்தப் பங்களிப்பானது முஸ்லிம் சமூகத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டிய தேசிய பங்களிப்புக்களில் ஒன்று எனத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்."
இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் முஹம்மட் நாஜிம், கொழும்பு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி உவைஸ் ஹனீபா, உயர் கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் அஸ்ஸெய்க் முஹம்மது நவவி,ஜெஸீமா இஸ்மாயில், பேராசிரியர் ஹஸ்புல்லாஹ், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதிகளான முஹம்மட் றமீஸ், கலாநிதி முஹம்மட் நுபைல்,முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் NM அமீன் உள்ளிட்ட 50க்கும் அதிகமான முஸ்லிம் கல்வி மான்களும், புத்தி ஜீவிகளும், துறைசார் நிபுணர்களும் கலந்து கொண்டனர்.









Read More
avathani Media Network

புதிய அரசியல் யாப்பு முஸ்லிம்களுக்கு வைக்குமா ஆப்பு?

(எம்.எம்.எம்.நூறுல்ஹக்)

இலங்கையின் அரசியலமைப்பினை திருத்துவது அல்லது புதிதாக உருவாக்குவது தொடர்பில் பல்வேறு கதையாடல்கள் இன்று பேசுபொருளாகியுள்ளது.அரசியலமைப்பை புதிதாக மறுசீராக்கம் செய்வதா? அல்லது சில பகுதிகளில் திருத்தங்களைக் கொண்டுவருவதா என்பதில் கூட ஒருமித்த கருத்து நிலை இன்னும் ஏற்படவில்லை.இதனால்தான் கடந்த 26.01.2016 இல் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த அரசியல் நிர்ணய சபை குறித்த விவாதம் முன்கூட்டியே இரத்துச் செய்யப்பட்டு நடைபெறாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை முற்றாக ஒழிப்பது, நாடாளுமன்ற தேர்தல் முறைமையில் தொகுதி ரீதியாகவும் விகிதாசார வகையிலும் கலந்த முறைமையினை தோற்றுவிப்பது,இனப்பிரச்சனைக்கு தீர்வினைக் காண்பது ஆகிய மூன்று விடயங்கள் முன்னிறுத்தியே அரசியலமைப்பு விவகாரம் இன்று பேசப்படுகின்றது.
நமது நடைமுறை அரசியலமைப்பினைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றிக்கொள்வதினால் மட்டும் அரசியலமைப்பை முழுமையாக மாற்றிக்கொள்ள முடியாது என்பது ஒரு விடயம்.ஏனெனில் உலகிலுள்ள அரசியலமைப்புக்களை நெகிழும்,நெகிழாத அரசியலமைப்பு என்ற பாகுபாட்டுக்குள் உள்ளடக்கிப் பார்க்கும் வகையில்தான் பெரும்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலத்தினை வைத்து அரசியலமைப்பினைத் திருத்தும் மாதிரியில் அமைந்திருந்தால் அது நெகிழும் யாப்பு எனவும்,விஷேட விதிகளை வைத்து திருத்தம் செய்யலாம் என்கின்ற மாதிரியை கொண்ட அரசியலமைப்புக்கள் நெகிழாத யாப்பு என்றும் நோக்கப்படுகின்றது.
தற்போதைய நமது அரசியலமைப்பைப் பொறுத்தவரை அதிலுள்ள பல பகுதிகளைத் திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பாராளுமன்ற பலத்தினைக் கொண்டு மாற்றிக்கொள்ள முடியும்.இன்னும் சில பகுதிகள் நாடாளுமன்ற பலத்துடன் மக்கள் தீர்ப்பினையும் பெற்றுத்தான் திருத்தங்கள் செய்ய முடியும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனூடாக நமது நாட்டு அரசியலமைப்பு நெகிழா யாப்பு முறைமையினை கொண்டதாக விளங்குவதை அறிய முடியும்.இதனால்தான் இன்றைய நல்லாட்சிக்கு முந்தைய 100 நாள் வேலைத்திட்டத்தின் போது , அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பத்தொன்பதாம் திருத்தத்துக்கு முன்மொழியப்பட்டிருந்த சில விடயங்களை நிறைவேற்ற முடியாது போயின.அதாவது முன்மொழிவுக்கு உட்பட்ட சில விடயத்தில் மக்கள் அபிப்பிராயம் பெறப்பட வேண்டிய பகுதிகள் இருந்தன.
