முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடியில் அமைக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய நூதனசாலை, எதிா் வரும் (03ம் திகதி) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படலாம் என தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் எதிர்வு கூறியுள்ளதுடன், அங்கு 'உருவச் சிலைகளையும், உருவ பொம்மைகளையும் வைக்கலாம்' எனக் கூறி பத்வாவை வழங்கி வரும் ஆலிம்களான காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் SM அலியார் பலாஹி, ALM மும்தாஸ் (மதனி), MAM மின்ஹாஜ் (பலாஹி) மற்றும் ஊடகவியலாளர் MSM முஸ்தபா (பலாஹி), காத்தான்குடி இளம் உலமாக்கள் முன்னணியைச் சேர்ந்த ஆலிம்களுக்கு இன்று 30ம் திகதி திங்கட்கிழமை தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் மேற்படி விடயம் தொடர்பில் பகிரங்கமாக விவாதிப்பதற்கான அழைப்புக்களையும் நேரடியாகக் கையளித்துள்ளனர்.
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ளுஆ. ஆலியார் பலாஹியின் பெயருக்கு பிரதான முகவரியிடப்பட்டு 'அருங்காட்சியசாலையில் உருவச்சிலைகள் மற்றும் உருவ பொம்மைகள் வைக்கலாம் எனும் உங்களது மார்க்கத் தீர்ப்புத் தொடர்பாக...' எனும் தலைப்பில் மேற்படி அமைப்பின் தலைவர், செயலாளரால் கையெழுத்திடப்பட்டுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
இக்கடிதம் உங்களை பூரண உடல் நலத்துடனும், தூய இஸ்லாமிய சிந்தனையுடனும் சந்திக்கட்டுமாக!
கடந்த பல மாதங்களாக நமதூரில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால் அருங்காட்சியசாலை ஒன்று அமைக்கப்பட்டு வருவதையும், அதில் உருவச்சிலைகளையும், மற்றும் உருவ பொம்மைகளையும் காட்சிப்படுத்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நாம் நன்கறிவோம்.
இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் கேவலத்தை ஏற்படுத்தும் இந்த ஹராமான செயலுக்கு தாங்கள் துணை நிற்பதாகவும், அவ்வாறு அருங்காட்சியசாலையில் வணங்கப்படாத விக்கிரகங்களை வைக்கலாம் எனவும் தாங்கள் பத்வா கொடுத்து வருவதையும் அறிந்து வெட்கமும், வேதனையும் அடைகின்றோம்.
'இஸ்லாத்தில் வன்மையாகத் தடைசெய்யப்பட்ட உருவச்சிலைகளை அருங்காட்சியசாலைகளில் வைக்கலாம்' என தாங்கள் சொல்லும் பத்வா, அரசியல் இலாபம் கருதியும், மார்க்க அறிவற்ற வகையிலும் சொல்லப்படும் அறிவீனமான பத்வா என்று நாம் தெளிவாகக் குற்றம் சாட்டுகிறோம்.
'இல்லை.. இல்லை! நாம் அரசியல் இலாபம் கருதி இதைச் செய்யவில்லை. அருங்காட்சியசாலையில் உருவச் சிலைகளை வைக்க என்னிடம் ஆதாரமுள்ளது' என்று தாங்கள் கருதினால், எம்முடன் பகிரங்கமாக விவாதித்து அதை நிரூபணம் செய்யுங்கள். 'அருங்காட்சியசாலையில் உருவச்சிலைகளை வைக்கலாம்' எனும் உங்கள் கருத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதுதொடர்பில் எம்மோடு பகிரங்கமாக விவாதிக்க முன்வருவீர்கள். அவ்வாறு நீங்கள் விவாதிக்க முன்வந்தால் விவாதத்திற்கான முழு செலவையும் இன்ஷா அல்லாஹ் நாம் பொறுப்பேற்கிறோம்.
குறிப்பு 01:
அழகிய முறையில் விவாதமொன்று நடைபெற வேண்டுமாயின் அதற்கு முன்னர் ஓர் ஒப்பந்தம் அவசியம். ஆதலால் இந்த விவாதத்திற்கு ஒப்பந்தம் செய்து கொள்ள எதிர்வரும் 03.04.2015 வெள்ளிக்கிழமைக்கு முன்பாக (அருங்காட்சியசாலை திறப்பதற்கு முன்பாக) தங்களுக்கு வசதியான நாளையும், தங்களுக்கு வசதியான நேரத்தையும், தங்களுக்கு வசதியான இடத்தையும் குறிப்பிட்டு எமக்கு எழுத்து மூலம் அறிவிக்கும்படி அன்பாய் வேண்டுகிறோம்.
குறிப்பு 02:
அருங்காட்சியசாலையில் உருவச் சிலைகளையும், உருவ பொம்மைகளையும் வைக்கலாமெனக்கூறி முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தரப்பினர் எடுத்துக்காட்டும் 73 பக்க அறபு மொழியில் அமைந்த ஆய்வுகளை (?) வரிக்கு வரி வாசித்த பின்பே இந்த அறைகூவல் தங்களுக்கு விடுக்கப்படுகின்றது எனும் செய்தியை தகவலுக்காக தங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
உங்களுக்கு இந்த விவாத அறைகூவலை விடுக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த உலமாக்களை 'சின்னப் பொடியன்மார்கள்' என்றோ, 'நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான்கள்' என்றோ, 'இவர்களைக் கணக்கெடுக்கத் தேவையில்லை' என்றோ கூறி விவாதத்திலிருந்து நழுவ மாட்டீர்கள் என நல்லெண்ணம் வைத்து இம்மடலை நிறைவு செய்கிறோம் -
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





