( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்கள் நிந்தவூர் பிரதேச செயலகம் முன்பாக நேற்று அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினர்.
கடந்த அரசினாலும், இவ்வரசினாலும் தமக்கு வழங்குவதாக வாக்களிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இதுவரை தமக்கு வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்தே இக்கவனயீர்ப்புப் போராட்டம் இன்று இடம் பெற்றதாக கிராம சேவகர்கள் தெரிவித்தனர்.
இன்று கடமைக்குச் சமூகமளித்திருந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள் கறுப்பு நிறப்பட்டிகள் அணிந்து, பல்வேறு வாசகங்கள் கொண்ட சுலோக அட்டைகளுடன் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைப் பிரதேச செயராளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், உதவிப் பிரதேச செயலாளர் திரு.எஸ்.திரவியராஜ் ஆகியோரிடம் கையளித்தனர்.
இது குறித்துப் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீலிடம் கேட்ட போது 'கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மோட்டார் சைக்கிள்கள் இன்று வரை வழங்கப்படாமை வேதனையான விடயம்தான். இதனால் அவர்கள் இன்று மிகவும் அமைதியான முறையில் கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தி விட்டுத் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் எம்மிடம் கையளித்திருக்கின்றனர். இது குறித்து நான் அம்பாரை மாவட்டச் செயலாளருக்கு அறிவித்திருக்கிறேன். அவர் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விரைவில் இவர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக என்னிடம் தெரிவித்துள்ளார்' என பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் தெரிவித்தார்.
'இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள கிராம சேவக்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அம்பாரை மாவட்டத்திலுள்ள எமக்கு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை? இலங்கையில் அம்பாரை மாவட்டம் உள்ளடக்கப்படவில்லையா?' எனச் சில கிராம சேவை உத்தியோகத்தர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.