இதனால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் தீர்ப்புக்குரிய விடயங்களை இப்போது நிறவேற்றுவதில்லை என அன்று அறிவிப்புச் செய்திருந்ததாகும்.ஆயினும் அண்மையில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின்றி அரசியலமைப்பைத் திருத்துவது என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதனூடாக மக்கள் தீர்ப்பு தேவைப்படும் பகுதிகளில் திருத்தத்துக்கு உட்படுத்தப்போவதில்லை என்ற அர்த்தத்தினை இது சுட்டிக்காட்டுவதாக பார்க்க முடிகின்றது.
நமது  நடைமுறை அரசியலமைப்பின் படி இன்று நடைமுறையிலிருக்கும் ஒற்றையாட்சி முறைமை என்பதை திருத்துவதாயின் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் மக்கள் தீர்ப்பும் தேவைப்படும்.சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஒற்றையாட்சி முறைமையில் மாற்றம் நிகழாது என்பதை திட்டவட்டமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் பௌத்த மதத்தினை முதன்மைப்படுத்திய யாப்பின் பகுதி திருத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை மீதான தனது கருத்துக்களை பிரதமர் பின்னர் வெளிப்படுத்துவதாகக் கூறியிருப்பதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது விடயத்தில் கருத்து எதனையும் தெரிவிக்காது இன்றுவரை இருப்பதைக் கொண்டு இவ்விரு விடயங்களிலும் மாற்றம் நிகழாது என்றே நம்பலாம்.
உண்மையில் “இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சியுடைய அரசாகும்” என்ற உறுப்புரை 2 “இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்கப்படுதல் வேண்டும்” என்ற வாசகத்துக்குரிய உறுப்புரை 9 ஆகியனவும் நாடாளுமன்ற பலமும் மக்கள் தீர்ப்பும் இன்றி மாற்றியமைக்க முடியாத பகுதிகளில் உள்ளவைகள் என்பதை அவதானிக்கலாம்.
சோல்பரி அரசியலமைப்பில் எவ்வாறு யாப்பினைத் திருத்த வேண்டும் என்பது பற்றி கடுமையான கட்டுப்பாடுகள் எதனையும் அது கொண்டிருக்கவில்லை.இதனால்தான் 1972 இல் நமது நாட்டின் முதலாவது சுதந்திர குடியரசு யாப்பினை வரைந்து நிறைவேற்றிக்கொள்வதை இலகுபடுத்தியிருந்தது. ஆனால் அன்றைய நாடாளுமன்றத்தின் பலம் என்பது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 157 பேர்,இவர்களில் 91 ஆசனங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியிருந்தது.ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சி பெற்றிருந்த 19 ஆசனங்களையும் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்த 6 ஆசனங்களையும் இணைத்துக்கொண்டு மொத்தமாக 116 உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கமாக அது அமைந்திருந்ததென்பது கவனத்துக்குரியது.
அதேபோன்று இலங்கையின் இரண்டாவது சுதந்திரக் குடியரசு யாப்பு 1978இல் உருவாக்கப்பட்டதாகும்.இது முதலாம் குடியரசு யாப்பில் (1972) எவ்வாறு அரசியலமைப்பை திருத்தவேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றது.அதில் நாடாளுமன்ற மூன்றில் இரண்டு பலத்தையே குறித்து நின்றது.இதற்கு இசைவாக 168 மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 140 பேர் தனித்து ஐக்கிய தேசியக் கட்சி பெற்று ஆட்சியமைத்தது.இது ஆறில் ஐந்து பலம் கொண்டதாகும்.இதனால் வ்வித சிரமமுமின்றி அரசியலமைப்பை புதிதாக உருவாக்க வழிசமைத்தது.
