எதிர்வரும் 28ஆம் திகதி 19ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முடியாமல் போனால் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அறிவித்த அரசாங்கம் சட்டச் சிக்கல்களில் சிக்கிக்கொண்டுள்ள சில எதிர்க்கட்சி உறுப்பினர்களே 19ஐ நிறைவேற்றுவதை சீர்குலைக்கும் நடவடிக்கைகளின் பின்னால் செயற்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டியது.
பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி கொறடாவின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நன்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்கம் சில அறிவிப்பை விடுத்தது.
இதன் போது 19ஆவது திருத்தம் தொடர்பாக ஆழமாக ஆராய வேண்டுமென்றும் அதற்கு கால அவகாசம் தேவையென்றும் எதிர் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் கேட்டனர். இதற்கு செவிமெடுத்து 19ஆவது திருத்தத்தை ஆராய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதற்கமைய எதிர்வரும் 27ஆம் 28 ஆம் திகதிகளில் விவாதம் காலை 9.30 முதல் நடத்தப்பட்டு 28ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தவும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் இணக்கப்பாடு காணப்பட்டது.
எனவே நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி இதனை நிறைவேற்ற அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் கயன்த கருணா திலக தெரிவித்தார்.
பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க -
19ஆவது திருத்தத்தை நிறைவேற்றாது தடுப்பதற்கு சட்டச் சிக்கல்களில் சிக்கியுள்ள சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மெளனமாக இருந்து கொண்டு பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கும் செயல்களை முன்னெடுக்கின்றனர்.
எதிர்வரும் 25ம் திகதி தான் இறுதி நாள். அன்றைய தினம் 19 ஐ நிறைவேற்ற முடியாமல் போனால் பாராளுமன்றத்தை கலைத்து பெதுத்தேர்தலுக்கு செல்வோம். அதன் பின்னர் ஏற்படுத்தப்படும் அரசில் இந்த 19ஐ நிறைவேற்றுவோம்.
பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு இலங்கை எங்கிருக்கின்றது என்பது தெரியாது. இந்நிலையில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இங்கு வருவது பெருமைக்குரியதாகும். பெரும்பாலும் அவர் இங்கு வந்து சென்ற பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படலாம்.
லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் விடயங்களில் பிரதமரோ அரசோ தலையிடுவதில்லை. அவ் ஆணைக்குழு தனது கடமைகளை சுயாதீனைமாக முன்னெடுக்கின்றது. இதில் எவரும் தலையிட முடியாது. அது தான் நல்லாட்சியாகும். ஆனால் எமது நாட்டில் இன்றும் நல்லாட்சியின் நடவடிக்கைகள் பழக்கத்தில் வரவில்லை என்றார்.
பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷத சில்வா-
அர்ஜுன மகேந்திரன் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த பாராளுமன்ற கூட்டத்தின் போது அனைத்து உறுப்பினர்களுக்கும் கையளிக்கப்பபடும்.
பந்துல குணவர்த்தன எம்.பி உட்பட வேறு சில எதிர்க்கட்சியினர் மத்திய வங்கி பிணை முறி விடையத்தில் 42 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். இதில் உண்மையில்லை. அரசை நெருக்கடியில் தள்ளுவதற்கு பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.
Virakesary
