அவதானி.
நிரந்தரத் தீர்வின்றி தொடரும் காத்தான்குடி திண்மக்கழிவு முகாமைத்துவப் (குப்பை நிர்வாகம்) பிரச்சினை ஊருக்குள் மீண்டும் நாற்றமெடுக்கத் தொடங்கியிருப்பதை நாம் சில வாரங்களாக அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
கடந்த நகர சபை நிர்வாகம் மாகாண மட்டத்திலே இரண்டு தடவைகள் சிறந்த நிர்வாகமாக? தெரிவு செய்யப்பட்ட போதும் குப்பை (திண்மக் கழிவு) பிரச்சினை என்பது நிரந்தரமாக தீர்ந்த பாடில்லை. இத்தனைக்கும் காத்தான்குடி நகர் என்பது அரசியல் மட்டத்திலும் சரி உள்ளு1ர் சிவில் அமைப்பு மட்டத்திலும் சரி ஆண்மீக மட்டத்திலும் சரி மிகவும் பலம்? பொருந்திய பல கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளது.
அரசியல் ஆதிக்கம்
மட்டக்களப்பு மாவட்ட 5 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களில் ஒன்றினை கடந்த 25 வருடங்களாக காத்தான்குடி கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டார நாயக்க குமாரதுங்க அவர்களின் ஆட்சியில் தபால் தொலைத் தொடர்பு பிரதியமைச்சராகவும், இவ்வருட ஆரம்பம் வரை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும், மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியின்போது ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சராகவும் எல்லாவற்றிற்கும் மேலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வாயினாலேயே 'எங்கள் வீட்டுப் பிள்ளை' என வர்ணிக்கப்பட்டவராகவும், இன்று வரை பாராளுமன்றப் பிரதிநிதியாகவும் இருந்து வரும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எனும் அரசியல் தலைமைத்துவத்தினால் காத்தான்குடி குப்பைப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண முடியவில்லை அல்லது முயலவில்லை. ஏனெனில் காத்தான்குடி குப்பை பிரச்சினை என்பது தங்கள் தங்கள் வாக்கு வங்கிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு யுக்தியாகவும் காலாகாலமாக பாவிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த சில தேர்தல்களின் போது காத்தான்குடியில் சேகரிக்கப்படும் குப்பைகளை 'மீள் சுழற்சி' செய்யவிருப்பதாக ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டு மக்களின் வாக்குகளை பெற்று மீண்டும் அரியனையில் அமர்ந்தார்கள். ஆனால் காலப்போக்கில் மக்களின் மறதியையும் மடமைத்தனத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வழமை போன்று அபிவிருத்தி மாயையால் அத்தனையும் மறைக்கப்பட்டது.
மீண்டும் ஆங்காங்கே சில போராட்டங்கள் மக்களால் தொடரப்பட்டபோது நாங்கள் குப்பையிலிருந்து 'மின்சாரம்' தயாரிக்கப்; போவதாக ஒரு வினோதமான திட்டம் ஒன்றை மக்கள் முன் வைத்தார்கள். அதனையும் மக்கள் நம்பத் தவறவில்லை. மீண்டும் அபிவிருத்தி என்ற பெயரில் மக்கள் மடையர்களாக்கப்பட்டார்கள். பேரீத்தமரங்கள், வீதி அலங்காரங்கள், பாவிக்க முடியாத வீதி வளைவுகள், இஸ்லாமிய வரையறைக்கு அப்பாற்பட்ட நூதனமான நூதனசாலை என்பவற்றிற்கெல்லாம் மேலாக காத்தான்குடி மக்களுக்கு குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை தனது ஆட்சி அதிகாரம் அடங்குவதற்குள் அமைத்துக் கொடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இதய சுத்தியுடன் முன்வருவாரா?
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்
பல்வேறு சமுக மேம்பாட்டு வேலைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட கா.ப.வா.மு.நி.சம்மேளனம் எனப்படுகின்ற காத்தான்குடியில் பலம் பொருந்திய ஒரு சிவில் அமைப்பானது தற்போது அரசியல் அதிகார வர்க்கத்தினரின் வலைக்குள் சிக்குண்டு தன் சுய மரியாதையினையும் கௌரவத்தினையும் நாளுக்கு நாள் இழந்து வருவதனையும் காணக்கூடியதாக உள்ளது. அதற்கு நல்லதொரு உதாரணமாக காத்தான்குடி குப்பை பிரச்சினை காணப்படுகின்றது.
கடந்த நகர சபை நிர்வாகத்திற்கு முற்றிலும் விசுவாசமாக இருந்த சம்மேளனம் குப்பை பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி அதற்குரிய வளவு ஒன்றினை கொள்வனவு செய்து நகர சபைக்கு கையளிக்கும் நோக்குடன் பொதுமக்களிடம் தலா ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ரூபா 500 வீதம் பாரிய நிதியினை சேகரித்திருந்தது. சம்மேளனம் மீது மக்கள் கொண்ட அபரிமிதமான நம்பிக்கையின் அடிப்படையில் (நாங்கள் நகர சபைக்கு வரி கட்டுவது இதுபோன்ற உட்கட்டமைப்புக்களை நகர சபை செய்து தருவதற்காக வேண்டித்தானே? என்று ஒரு வார்த்தைதானும் மறு கேள்வி கேட்காமல்) மக்கள் அந்த பாரிய தொகையினை வழங்கியிருந்தார்கள்.
அவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகைக்கு என்னவானது? வளவு வாங்கப்பட்டதா? யாருடைய பெயரில் வாங்கப்பட்டுள்ளது? நகர சபைக்கு கைளிக்கப்பட்டதா? அதில் குப்பை நிர்வாகம் செய்யப்படுகின்றதா? அல்லது ஏன் செய்யப்படவில்லை? என்ற எந்தவொரு விளக்கமும் சம்மேளனத்தினால் உத்தியோக பூர்வமாக பொது மக்களுக்கு இதுவரை விளங்கப்படுத்தப்படவில்லை
சமூகப் பொறுப்புக் கூறல் என்ற அடிப்படை யில் தன்னை ஒரு தாய் நிறுவனமாகக் காட்டிக் கொள்ளும் சம்மேளனம் இந்த விடயத்தில் கூடிய அக்கரை காட்டி தெளிவினையும் தீர்வினையும் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தார்கள் அது நிறைவேறவில்லை.
சுமார் 160 ற்கும் மேற்பட்ட நிறுவனங்களை தன்னகத்தே கொண்ட சம்மேளனம் இந்த விடயத்தில் காட்டிய அக்கறையும் அவதானிப்பும் போதாதென்பதோடு சம்மேளனத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையிலும் கேள்விக் குறியை ஏற்படுத்தியிருக்கிறது.
சமூகப் பொறுப்புக் கூறல் என்ற அடிப்படை யில் தன்னை ஒரு தாய் நிறுவனமாகக் காட்டிக் கொள்ளும் சம்மேளனம் இந்த விடயத்தில் கூடிய அக்கரை காட்டி தெளிவினையும் தீர்வினையும் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தார்கள் அது நிறைவேறவில்லை.
சுமார் 160 ற்கும் மேற்பட்ட நிறுவனங்களை தன்னகத்தே கொண்ட சம்மேளனம் இந்த விடயத்தில் காட்டிய அக்கறையும் அவதானிப்பும் போதாதென்பதோடு சம்மேளனத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையிலும் கேள்விக் குறியை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தனைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமல்ல காத்தான்குடியில் நல்லாட்சி பேசுகின்ற 'நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின்' அதி உயர் பீடமான சூறா சபை உறுப்பினர்கள் பலர் தற்போதும் சம்மேளனத்தின் உயர் பதவிகளில் (செயலாளர் உட்பட) வலம்வருவதோடு மேற்படி நிதி வசூலிப்பிலும் நேரடியாக ஈடுபட்டிருந்தமையையும் இங்கு குறிப்பட்டாக வேண்டும். இவ்வாறு நல்லாட்சி பேசுபவர்கள் கூட மேற்படி பிரச்சினைகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரியவில்லை. எனவே, காத்தான்குடியில் ஒட்டு மொத்த நிர்வாகங்களும் மக்களின் பொதுவான மற்றும் முக்கிய பிரச்சினைகளில் அக்கறை இல்லாமலும் மக்களுக்கு விசுவாசம் இல்லாமலும் இருக்கின்றனவா? ஏன்ற பாரிய சந்தேகம் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.
நகர சபை
கடந்த மாத இறுதிவரை ஆட்சியிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் நேரடி கண்காணிப்பிலும் வழிகாட்டலிலும் தவிசாளர் அஸ்பர் அவர்களின் தலைமையிலும் ஆட்சி புரிந்த நகர சபை நிர்வாகம் பல பிரதேச மக்களுடனும் முரண்பட்டுக் கொண்டு குப்பை பிரச்சினையை அவ்வப்போது ஆங்காங்கே கொட்டி வந்ததே தவிர நிரந்த தீர்வு கண்டபாடில்லை. அந்த நிர்வாகத்திற்கெதிராக சில காலம் டீன் வீதி மக்களும், இன்னும் சில காலம் றிஸ்வி நகர் மக்களும், இறுதியாக ஆற்றங்கரைப் பிரதேச மக்களும் போராட்டங்கள் நடாத்தியும் பல வழக்குகளுக்கு மத்தியிலும் ஊசலாடிவந்த மேற்படி நகர சபை நிர்வாகத்திற்கு அரசாங்கம் இளைப்பாறுவதற்கு சந்தர்ப்பத்தினை வழங்கிய போதும் குப்பைப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வில்லை.