இவ்விரு அரசியலமைப்புக்களும் ஒரு இனப்பிரச்சனைத் தீர்வுக்காக புதிதாக உருவாக்க முனைந்தவை அல்ல.ஆளும் கட்சிகளாக வரும் பெரிய கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆட்சி நலன் சார்ந்ததாக அவைகள் ஆக்கப்பட்டிருந்தன.அப்போதுகூட தமிழ் மக்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் முன்வைத்த சிறுபான்மை நலன் சார்ந்த எந்தக் கோரிக்கைகளயும் ஏற்றுக்கொள்ளாத ஒரு கோணம் அங்கு நடந்தேறிய வரலாற்றுப் பதிவையும் அது கொண்டுள்ளது.
இன்று அரசியலமைப்பு உருவாக்க அல்லது திருத்துவதற்கு முன்வைக்கப்படும் காரனங்களுள் இனப்பிரச்சனை தீர்வுக்கான பொறிமுறையாகவும் இது அமைய வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பை உள்ளடக்கியதுமாகும்.இதனால் பெரும்பாலும் மக்கள் தீர்ப்பினால் அங்கீகரிக்கப்பட வேண்டியவற்றையும் உள்வாங்கக்கூடும்.அவ்வாறான நிலையில் பின்வரும் இரண்டு விதமான கடும் எதிர்ப்புக்களை அரசியலமைப்பு நிர்ணய சபை எதிர்கொள்ளவேண்டி ஏற்படலாம்.
01)நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவைப்படும்போது சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்க மேலாண்மையுடைய மனோபாவத்துக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் அதிகரித்து காணப்படுவது.
02)சிங்கள-பௌத்த பேரினவாத மேலான்மை குடிகொண்ட சிங்கள மக்கள் நாட்டில் பெரும்பான்மையாக வாழ்கின்ற நிலைமை காணப்படுவது.
இத்தகைய சூழலில் பெரும்பான்மையாக சிங்கள மக்களின் மன உரமூட்டலுக்கு எதிராக செயல்படுவதற்கு அச்சமூகம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயலாற்ற துணிந்துகொள்வதில் நடைமுறைச்சிக்கல் இருப்பது வெளிப்படையானது.அதுமட்டுமன்றி இதே மனோபாவமுடைய மக்கள் பெருகிக் காணப்படுவதனால் மக்கள் தீர்ப்பு அவர்களுக்கு வலிமையுடையதாக அமைந்துவிடக்கூடிய சாத்தியமே அதிகம் காணப்படுகின்றது.
ஏனெனில் சமதர்ம கொள்கையுடைய அரசியல் கட்சி சார்ந்த அரசியல் பிரதிநிதிகள் கட்சியின் அபிமானிகள் கூட இனவாதச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் தோரணையில் எழுதியும் பேசியும் செயற்பட்டும் வரும் சூழலையும் தருணங்களையும் நாம் கண்கூடாகவே பார்ப்பதினால் இவ்வாறான ஐயப்பாடுகள் மேற்கிளம்புவது ஆச்சரியத்துக்குரியதல்ல.
நமது நாட்டின் இனப்பிரச்சனை என்பது சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமான ஒரு பிரச்சனை போன்று நோக்கும் ஒரு நிலையும் கட்டமைப்பு மாயையும் இருந்துவருவதை நிதர்சனமாக பார்க்கின்றோம்.இது நமது நாட்டின் இனப்பிரச்சனையின் உண்மை நிலைக்கு புறம்பானதாகும்.சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் அதே போன்று தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் என்றும் சில பிரச்சனைகள் இருந்துவருவது உரத்துச்சொல்லப்பட வேண்டிய ஒன்றாகும்.
இலங்கை முஸ்லிம்களின் இருப்பியல் சார்பு ஒரு இக்கட்டானதும் கைசேதப்படக்கூடிய வகையிலும் அமைந்திருக்கின்ற யதார்த்த பாங்கு உள்வாங்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமுமாகும்.குறிப்பாக மொத்த முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் இவ்விரு மாகாணங்களுக்கு வெளியில் ஏனைய மொத்த முஸ்லிம்களில் மூன்றில் இரு பங்கினர் வாழ்கின்றனர்.
