
காட்டு யானை ஊடுருவல் : 4 குடியிருப்புக்கள் சேதம்
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லதண்ணியோடை பிரதேசத்தில் உட்புகுந்த காட்டு யானையொன்று அங்குள்ள நான்கு குடியிருப்புக்களை சேதப்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்குள் 70 க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் பயிர் நிலங்கள் யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.
இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கடந்த வருடமும் இது போன்று நூற்றுக்கணக்கில் வீடுகளை உடைத்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர் நிலங்களையும் யானை அழித்திருந்தது. இந்த நிலையில் இவ்வருடம் இப்பிரதேசத்திற்குள் புகுந்துள்ள யானையானது 2500 - 3000 ஏக்கர் வரையில் பயிர்களை அழிக்கும் என்பதுடன் கடந்த வருடம் போன்று வீடுகளையும் உடைக்கும் என பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த வருடத்தில் வீடுகள் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நட்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை.
காட்டு யானைகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு குறிப்பிட்ட யானைகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லுதலாகும். அத்துடன் யானைப்பாதுகாப்பு வேலிகளையும் அமைத்தல் வேண்டும். அத்துடன் தொடர்ச்சியான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்றார்.