கடந்த நகர சபை நிர்வாகம் ஆட்சியைப் பொறுப்பேற்ற ஆரம்ப கால கட்டத்தில் பிரதான வீதியினை மறித்து அதிலே குப்பைகளைக் கொட்டி பல படங்களை மக்களுக்கு காண்பித்து தங்களை மக்களுக்கு விசுவாசமானவர்களாக காட்டிக் கொண்டது. மேலும் 'ஒரு வாரத்திற்குள் நிரந்தர தீர்வில்லையென்றால் மீண்டும் இவ்விடத்தில் குப்பைகளைக் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்வோம்' என்ற கர்ஜனைகளுடன் அன்றைய போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. சுமார் 4½ வருடங்களாக குப்பைப் பிரச்சினைக்கு தீர்வில்லாத போதும் மீண்டும் போராட்டம் நடாத்தப்பட்டதாகவோ அதுபற்றிய வேறு மார்க்கம் கண்டதாகவோ எந்தவொரு வரலாற்றையும் காண முடியவில்லை.
'நாங்கள் ஆட்சியில் இருந்தவரை யாருடன் சண்டை பிடித்தென்றாலும் குப்பைகளை சேகரித்து யார் எதிர்த்தாலும் எங்காவது கொட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் எங்கள் பதவிக்காலம் முடிந்தவுடன் தற்போது நகர சபை குப்பைகளைக் கொட்டுவதற்கு தடுமாறுகிறது. மீண்டும் எங்களைத் தெரிவு செய்தால்தான் எங்கள் சண்டித்தனம் மூலம் உங்கள் குப்பைகளை ஆங்காங்கு கொட்டுவதற்கு நடவடிக்கை எடுப்போம்' என்று எதிர்வரும் தேர்தல் பிரச்சார மேடைகளில் இவர்கள் முழங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனென்றால் மக்களின் மறதியிலும் மடைமைத்தனத்திலும் இவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை எப்போதுமே உண்டு.
ஆனால் மக்கள் ஒரு விடயத்தை மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த மாதம் காத்தான்குடி நகர சபை மாத்திரம் கலைக்கப்படவில்லை. இலங்கையில் காத்தான்குடி நகர சபை உட்பட மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என சுமார் 234 உள்ள10ராட்சி சபைகள் கலைக்கப்பட்டன. ஆனால் காத்தான்குடியில் மாத்திரம்தான் குப்பை பிரச்சினை காலாகாலமாக அரசியலுக்கு மூலதனமாக்கப்படுகின்றதே தவிர ஏனைய பிரதேசங்களில் அல்ல.
பொது மக்கள்
மக்களுக்குரிய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை உள்ள10ராட்சி நிர்வாகங்கள் செய்து தருவதற்காகத்தான் நாங்கள் நகர சபைக்கு வரிப்பணம் செலுத்துகின்றோம். ஆனால் எங்கள் வீட்டுக் குப்பைகளைக் கூட முறையாக முகாமைத்துவம் செய்ய முடியாத கையறு நிலையில் நம்மை நட்டாற்றில் விட்டுச் சென்றுள்ள கடந்த நகர சபை நிர்வாகம் பற்றி இனிமேலாவது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அதே நேரம் தமக்கு ஏற்படுத்தப்படும் இது போன்ற அநீதிகளுக்கெதிராக ஜனநாயக ரீதியிலான கவனஈர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும். அமைச்சர்கள் இல்லாத சகோதர இனத்தவர்களுடைய குப்பைப் பிரச்சினை உட்பட எத்தனையோ பிரச்சினைகள் நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொண்டபோதும் பிரதிஅமைச்சர், ஜனாதிபதி வீட்டுப் பிள்ளைகள் என பலரை நாம் கண்டிருந்தும் நமக்குரிய பிரச்சினைகள் தொடர்கதையாகவே இருப்பதற்கு என்ன காரணம் என மக்கள் சிந்திக்க வேண்டும். தலைவர்கள் தமக்குரிய பொறுப்புக்களிலிருந்து தவறும்போது அந்த மக்கள் வீதிகளில் இறங்கி தமக்குரிய அதிருப்தியினை வெளிப்படுத்தி தலைவர்களை நேர்வழிப்படுத்துவதும் அவர்களுடைய பிரச்சினைகள் நிரந்தரமாக தீர்த்துவைக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக காணப்படுகின்றது.
எனவே, காத்தான்குடி குப்பைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண நாமும் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. சிலை விவகாரம், பிறை விவகாரம் என மார்க்க விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் இது போன்ற சமுகப்பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்கும் ஜம்மியதுல் உலமா, ஏனைய தப்லீக், தௌஹீத் அமைப்புக்கள் மற்றும் நலன் விரும்பிகள் என அனைவரும் முன்வரவேண்டும்.
இறுதியாக
எது எப்படியோ இப்போதைய நிலமையில் காத்தான்குடி குப்பைகளை நிர்வாகம் செய்வதற்கு நகர சபை மற்றும் தாய் நிறுவனம் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் என்பன இணைந்து இதற்கான நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு விரைந்து நடவடிக்ககைகளை எடுக்க வேண்டும். இல்லாமல் இதே நிலமை இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீடிக்குமானால் தற்போது வீடுகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் நகர சபை முன்றலிலும் சம்மேளன முன்றலிலும் மக்கள் கொண்டு வந்து சேர்க்கும் காலம் தொலைவில் இல்லை.
அவதானி.
09.06.2015

