
சம்மேளன நிருவாக இரகசியங்கள் எவ்வாறு வெளியில் கசிகின்றன?
(முஹம்மது நியாஸ்)
காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின்
சம்மேளனத்தில் வாராந்தம் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் நடைபெறுகின்ற பொதுக்கூட்டம்
மற்றும் சில அவசர, அவசிய சந்திப்புக்களின் போது பரிமாறப்படுகின்ற, விவாதிக்கப்படுகின்ற இரகசியமான விடயங்கள் வெளியிலுள்ள நபர்களுக்கு எவ்வாறு
கிடைக்கப்பெறுகின்றன என்பது இன்று சமூக வலைத்தளங்களில் ஒரு பேசுபொருளாக
உருவாகிக்கொண்டிருக்கிறது.
அண்மையில் சம்மேளனத்திற்கும் காத்தான்குடியிலுள்ள
சிவில் அமைப்புகளுக்குமிடையிலான சந்திப்பின் போது அதில் மௌலவி ஸஹ்றானைப்பற்றி
தாருல் அதர் அமைப்பின் சிரேஷ்ட பிரச்சாரகர் மௌலவி அஸ்பர் (பலாஹி) தெரிவித்த முறைகேடான
கருத்துக்களும் ஏனையோர் பகிர்ந்துகொண்ட விடயங்களும் மௌலவி ஸஹ்றானுக்கு
மிகத்துல்லியமான ஒலிப்பதிவுகளாக கிடைக்கப்பெற்றிருந்தன..
சம்மேளனத்தில் சந்திப்புக்கள் நடைபெறுகின்றபோது அந்த
சந்திப்புக்களை Live Update செய்யக்கூடிய அளவுக்கு அங்கே நடைபெறுகின்ற விடயங்கள் வெளிச்சத்திற்கு வருவதாக
மௌலவி ஸஹ்றான் தன்னுடைய சொற்பொழிவின் போது குறிப்பிட்டார். இந்த விடயத்தை
செவியேற்ற சிலர் மௌலவி ஸஹ்றான் சம்மேளனத்தில் ஒற்றர்களை வைத்திருக்கிறார் என்றும்
அவ்வாறு ஒற்றர்களை வைத்திருப்பது இஸ்லாத்தில் கூடுமா என்றும் சமூக வலைத்தளங்களில்
மயிர் பிளக்கும்வரைக்கும் ஆய்வு நடாத்திக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.
இந்த விடயத்தை பொறுத்தவரைக்கும் பொதுவாகவே சம்மேளனம்
என்ற அந்த நிறுவனத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற கணிசமான நிருவாகிகளுக்கும் சரி
உறுப்பினர்களுக்கும் சரி, தங்களுடைய நிறுவனம் தொடர்பான இரகசியத்தை பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற
பொறுப்புணர்வு கிஞ்சித்தும் கிடையாது என்பது முதலாவது உண்மையாகும்.
நான் கடந்த வருடம் 2014ம் ஆண்டு நாட்டில் இருந்த போது என்னுடைய கணினியில் சுமார் 250MB க்கும் அதிகமான கொள்ளளவைக்கொண்ட
ஒரு Folder இருந்துவந்தது. அண்மையில்தான் என்னுடைய கணினியை Format பண்ணியபோது அது தேவைப்படாது
என்று நீக்கிவிட்டேன்.
அந்த Folder காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் சுமார்
இரண்டு மாதகாலம் வாராந்தம் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை
அந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நபர்களே எனக்கு மின்னஞ்சல் வாயிலாகவும்
நேரிலும் கையளித்த ஒலிப்பதிவுகளாகும். அதில் எனக்கு தெரிந்த நபர்களும் இருக்கிறார்கள், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல்
அனாமதேய மின்னஞ்சல்களின் வாயிலாக அனுப்பிய நபர்களும் இருக்கிறார்கள்.
