ஊடகப்பிரிவு, - நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
பாலமுனை, காத்தான்குடி மக்களின் தீர்க்கப்படாத நீண்டகால தேவையாக இருந்த கர்பலா வீதி அபிவிருத்தி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நேற்று முன்தினம் (24.02.2015) பாலமுனை சமூக பிரதிநிதிகளோடு NFGG-UNP பிரதிநிதிகள் நடாத்திய சந்திப்பின்போதே இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் பத்மராஜா, மேற்படி வீதி அமைப்பிற்குப் பொறுப்பான பொறியியலாளர் லிங்கேஸ்வரன் ஆகியோருடன் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், UNPயின் காத்தான்குடி அமைப்பாளர் HMM.முஸ்தபா, அதன் உறுப்பினர் KM.அலியார், NFGGயின் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் நளீமி, காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார் உட்பட பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து காத்தான்குடியின் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் NFGG மற்றும் UNP ஆகியன இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பாலமுனை மக்களால் போக்குவரத்துக்கு அதிகம் பாவிக்கப்படும் கர்பலா வீதி தொடர்பில் அதிக கவனத்துடன் NFGG-UNP பிரதிநிதிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
காத்தான்குடி பிரதேச அரசியல்வாதிகளால் ஒவ்வொரு தேர்தல் காலங்களின்போதும் வாக்கு வேட்டைக்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வீதியின் நிலை தொடர்பில் விரக்தியடைந்த பாலமுனை மக்கள் அண்மையில் கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் நடத்தி இருந்தனர். அதனைத் தொடர்ந்து பாலமுனை ஹஸனாத் ஜும்ஆ பள்ளிவாயலின் ஊடாக வேண்டுகோள் ஒன்றினை UNPயின் காத்தான்குடி பிரதேச அமைப்பாளர் HMM.முஸ்தபா அவர்களிடம் பாலமுனை மக்கள் கையளித்திருந்தனர். அதுபோலவே இவ்வீதி தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு NFGGயிடமும் பாலமுனை பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனை முக்கியமான விடயமாக எடுத்துக்கொண்ட NFGG-UNP பிரதிநிதிகள் கடந்த 11.02.2015 அன்று பாலமுனை பிரதேச மக்கள் ஒரு சிலரையும் அழைத்துக்கொண்டு கொழும்புக்குச் சென்று உரிய அதிகாரிகளைச் சந்தித்து இது தொடர்பில் நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தனர். அதன் பலனாக இது தொடர்பில் உரிய நடவடிக்களை மேற்கொள்ளுமாறு நெடுச்சாலைகள் அமைச்சர் கௌரவ ஹபீர் ஹாஸீம் அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அத்துடன் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரும் அறிவுறுத்தல் ஒன்றினையும் நெடுச்சாலைகள் அமைச்சிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னணியிலேயே கடந்த 23.02.2015 அன்று RDAயின் மாகாணப் பணிப்பாளர் அவர்களுக்கும் NFGG-UNP பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று மட்டக்களப்பு RDA அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்தே பாலமுனைப் பிரதேச மக்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் (24.02.2015) நடைபெற்றது.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட RDAயின் பிரதம பொறியியலாளர், 'இத்திட்டத்துக்கு சுமார் 150 மில்லியன் வரையில் தேவைப்படும் எனவும், இதை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்' பொதுமக்கள் முன்னிலையில் உறுதியளித்தார்.