Featured Home (TOP)

Recent Comments

Saturday, July 25, 2015

Unknown

தலைவர் அஷ்ரபினதும் மைத்திரியினதும் படங்களைக்காட்டி வாக்குக்கேட்கும் நிலைக்கு ஹிஸ்புல்லாஹ் தள்ளப்பட்டுள்ளார் – பொறியியலாளர் அப்துர் றஹ்மான்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வருட கால அரசியல் ஜாம்பவானாக இருந்து வருகின்ற சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு, அவர் ஆதரவு வழங்கிய இரண்டு நபர்களின் புகைப்படங்களைக்கூட அவரது பிரசுரத்தில் இடம்பெறச் செய்ய முடியாத அளவுக்கு அவர் அரசியல் வங்குரோத்து அடைந்திருப்பது எமக்கும் கவலையளிப்பதாகவே உள்ளது. 

கடந்த காலங்களில் அவர் பகிரங்கமாக எதிர்த்த தலைவர்களான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆகியோரின் புகைப்படங்களைக் காட்டியே எமது மக்களின் வாக்குகளைக் கேட்க வேண்டிய நிலைக்கு இன்று அவர் தள்ளப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா – ந.தே.மு கூட்டணியில் 2ம் இலக்க வேட்பாளராகப் போட்டியிடும் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று (24.07.2015) வெள்ளிக்கிழமை மாலை மு.கா – ந.தே.மு கூட்டணியின் இரண்டாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம், கடற்கரை வீதியிலுள்ள மத்திய மகா வித்தியாலய முன்றலில் நடைபெற்றது.

முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ். ஏ.ஜீ.எம். ஹாறூன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்த பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

பள்ளிவாசல்களைக் கட்டுவதற்கும், களப்பை குப்பையால் நிரப்பி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கும், வரவேற்புக் கோபுரம் நிர்மானிப்பதற்கும், வீதிகள் போடுவதற்கும் எமது ஊருக்கு எம்.பி. வேண்டும் என்று விளையாட்டுக் கழகத்தின் பெயரால் வெளியிடப்பட்டிருக்கின்ற துண்டுப்பிரசுரமானது, 25 வருடங்களாக நாடாளுமன்றத்தில் அரசியல் அதிகாரத்துடன் இருந்து வந்துள்ள சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களால் ஏன் இவற்றையெல்லாம் செய்து முடிக்க முடியவில்லை? என்ற கேள்வியையும், இவ்வாறான வேலைகளைச் செய்வதற்காகவா நாம் நமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைத் தெரிவு செய்ய வேண்டும்? என்ற கேள்வியையும்; எழுப்பியுள்ளது

நாடாளுமன்றம் என்றால் என்ன? அங்கு செல்லும் மக்களின் பிரதிநிதிகளுக்குள்ள கடமைகள் என்ன? எவ்வாறானவர்களை மக்கள் தமது பிதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும்? என்பன பற்றிய விளக்கங்களை உள்ளடக்கிய பிரசுரம் ஒன்றை எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்றைய ஜும்ஆத் தொழுகையின்போது பொதுமக்களுக்கு விநியோகித்திருந்தது.

இந்த நாட்டின் அதியுயர் சட்டவாக்க சபையான நாடாளுமன்றத்திற்கு தமது பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்யும்போது அவர்களை வெறுமனே வீதிகள் வடிகான்கள் அமைப்பவர்களாகவும், கட்டிடங்கள் மைதானங்கள் நிறுவுகின்றவர்களாகவும் கருதித் தெரிவு செய்யக்கூடாது. மக்களின் பிரச்சினைகளை, சமூகத்தின் உரிமைகளை, மாவட்டத்தின் நலன்கள், சமூகங்களின் ஐக்கியம், தேசத்தின் அபிவிருத்தி போன்றவைகளைக் கருத்திலெடுத்து எவருக்கும் அஞ்சாமல் எடுத்துரைக்கக்கூடிய, செயலாற்ற வேண்டிய தகுதியும், தரமும் கொண்டவர்களையே மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும்.

வீதிகள் வடிகான்கள் அமைப்பதற்கும், கட்டிடங்கள் மைதானங்கள் நிறுவுவதற்கும் அதற்கான திணைக்களங்களும், அதிகாரிகளும் இருக்கின்றனர். நமதூரிலுள்ள முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல், ஜாமியுழ்ழாபிரீன் மீராபள்ளிவாசல், முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் உட்பட பல பெரும் பெரும் பள்ளிவாசல்களை எல்லாம் எந்த எம்.பி.மார்கள் கட்டினார்கள்? நமதூரிலுள்ள தனவந்தர்களும், வர்த்தகர்களும், ஏழைப் பொதுமக்களும்தானே அப்பள்ளிவாசல்களை எல்லாம் கட்டியெழுப்பியுள்ளார்கள்? மர்ஹும் மொடர்ன் முகைதீன் ஹாஜியார் அவர்கள் தனது சொந்தப்பணத்திலேயே பல கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு மாபெரும் பள்ளிவாசலாக ஸெயின் மௌலானா பள்ளிவாசலைக் கட்டியெழுப்பவில்லையா? (அழ்ழாஹ் அவர்களது ஸதகதுல் ஜாரியாவை அங்கீகரித்து பேரருள்புரிவானாக!) 