இதுதவிர காத்தன்குடியிலுள்ள சில ஊடகவியலாளர்களையும்
ஊடகம் என்னும் பெயரால் படங்காட்டிகொண்டிருப்பவர்கள் பலரையும் உள்ளடக்கிய
காத்தான்குடி மீடியா போரம் என்னும் அமைப்பில் சில மாதங்கள் நான் அங்கத்தவராகவும், உறுப்பினராகவும் இருந்தேன்.
அதே அமைப்பில் காத்தான்குடியைச்சேர்ந்த சில மூத்த
ஊடகவியலாளர்களான நூர்தீன், ஜெலீஸ், முஸ்தபா மௌலவி, டீன் பைரூஸ் ஆகியோரும் அப்போது சம்மேளன நிருவாக உறுப்புரிமையில் இருந்துவந்தார்கள்.
இவர்கள் சம்மேளன சந்திப்புகளின்போதும் வாராந்த பொதுக்கூட்டங்களிலும்
கலந்துகொள்வார்கள். மாத்திரமல்லாது அங்கே பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட விடயங்களை மீடியா போரத்தினுடைய சந்திப்புக்களின் போது அதன்
ஏனைய சக அங்கத்தவர்களான எம்மிடம் மிகவும் சாதாரணமாகவும் தாராளமாகவும்
பகிர்ந்துகொள்ளக்கூடியவர்களாகத்தான் இருந்து வந்தார்கள்.
சம்மேளன கூட்டங்களின் போது பேசப்படுகின்ற விடயங்கள்
ஒரு இரகசியமே இல்லை என்று எண்ணக்கூடிய அளவுக்கு சம்மேளனத்தில் இந்த வாரம் என்ன
விடயம் பேசப்பட்டது என்ற விவகாரங்களை அலசி ஆராய்ந்ததன் பிறகுதான் காத்தான்கு
மீடியா போரத்தினுடைய சந்திப்பே பாத்திஹா ஓதி துவக்கப்படும். இது எந்தளவுக்கென்றால்
சம்மேளனத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை ஏனைய மீடியா போரத்திலுள்ள அங்கத்தவர்களுக்கும்
அறிவிக்கவேண்டும் என்பதற்காகவே காத்தான்குடி மீடியா போரத்தில் சில அவசர, விஷேட கூட்டங்கள் கூட இரவு
நேரங்களில் கூட்டப்பட்டிருக்கின்றன, அக்கூட்டங்கள் அனைத்திலும் நான் பங்கேற்றிருக்கிறேன்.
மேலும் கடந்த வருடம் (2014)ம் ஆண்டின் ஆரம்பத்தில் நான் சில விடயங்களில் சம்மேளனத்தை கடுமையாக
விமர்சித்தமைக்காக சம்மேளனத்தினால் எனக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டு அதற்கான பொறுப்பும் ஒரு இரகசிய(?)
குழுவிடம் கையளிக்கப்பட்டது. அந்த இரகசியக்(?)குழுவானது காத்தான்குடியை அண்மித்த ஒரு ஒரு மாவட்டத்திற்கு சென்று அங்கே பிரபல
சட்டத்தரணியையும் சந்தித்து எனக்கு சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனையையும்
பெற்றுக்கொண்டது.
போன வேலையை முடித்துக்கொண்டு அந்த இரகசிய(?)க்குழு காத்தான்குடி எல்லையை
கூட வந்தடைந்திருக்காது. ஆனால் அக்குழு எங்கே சென்றது, எந்த சட்டத்தரணியை சந்தித்தது, என்ன விடயங்களை பேசியது என்ற
விபரங்கள் என்னுடைய கையடக்க தொலைபேசிக்கு ஒரு அனாமதேய இலக்கத்திலிருந்து
குறுந்தகவலாக வந்தடைந்தது. பின்னர் நான் அதை விசாரித்தபோது அது ஊர்ஜிதமானது என்பதை
அறிந்துகொண்டேன்.
சம்மேளனம் எனக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக விஷேடமாக
ஏற்பாடு செய்த இரகசிய(?)க்குழுவினுடைய அமானிதம் காக்கின்ற இலட்சணம் இவ்வாறுதான்
இருந்தது.
