Featured Home (TOP)

Recent Comments

Saturday, April 11, 2015

Unknown

யாழ். ஊடகவியாளர்கள் மீது பொலிசார் மேற்கொள்ளும் அடாவடி அச்சுறுத்தல்களுக்கு கிழக்கு ஊடக சங்கத்தின் வன்மையான கண்டனம்

(ஊடக அறிக்கை - கிழக்கு ஊடக சங்கம்)

யாழ். ஊடக அமையத்தின் தலைவர் த. வினோஜித், ஹிரு தொலைக்காட்சி செய்தியாளர் த. பிரதீபன் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் ஸ்ரீ மயூதரன் ஆகியோர் மீது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிசார் சிவில் உடையணிந்தவர்களாக மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து வழி மறித்து கத்தியால் குத்திக் கொலை செய்ய எத்தனித்த சம்பவம் தொடர்பில் கிழக்கு ஊடக சங்கம் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், பொதுச் செயலாளர் வீ. பத்மஸ்ரீ ஆகியோரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பான கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


கடந்த 07ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தூய குடிநீருக்கான கவனஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்று, யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருக்கையில், இம்மூவரையும் சிவில் உடையணிந்த இரண்டு பொலிசார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து இந்த அநாகரீகமான அச்சுறுத்தும் காடைத்தனத்தைப் புரிந்துள்ளனர்.

அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பி வந்த மேற்படி ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வந்து பெரும் பிரயத்தனங்களுடன் தமது முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ள போதிலும் பொலிசார் முறைப்படியான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காது தாக்குதல் நடாத்திய பொலிசாருடன் சமரசமாகிச் செல்லுமாறு அறிவுறுத்தியிருப்பது, இந்த நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின்போதுதான் ஊடகவியலாளர்களுக்கு எதிரான இவ்வாறான காடைத்தனங்களும், வெள்ளைவேன் கடத்தல்களும், தாக்குதல்களும் சர்வ சாதாரணமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. எனினும் கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் வாழ்ந்து வரும் மிகப் பெரும்பான்மையான தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் நல்லாட்சி யுகத்தைத் தோற்றுவித்திருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்திலும் இவ்வாறான கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படுவதானது, ஆட்சி மாற்றத்தின் அடிப்படை நோக்கத்தையே முற்றிலுமாகச் சிதறடிக்கச் செய்யும் செயற்பாடாகும்.

நூட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் பேணிப்பாதுகாத்து நிலை நிறுத்த வேண்டிய பொலிசாரே இவ்விதமான காடைத்தனங்களைப் பகிரங்கமாகப் புரியத் துணிந்தால், மீண்டும் இந்த நாட்டை விட்டும் ஊடகவியலாளர்கள் தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக புலம் பெயர்ந்து செல்ல வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடும். எனவே இவ்விவகாரத்தில் உடனடியாக பொலிஸ் மா அதிபர் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட பொலீசாருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், ஊடகவியலாளர்களை இவ்வாறான அச்சுறுத்தல்கள், தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வேண்டிய உத்தரவாதத்தையும் வழங்க வேண்டியது அவசியமாகும்.

குறித்த பொலிஸாரின் மிலேச்சத்தனமான இவ்வழிமறிப்புத் தாக்குதல் காரணமாக அச்சத்திற்கும், அசௌகரியங்களுக்கும் உள்ளாகியிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு கிழக்கு ஊடக சங்கமானது தமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட பொலிசாருக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்                                  வீ. பத்மஸ்ரீ
(தலைவர்)                                          (பொதுச் செயலாளர்)


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :