மஹிந்த அரசு கற்றுக் கொண்ட பாடங்களை
மைத்திரி அரசும் கற்கும் நிலை ஏற்படலாம்!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
---------------------------------------
இன்றைய புதிய அரசாங்கமானது நாடாளுமன்றத் தேர்தலை ஒரு கலப்பு முறைமையின் கீழ் நடத்துவதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு முனைப்புக் காட்டி வருகிறது.
புதிய முறையின் கீழும் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தற்போது போன்று 225 ஆக பேணப்படும் என்றும் அரச தரப்பு தெரிவிக்கிறது.
அதாவது, நாட்டின் 160 தேர்தல் தொகுதிகளில் இருந்தும் தலா ஒருவர் என்ற வீதம் 160 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இதற்கு மேலாக 50 உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாக விகிதாசார முறையிலும் மேலும் 15 பேர் உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் மூலம் தெரிவாவர். இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அங்கு வாழும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டமும் ஒரு உறுப்பினரையாவது விகிதாசார முறையில் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் கூறப்படுகிறது. இவ்வாறானதொரு கலப்பு தேர்தல் முறையை அரசாங்கத்தின் கூற்றுப்படி மேலெழுந்த வாரியான பார்க்கப் போனால் சிறுபான்மையினருக்குப் பாதிப்பு இல்லை என்றுதான் கருத முடியும். ஆனால், அது அவ்வாறு நிச்சயமாக அமையப் போவதில்லை. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்த முறையின் மூலம் எவ்வாறு சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைச் சமப்படுத்த முடியுமென்பது பாரிய கேள்வியாகவே அமையப் போகிறது.
தொகுதி ரீதியில் பின்டைவைச் சந்திக்கும் போது மாவட்ட ரீதியாக அங்கு வாழும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை பிரதிநிதிகளுக்குச் சந்தர்ப்பம் என்பது ஒரு வெறும் மாயையே. அது மட்டுமின்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களின் சில தொகுதிகளில் கூட சிறுபான்மையிருக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக் கூடிய நிலைமையே புதிய தேர்தல் சீர்திருத்தத்தில் காணப்படுகிறது. இது சிறுபான்மை இன கட்சிகளுக்குள்ளும் பிரிச்சினைகளை தோற்றுவிக்கலாம்.
அது மட்டுமின்றி விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை, தொகுதிவாரி முறை என்ற கலப்பு தேர்தல் முறையானது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கு வெளியேயும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதிலும் ஐயமில்லை.
எனவே விடயத்தில் முஸ்லிம், தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ளேயே கலந்து பேசுவதுடன் பின்னர் தமிழ் பேசும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே தீர்மானத்துக்கு வந்து அரசுக்கு அழுத்தங்களை வழங்க வேண்டியது மிக அவசியம்.
விசேடமாக, முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இணைந்தும் ஒருவரை ஒருவர் அணைத்தும் செயற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். மேலும் வடமாகாணத்தில் சிலவேளைகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவமே இல்லாமல் செய்யக் கூடிய புதிய கலப்பு தேர்தல் முறை குறித்து அந்த மாகாணத்தை பிரதானமாக மையப்படுத்தும் முஸ்லிம் கட்சிகளின் மிகுந்த பொறுப்புடன் சிந்தித்து செயற்பட வேண்டும்.
புதிய தேர்தல் முறை தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளின் யோசனைகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயத்தில் சகல சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றாக நின்று தீர்க்கமான முடிவுடன் செயற்படுவது அவசியமாகும்.
18 முஸ்லிம் நாடாளு மன்ற உறுப்பினர்களை இன்று கொண்டுள்ள நிலையில் புதிய கலப்பு முறையின் கீழ் தேர்தல் ஒன்று நடத்ததப்பட்டால் சில வேளைகளில் 10 பேரைக் கூட முஸ்லிம் மக்கள் தங்கள் பிரதிகளாக அனுப்ப முடியாத துரதிர்ஷ்ட நிலை ஏற்படலாம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் பெரும்பான்மை மக்கள் வாழக் கூடிய பிரதேசங்களிலிருந்து தொகுதி ரீதியாக ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கூட தெரிவு செய்யப்பட முடியாத நிலைமையையும் இந்தப் புதிய தேர்தல் முறை நிச்சயமாக தோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை. இதனால் அந்த மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.
இந்தக் கலப்பு தேர்தல் முறைக்கு அமைய தெரிவு செய்யப்படும் எம்.பிக்கள் மற்றும் தெரிவாகும் முறைமைகள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அடுத்த தேர்தலிலேயே புதிய முறையை அமுல்படுத்தக் கூடாது என்று அமைச்சர் ரிஷாத் தெரிவித்துள்ளார்.
மக்களுக்குப் பழகிப் போன இன்றைய தேர்தல் முறையினை மாற்றி அவசரமாக புதிய தேர்தல் முறையை உடன கொண்டு வருவதால் மக்களும் குழப்பமடைவர் என்று அந்தக் கட்சி சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக் கொண்டு வந்துள்ளது.. அவ்வாறு மாற்றப்பட வேண்டுமென்றாலும் பல திருதங்களைச் செய்ய வேண்டுமென அது கோரியுள்ளது.
தொகுதி அடிப்படையில் 125 பேரையும் விகிதாசார அடிப்படையில் 100 பேரையும் தேசியப் பட்டியல் ஊடாக 25 பேருமாக 250 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாக தேர்தல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். அவ்வறாறு செய்தாலும் எதிர்வரும் தேர்தலிலேயே அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கக் கூடாது என்றும் அந்தக் கடசி உறுதியாக தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்யாது அரசாங்கம் நினைத்தபடி நடத்த முயற்சித்தால் மக்களுடன் வீதியில் இறங்கி பேராடுவோம் என்று அமைச்சர் ரிஷாத் சூளுரைத்து எச்சரித்துள்ளார்.
அதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் புதிய உத்தேச தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவில்லை. அந்தக் கட்சியும் மாற்றங்களை உட்புகுத்த வேண்டுமென்றே கோரி வருகிறது.
உத்தேச தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்திலும் அண்மையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமாஜ கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடியிருந்தனர். இது ஓர் ஆக்கபூர்மான சந்திப்பாக அமைந்ததாக கூறப்படுகிறது.
இந்த விடயத்தில் அனைவரும் இணைந்து செயற்பட்டால் அது நிச்சயமாக பலனளிக்கும். ஐக்கியப்பட்ட முன்னெடுப்புகளால் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட முடியாதபடி கடிவாளம் இட முடியும்
அதேவேளை, சிறுபான்மை இனத்தின் ஆதரவுடன் ஆட்சி பீடமேறிய இன்றைய நல்லாட்சி அரசும் அந்த மக்களின் நலன்களை, குரல்களை புறந்தள்ளி விட்டுச் செயற்படக் கூடாது அவ்வாறு செயற்பட்டால் மஹிந்த அரசு கற்றுக் கொண்ட பாடங்களை மைத்திரி அரசும் எதிர்காலத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