இவை எல்லாவற்றையும் விடவும் காத்தான்குடியில் பழம்
பெரும் ஊடகவியலாளரும் பத்திரிகையாளருமான என்னுடைய ஊடக ஆசான் புவி MI. றஹ்மதுழ்ழாஹ்வை நம்
எல்லோருக்கும் நன்கு தெரியும். அவருக்கு சம்மேளனத்தில் நடைபெறுகின்ற கூட்டங்கள்
முடிவடைத்து மினிட் எழுதுவதற்கு முன்னரே அங்கு நடைபெற்ற விடயங்கள் அனைத்தையும்
விலாவாரியாக விபரிப்பதற்கு சம்மேளன நிருவாகத்தினுள்ளேயே பல நபர்கள் இருந்திருக்கிறார்கள்.
சம்மேளனத்தின் உள்வீட்டு ஊழல்களை புவி றஹ்மதுழ்ழாஹ்
தன்னுடைய பத்திரிகையின் வாயிலாக பல தடவைகள் வெளிக்கொணர்ந்தபோது அதிர்ச்சியில்
உறைந்தது சம்மேளனத்தின் உயர்மட்டம். இந்த தகவல்களை எல்லாம் சம்மேளன
உறுப்புரிமையில் இருந்த ஜெமீல் எனும் பெயரையுடைய ஒருவர்தான் வெளியில்
தெரிவிக்கிறார் என்று சந்தேகப்பட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில் சம்மேளன நிருவாகிகள் சிலர் அவர்மீது எகிறிப்பாய்ந்த வரலாறுகளும்
இருக்கத்தான் செய்கின்றன.
சம்மேளனத்தின் நிருவாகத்தினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகின்ற பத்திரிகையாளர்
புவி றஹ்மதுழ்ழாஹ்வுக்கே நிருவாக இரகசியங்களை ஏராளமாகவும் தாராளமாகவும் வழங்கியுதவுகின்ற
அளவுக்கு அங்கே சில எட்டப்பர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் மௌலவி ஸஹ்றானுக்கு
மாத்திரம் பிரத்தியேக ஒற்றர்களை உள்ளே அனுப்பி சம்மேளனத்தின் இரகசியத்தை
வெளிக்கொணர்வதற்கு என்னதான் அவசியம் இருக்கிறது?
இதற்கு மேலும் இந்த நிருவாக கட்டமைப்பைப்பினுடைய இரகசியம் பேணும் இலட்சணத்தை
நான் சொல்லித்தான் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டுமா?
மௌலவி ஸஹ்றானுக்கு சம்மேளனத்தினுள்ளே பிரத்தியேக ஒற்றர்கள்
இருக்கிறார்களா, இல்லையா என்பது அழ்ழாஹ்வின் மீதாணையாக எனக்குத்தெரியாது. எனக்கு
சம்மேளனகூட்டத்தில் பரிமாறப்படுகின்ற விடயங்களை வழங்கியவர்களும் நான் நியமித்த
என்னுடைய ஒற்றர்கள் கிடையாது. அவ்வாறு நான் ஒற்றர்களை நியமித்து உள்ளே ஊடுருவ
ஒருபோதும் முயற்சித்ததும் இல்லை.
ஆனால் சம்மேளனத்தின் நிருவாக இரகசியங்கள் ஒரு
நாட்டின் இராணுவ இரகசியத்தைப்போன்று ஒற்றர்களை உள்ளே அனுப்பி உளவு பார்த்துத்தான்
அறிந்துகொள்ளவேண்டும் என்கின்ற எந்தவொரு அவசியப்பாடுமில்லாத வகையில் அது ஒரு
திறந்த புத்தகமாகவே இருந்து வருகின்றது என்ற உண்மையினை சம்மேளன நிருவாகமும் அதன்
அங்கத்தவர்களும் பொதுமக்களும் பொறுப்புணர்வுடன் புரிந்துகொள்ள வேண்டும்.