இதனாலும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்,நெருக்குவாரங்கள் என்பன ஒருமித்தும்,வேறுபட்டும் காணப்பட்டு ஒரு பொறிமுறையைப் பெற்றிருக்கின்றது.இதற்கேற்ப முழு நாட்டிலும் வாழும் முஸ்லிம்களுக்கான தீர்வுப்பொதி என்ற வகையில் நமது மக்களின் அரசியல் பிரதிநிதிகள்,புத்திஜீவிகள்,சமூக செயற்பாட்டாளர்கள்,புலமை சார் சமூகத்தினர்கள் உலமாக்கள்,சிவில் சமூகம் போன்றவர்கள் ஒன்றுகூடி ஒரே வகையான தீர்வாக முன்வைக்கும் முன்னகர்ச்சியை மேற்கொண்டதாக காணப்படவில்லை.
இவ்வாறு காணப்படாமை என்பது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டும் உரித்தான ஒரு பலவீனமாக பார்க்கப்படுகின்றது.ஆனால் இவ்வாறான ஒன்றுகூடல் நிகழ்ந்தாலும் முஸ்லிம்களுக்கு ஒரே வகையான தீர்வென்று முன்வைக்கக் கூடிய கட்டமைப்பை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு யதார்த்தமாகும்.யதார்த்தங்களை மீறி நடப்பதாயின் அது ஒரு அற்புதமாகத்தான் இருக்க முடியும்.
வடக்கு,கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் இயன்றவரை பிரச்சனைகள் தோன்றும்போது அந்த சூழலுக்கு ஏற்றவகையிலும் அந்தந்த சந்தர்ப்பத்துக்கான நிவாரணமாகவும் அடைவுகளை பெற்றுக்கொள்ளும் நகர்ச்சியைக் கொண்ட இயங்குதளத்தை அல்லது போக்கை கடைப்பிடித்துக்கொள்ளும் ஒரு கோணம் நீண்டகாலமாக இருந்துவருவது அவதானிப்புக்குரியது.நமது நாட்டைப் பொறுத்தவரை சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளின் கொதிப்புக்கு முதலிரையான சமூகமாக முஸ்லிம்களே இருக்கின்றனர்.இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக 1915 இல் இடம்பெற்ற சிங்கள , முஸ்லிம் இனமோதலைக் குறிப்பிட முடியும்.
விதிவிலக்காக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களை கருத்தில் கொண்டு முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் அல்லது தென்கிழக்கு அலகு என்ற திட்டத்தையே இதுவரை முன்வைத்துள்ளனர்.இதில்கூட சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர்களின் அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக கட்சி நலன் சார்ந்து நின்று ஆட்சேபனைகளையும் குறுக்கீடுகளையும் எதிர்க்கேள்விகளையும் முன்னிறுத்தி காரியமாற்றுபவர்களாகவும் உள்ளனர்.
திட்டவட்டமான ஒரு தீர்வுப்பொதியாக இலங்கை முஸ்லிம்களை முழுமையா உள்ளடக்கி பேசுவதில் சில தடைகள் இருப்பது தவிர்க்க இயலாதது.இதனால் வடக்கு,கிழக்கு முஸ்லிம்களை முன்னிறுத்தி பேசும் தீர்வுகளில் அக்கறைகாட்டுவதென்பது இனச்சுத்திகரிப்புக்கும் பல்வேறு உயிர் அழிப்புக்கும் பல்வேறு பொருளாதார இழப்புக்களுக்கும் வெகுவாக ஆட்பட்டு பாதிக்கப்பட்டுவந்திருப்பதனாலாகும்.
என்றாலும் இவ்விரு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் முன்வைக்கும் தீர்வுத்திட்டத்தில் நேரடியாக ஏனைய மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களை உள்ளடக்காவிட்டாலும் கூட அவர்களுக்கு ஒரு பலத்தை அல்லது ஒரு பின்புல சக்தியாக இத்தீர்வுத்திட்டத்தினூடாக பாதுகாப்பு அரணாக அமைந்து அவர்களையும் உள்ளடக்கிய முழு முஸ்லிம் சமூகத்துக்கான ஒரு குரலாகவும் அமையுமென்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலாகும்.
