தேர்தல் முறைமை மாற்றத்தை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள். சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை எதிர்பார்த்து சந்தர்ப்பவாத அரசியல் நடத்துபவர்களே இதனை எதிர்க்கின்றனர் என அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
தற்போதைய முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு போதும் உறுதியளித்திருக்கமாட்டார். இது கட்டுக்கதை என்றும் அமைச்சர் நிராகரித்தார்.
கொழும்பு பிளவர் வீதியிலுள்ள எரிபொருள் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக்க இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேர்தல் முறைமை மாற்றத்திற்கான 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதனை நாட்டு மக்களும் எதிர்பார்த்திருக்கின்றனர். இதனால் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கோ ஜே.வி.பி.க்கோ அல்லது சிறு பான்மை இன கட்சிகளுக்கோ சிறிய கட்சிகளுக்கோ எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது.
எனவே இத்திருத்தத்திற்கு எவரும் அஞ்சத்தேவையில்லை.இதன் மூலம் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிக்கு மக்களுக்கு பொறுப்புக்கூறும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உருவாகுவார். விருப்புவாக்கு முறைமையானது நாட்டின் அராஜகத்திற்கே வழிவகுத்தது.
எனவே 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிய பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை எதிர்பார்த்திருப்போர் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் மூலம் ஆட்சியதிகாரத்தை பிடிக்க முயல்வோரே தேர்தல் முறைமை மாற்ற த்தை எதிர்க்கின்றனர்.
எனவே எதிர்ப்பவர்களை தேசத்துரோகி கள் என்றும் மக்கள் விருப்பத்திற்கு எதிரானவர்கள் என்றும் தான் கூறவேண்டும். அதேவேளை தற்போதைய தேர்தல் முறைமையிலேயே பொதுத் தேர்தல் நடத் தப்படுமென ஜனாதிபதி ஒருபோதும் கூறி யிருக்க மாட்டார்.இது சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் கட்டுக்கதையாகும் என்றார்.
