பல வருடங்களாக காத்தான்குடி மக்கள் எதிர் நோக்கி வரும் பாரிய பிரச்சினையாக காணப்படும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரி காத்தான்குடி நகரசபைக்கு முன்னால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
காத்தான்குடியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாத காரணத்தால் கடந்த சில வாரங்களாக வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரிப்பதில் நகரசபை அசமந்த போக்கினை கடைபிடித்துவருகிறது. இதனால் பொதுமக்களுக்கும் நகரசபை கழிவகற்றல் தொழிலாளர்களுக்கும் இடையில் தகராறுகளும் ஏற்படுகின்றன.
ஏற்கனவே இப்பிரச்சினைக்கு தீர்வுபெற்றுத்தருவதாக கூறி கடந்த நகரசபை நிர்வாகம் பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாகவும் ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இப்பிரச்சினைக்கு சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக நிரந்த தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி பிரதான வீதியில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதால் சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டு இருந்தது.
(ஜுனைட்.எம்.பஹ்த் )