என்னைப்பொறுத்தவரையில் சம்மேளனத்தின்
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு கீழே இறங்கி வருகின்ற ஒரு அங்கத்தவரை
அழைத்து "என்ன நடந்தது" என்று கேட்டாலே போதுமானது. அவர் முதன் முதலாக யார் பாத்திஹா ஓதி ஆரம்பித்தார் என்று அந்த நபருடைய
இனிஷியல் தொடக்கம் இறுதியாக ஸலவாத்து(?) ஓதி கூட்டத்தை நிறைவு செய்த சம்மேளன
நிருவாகியுடைய வரலாறு வரைக்கும் அட்சரம் பிசகாமல் A to Z இரண்டாம் வாய்ப்பாடு போன்று ஒப்புவிக்கின்ற அளவுக்கு திறந்த மனதுடன் வாக்குமூலமளிப்பார்
என்பதே என்னுடைய ஊடக வரலாற்றில் நான் கண்ட அனுபவமாகும்.
இரகசியம் பேணுதல் என்பது சம்மேளனத்திற்கு
சாத்தியமற்றது.
காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின்
சம்மேளனத்தை பொறுத்தவரைக்கும் அது ஒரு தனியான நிறுவனம் அல்ல. மாறாக காத்தான்குடி
பிரதேசத்திலுள்ள சுமார் நூற்றியைம்பதுக்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்களை
உள்ளடக்கிய ஒரு கூட்டு நிறுவனமே சம்மேளனமாகும். அதனால்தான் அதனை சிலர் தாய்
நிறுவனம் என்றழைக்கிறார்கள். இந்த நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புக்களிலுமுள்ள
நிருவாகிகள் அனைவரும் ஒரு நிறுவனத்தை வழிநடாத்துகின்ற நிருவாகவியலை
திறம்படக்கற்றுத்தேர்ந்த வளவாளர்களோ அல்லது ஒரு நிருவாக இரகசியத்தை எவ்வாறு
அமானிதமாக பேணிப்பாதுகாப்பது என்ற இஸ்லாமிய வழிகாட்டல்களை பின்பற்றியொழுகுகின்ற
புண்ணியவான்களோ கிடையாது.
மாறாக அவர்களில் சம்மேளனத்தின் செயற்பாடுகளோடு, அதன்
நிருவாகிகளோடு உடன்பட்ட கருத்துக்களை உடையவர்களும் இருக்கிறார்கள், முரண்பட்ட சிந்தனை மற்றும்
தனிப்பட்ட விரோதங்களை மனதில் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்பேர்ப்பட்ட நபர்களை உடன் வைத்துக்கொண்டு தங்களுடைய நிறுவனத்தினுடைய நிருவாக
இரகசியங்களைப்பற்றி கலந்துரையாடுகின்றபோது அவை வெளியில் கசிவது ஒன்றும்
ஆச்சரியமல்ல. என்னைப்பொறுத்தவரை சம்மேளனத்தின் நிருவாக இரகசியங்கள் கசிகின்றன
என்பதை விடவும் அவை மடைதிறந்த வெள்ளமாக பிரவாகமெடுத்து ஓடுகின்றன என்பதே சரியான
வாக்கியமாகும்.
இதை ஏன் நான் இங்கே பகிரங்கமாக பதிவிடுகிறேன் என்றால் அதற்கு இரண்டு பிரதான
காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று:
இலங்கை நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் இல்லாதவாறு காத்தான்குடியிலுள்ள
அத்தனை சமூக அமைப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்படுகின்ற ஒரு பழம் பெரும்
நிறுவனமான, ஊர்மக்களால் தாய் நிறுவனம் என்று அழைக்கப்பட்டக்கூடிய ஒரு
பொறுப்புவாய்ந்த நிறுவனத்திற்கு இவ்வாறான வெகுளித்தனமான நிருவாகக்கட்டமைப்பு
ஒருகாலும் ஏற்புடையதல்ல. மாறாக அதன் நிருவாகமானது ஒரு இரகசியமும் அமானிதமும்
பேணக்கூடிய இறையச்சமுள்ள பொறுப்புதாரிகளை உள்ளடக்கிய கட்டுப்பாடுகள் பலவற்றுக்கும்
உடன்பட்டு நடக்கின்ற நபர்களை கொண்ட நிருவாகமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டவேண்டிய கணக்கறிக்கைகள் மற்றும் இன்னபிற
விபரங்களில் பல குளறுபடிகள், நம்பிக்கை மோசடிகள் இடம்பெற்றுவருவதாக உள்ளூர்
ஊடகங்கள் வாயிலாக சுட்டிக்கடப்பட்ட போது அது பற்றி வெளிப்படைத்தன்மையற்ற விதத்தில்
மௌன விரதம் அனுஷ்டிக்கின்ற சம்மேளனம் தன்னுடைய நிருவாக இரகசியங்களை மாத்திரம்
இவ்வாறு பரத்தப்பட்ட புளுதியைப்போன்று காற்றில் பறக்கவிடுவது அதனுடைய சீரற்ற
நிருவாக நடைமுறையினையே பிறிதொரு கோணத்தில் படம்பிடித்துக்காட்டுகிறது.
இரண்டு:
சம்மேளன ஒன்றுகூடல்களின்போது கலந்துரையாடப்படுகின்ற விடயங்களை வெளியிலிருந்து
யாருமே அதற்கென்று பிரத்தியேக ஒற்றர்களை உள்ளே அனுப்பி அங்கு நடப்பதை ஒட்டுக்கேட்கவேண்டிய
அவசியமில்லை. மாறாக கூட்டங்கள் நடந்து முடிந்து வெளியில் வந்த மறுநிமிடமே அங்கே
பேசப்பட்ட விடயங்கள் அனைத்தையும் நாறிப்போன கெழுத்திமீனுக்கு ஒப்பாக நாற்சந்தியில்
நின்று கொண்டு நான்குபேருக்கும் கூறிவிற்கின்ற நபர்கள் அந்த சம்மேளன
நிருவாகத்தினுள்ளேயே ஊடுருவியிருக்கிறார்கள். அந்த எட்டப்பர்களை சம்மேளன நிருவாகம்
முதலில் அடையாளம் காணவேண்டும். அப்பேர்ப்பட்டவர்களுடைய விடயத்தில் எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்
அப்படியிருக்கின்றப்போது மௌலவி ஸஹ்றான் பிரத்தியேக ஒற்றர்களை அனுப்பித்தான் சம்மேளன
மற்றும் தஃவா அமைப்புக்களுடனான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை ஒலிப்பதிவுகளாக
பெற்றுக்கொண்டார் என்று அபாண்டமாக பழிபோடுவது எந்த வகையில் நியாயமானது?
எனவே இறுதியாக,
சம்மேளன நிருவாகக்கூட்டங்களின்போது என்னென்ன விடயங்கள் பரிமாறப்படுகின்றன
என்பதை சம்மேளனத்திலுள்ள நிருவாகிகளும் அந்த கூட்டங்களில் கலந்துகொள்கின்ற
நபர்களும்தான் வெளியிலுள்ளவர்களிடம் பகிரங்கப்படுத்துகிறார்களே தவிர அங்கே இரகசிய
ஒற்றர்களை அனுப்பி யாரும் ஒலிப்பதிவு செய்வது கிடையாது. ஒருவாதத்திற்கு அவ்வாறு
ஒற்றர்கள் உள்ளே நுழைகிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் சம்மேளனத்தில்
உறுப்புரிமையில் இல்லாத வெளியாட்களை நிருவாக கூட்டங்கள் நடைபெறுகின்ற போது உள்ளே
அனுமதித்ததற்காக அதற்கும் இந்த சம்மேளன நிருவாகமே பொறுப்புக்கூற வேண்டும் என்ற
விடயத்தை முகநூலில் அவதூறு பரப்பித்திரிகின்ற சம்மேளனத்தின் கடைநிலை உறுப்பினர்களுக்கு
அறிவுரையாக சமர்ப்பித்து முடிக்கிறேன்.



































