ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான முனைப்புக்கள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ‘ஏசியன் மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
மிகவும் இரகசியமான முறையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கையொப்பங்களைத் திரட்டி வருகின்றனர். நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த யோசனையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் அதன் பின்னர் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
75 பேருக்கு மேல் கையொப்பமிட்டு யோசனை முன்வைக்கப்பட்டால் அதனை சபாநாயகரினால் நிராகரிக்க முடியாது என்று கையொப்பங்களைத் திரட்டி வருகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்படுவதனைத் தடுக்கும் நோக்கில் இவ்வாறு நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
19ஆவது திருத்தத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நேரடியாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தரப்பினரே இவ்வாறு கையொப்பங்களைத் திரட்டி வருகின்றனர் – என்று ‘ஏசியன் மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
