தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் கட்சிகளிடையே பொது இணக்கப்பாடு காணமுடியாவிட்டால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளார் என்று ஜே.வி.பி. தெரிவித்தது.
தேர்தல் சீர்திருத்தம் குறித்து இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருக்கின்றது. இதனையடுத்து நாளை மறுதினம் 13 ஆம் திகதி தேர்தல் முறை மாற்றம் தொடர்பான யோசனைகள் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய ஜே.வி.பி.யின் தலைவரும் எம்.பி. யுமான அநுரகுமார திஸாநாயக, இந்த அரசாங்கம் சிறுபான்மை பலம் கொண்ட அரசாங்கம். அது 100 நாள் வேலை திட்டத்தை முன்னெடுப்பதற்காக உறுதி மொழியை வழங்கியது. அதற்காக நிறைவேற்றுச் சபையும் அமைக்கப்பட்டது.
இவ்வாறானதோர் நிலையில் நிறைவேற்றுச் சபையில் நாம் அங்கம் வகித்தோம். 19 ஆவது திருத்தத்தை ஏற்படுத்தினோம். அதனை நிறைவேற்ற ஆதரவு வழங்கினோம். இன்று தகவல் அறியும் சட்ட மூலமே தயாராகி விட்டது.
ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட நிதிக் குற்றவியல் பிரிவு செயற்படுத்தப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகள் தொடர்பான பல குற்றச் சாட்டுக்களை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அரசு வழங்கிய 100 நாள் உறுதி மொழியின் கால அவகாசம் முடிந்து விட்டது. நிறைவேற்றுச் சபை எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அதன் கடமைகளும் நிறைவேற்றப்பட்டு விட்டன. எனவே அது தொடர்பில் நடவடிக்கைகளை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும்.
அரசினதும் நிறைவேற்று சபையினதும் காலம் முடிவடைந்த நிலையில் உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த ஆட்சியை நீடிப்பதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மக்கள் ஆணை கிடைக்கவில்லை. எனவே ஆட்சியை நீடிப்பது தார்மீக விரோதமாகும்.
2010 ஆம் ஆண்டு மக்கள் ஆணை வழங்கிய பாராளுமன்றமே தற்போது உள்ளது. அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐ.தே. கட்சியும் இணைந்து கூட்டாட்சி நடத்துவதற்கும் மக்கள் ஆணை வழங்கவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அணியும் நாட்டுக்குள்ளும் பாராளுமன்றத்திற்குள்ளும் குழப்பகரமான நிலைமையை ஏற்படுத்தி சீர்குலைவுகளை ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் யாரென்பது தொடர்பில் இன்று வரை சபாநாயகர் இறுதித் தீர்மானத்தை வழங்கவில்லை. இவ்வாறு பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன.
அரசியல் ஸ்திரமில்லாத நிலைமை ஏற்பட்டு அராஜக நிலை தோன்றியுள்ளது. எனவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாம் எமது பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.
மேற்கண்ட விடயங்களை முன்வைத்ததோடு தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலும் கலந்தாலோசித்தோம். விருப்பு வாக்கு முறை ஒழிக்கப்பட்டு விகிதாசார தேர்தல் முறைமையை ஆதரிக்கின்றோம் என்பதையும் அதேவேளை தேர்தல் முறைமை மாற்றத்தை உடனடியாக கொண்டு வந்து அமுல்படுத்த முடியாது என்பதனையும் ஜனாதிபதிக்கும் தெளிவுபடுத்தினோம். இதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார்.
இன்றும், நாளையும் அனைத்து கட்சிகளுடனும் இது தொடர்பாக பேச்சுக்களை நடத்தி இறுதி முடிவு காணப்பட்டு எதிர்வரும் 13 ஆம் திகதி தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக அமைச்சரவைக்கு பத்திரம் முன்வைக்கப்படுமென்றும் பின்னர் அமைச்சரவை அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேவேளை தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக பொது இணக்கப்பாட்டை காண முடியா விட்டால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தேர்தல் முறைமை மாற்றம் நிறைவேற்றப்படா விட்டாலும் பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்படுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார் என்றும் அநுர திஸாநாயக கூறினார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் ரி. லால்காந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Source - tamil leader
Source - tamil leader