அரசாங்கத்துடன் தமிழர்கள் பேசி ஒரு தீர்வை எட்டிக்கொள்ள முனைகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் திடீரென முஸ்லிம்கள் அதற்குள் புகுந்து எங்களுக்கும் தீர்வு வேண்டும் என கூக்குரலிட்டு தமிழர்கள் தமது உரிமையை அடைந்துகொள்வதற்கு ஒரு தடைக்காரணியாக முஸ்லிம்கள் இருந்துவருகின்றனர் என்கின்ற ஒரு கருத்து தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வேரூன்றப்பட்ட,உரமூட்டிய உரையாடலாக நடந்துவருவதும் நமது கவனங்களுக்கு புறம்பானதல்ல.
உண்மையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு முன்வைக்கப்படும் ஒரு சந்தர்ப்பத்தில் அதுவும் தீர்வை வழங்கக்கூடிய அரசாங்கம் அதற்கான முனைப்பைக் காட்டுகின்ற போது முஸ்லிம் சமூகம் அந்த நிலையில் தமது பிரச்சனைகள் பற்றி பிரஸ்தாபிக்காதும் பேசாதும் இருந்துவிட்டால் அவர்களுக்கான தீர்வு எப்படி சாத்தியமாகும்?இந்த தவறை செய்தால் மீண்டும் ஒரு குழப்பகரமான பிணக்குகளையும் அழிவுகளையும் உருவாக்கித்தான் தீர்வைத்தேட வேண்டிய ஆரோக்கியமற்ற ஒரு நிலைக்கு இட்டுச்செல்லக்கூடியதாக அமையும்.
இதனை தவிர்ப்பதற்காகவும் அதிகாரப் பகிர்வுகளை முன்வைக்கக்கூடிய அதிகாரத்துவமுடைய அரசாங்கம் நியாயங்களைக் காண முன்வரும்போது அதில் பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் என்ற வகையில் முஸ்லிம் மக்களும் தமது பிரச்சனைக்கான தீர்வை தேடிக்கொள்வது ஒரு முன்மாதிரியானதும் அமைதியானதுமான முறைமைகளினூடாக பிரச்சனைகளை முறியடித்துக்கொள்வதற்கு முனைகின்ற ஒரு நகர்வின் பக்கமான செயற்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டும்.
அவசியத்தின் அடிப்படையில் தேவையான விட்டுக்கொடுப்புக்களை கொண்ட நெகிழும் தன்மையுடைய கருத்தியல்களை திரட்சியாகக் கொண்ட சாத்தியமான தீர்வுகளை நாம் அடைந்துகொள்வதற்காக நமக்குள் ஒரு கட்டமைப்புடன் கூடிய பொறிமுறைகள் வகுக்கப்படுவதை இன்றைய சூழல் நமக்கு அவசியப்படுத்தியிருக்கின்றது.
இந்த சூழலை சரியாக நாம் பயன்படுத்திக்கொள்வதற்கு தவறுவோமாயின் புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் அல்லது மாற்றத்தினூடாக முன்னகர்த்த உத்தேசிக்கப்பட்டிருக்கும் இனப்பிரச்சனைத் தீர்வில் முஸ்லிம் மக்களுடைய பிரச்சனை தீர்க்கப்படாத ஒரு பொறிமுறைக்குள் தள்ளிவிடும் ஆபத்தையும் அது எதிர்காலத்தில் வேண்டப்படாத விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியத்தையும் கவனத்திலெடுத்து இந்த யாப்பு நமக்கு ஆப்பாக மாறாமல் பாதுகாப்போம்.
Read More
avathani Media Network

மருதமுனை ஜம்'இய்யா 5வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம்

 (காமிஸ் கலீஸ்)
இலங்கை நாட்டின் 68வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மருதமுனை இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்'இய்யா) 5வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் இவ் இரத்ததான ஏற்பாட்டில் மருதமுனையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமது பங்களிப்பினைச் செய்துள்ளனர். அதே போன்று இவ்வருடமும் ஆர்வமுள்ள அனைவரும் பங்குபற்றி இன்னொரு உயிரைக் காக்க எம்மால் இயன்றதொரு பங்குபற்றலினை வழங்க உறுதிகொள்வோம்.
Read More