ஆனால் தனது சுயநல அரசியல் இருப்புக்காக முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றை முஸ்லிம் பெயர் தாங்கிய அரசியல்வாதி ஒருவரே தரைமட்டமாக உடைத்து அழித்த வரலாறு உலகிலேயே இந்த ஊரில்தான் நடைபெற்றிருக்கின்றது. 

கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது இதோ இருக்கின்ற புதிய காத்தான்குடி பெரிய பள்ளிவாசலை ஜனாதிபதி நிதியைப் பெற்று ஆசியாவின் ஆச்சரியமாகக் கட்டியெழுப்பப் போவதாகக்கூறி முற்றாக உடைத்துத் தரைமட்டமாக்கிய சகோதரர் ஹிஸ்புல்லாஹ், அதனை இன்னமும்தான் கட்டிக் கொண்டிருக்கின்றார்.

அதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், நகர சபைத் தேர்தல், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் போன்றவற்றில் எல்லாம் தன்னையும், தான் நிறுத்தியுள்ள வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்தால்தான் ஜனாதிபதி நிதியைப் பெற்று இப்பள்ளிவாசலைக் கட்டி முடிக்க முடியும் எனப் பிரச்சாரம் செய்து வெற்றிகளையும் பெற்று வந்துள்ள சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களை, இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறச் செய்தால்தான் இந்தப் பள்ளிவாசலையும், ஏனைய வேலைத்திட்டங்களையும் செய்து முடிக்கலாம் என்று விளையாட்டுக்கழகத்தின் பெயரில் துண்டுப்பிரசுரம் வெளியிட்டு இன்னமும் மக்களை ஏமாற்ற முனைந்திருப்பதானது அவரின் அரசியல் வங்குரோத்துத்தனத்தையே அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது.

இப்போது அவர் நம்பியிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி பதிவியிலிருந்து இறக்கப்பட்டு ஒரு சாதாரண எம்.பி.யாக நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்குப் பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவ்வாறான விளையாட்டுக்கழகங்கள் இன்னமும் இவரையே நம்பிக்கொண்டிருப்பதானது இவர்களின் பாமரத்தனத்தையும் பட்டவர்த்தனமாக்கியுள்ளது.

நாங்கள் 2012ம் ஆண்டில் இதே இடத்தில் நின்று சகோதரர் ஹிஸ்புல்லாஹ்விடம் சவால் விட்டுக் கேட்டோம். உங்களால் இந்தப் பள்ளிவாசலைக் கட்டியெழுப்ப முடியாது என்றால் நீங்கள் வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள். நாங்களும், ஊர்மக்களுமாகச் சேர்ந்து இதனைக் கட்டியெழுப்பிக் கொள்கின்றோம் என பகிரங்கமாகக் கேட்டிருந்தோம். அதற்கு பதிலளிக்காமல் ஐந்தாண்டுகளாக ஆமை வேகத்தில் இந்த அழ்ழாஹ்வின் வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கும் அவர், இன்னும் ஐந்து வருடத்திற்கு அதற்காக மக்களிடம் ஆணை கேட்டு விளையாட்டுக் கழக்கழகத்தின் பெயரில் பிரசுரம் வெளியிட்டு மக்களை தவறாக வழிநடாத்த முற்படுவதை அனுமதிக்க முடியாது.

சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கப் போவதாகக் கூறிக்கொண்டு மேற்கேயுள்ள களப்புக் கரையை இந்த ஊரில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளால் நிரப்பி, கிறவலிட்டு மூடி நிர்மாணிக்க முயற்சிப்பதென்பது, முழு முட்டாள்தனமான ஒரு நடவடிக்கையாகும். 

ஒரு நீர்நிலையை மூடி அதில் மைதானம் அமைப்பதென்றாலோ அல்லது ஒரு கட்டிடத்தை எழுப்புவது என்றாலோ அதற்கு எவ்வாறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை என்னை விடவும் இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற பொறியியலாளர்கள், கல்விமான்கள் உங்களுக்குத் திறம்பட எடுத்துரைப்பார்கள்.

ஊரின் வரவேற்புக் கோபுரம் என்பது ஒரு ஊரின் எல்லையில்தான் நிறுவப்பட வேண்டும். ஆனால் அது எமதூரில் பின்னோக்கி நகர்த்தப்பட்டு எழுப்பப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் இப்போதும் அரையும், குறையுமாகவே காட்சியளிக்கின்றது. அதனைப் பூர்த்தி செய்யவும் இன்னுமொரு முறை அவருக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டுமாம். இன்ஷா அழ்ழாஹ், எதிர்வரும் 18ம் திகதி நாங்கள் தெரிவு செய்யப்பட்டால், கீழ்த்தரமான அரசியல் பழிவாங்கல் செய்யும் நோக்கில் எம்மால் கட்டியெழுப்பப்பட்ட மேம்பாலத்தை அவர் உடைத்து அழித்ததுபோல் நாம் அவர் எழுப்பியுள்ள வரவேற்புக் கோபுரத்தையும் உடைத்து அழித்து அரசியல் பழிவாங்கல் செய்யாமல் மீதமிருக்கின்ற வேலைகளைப் பூர்த்தி செய்து அதனை எமதூரின் பொதுச் சொத்தாகப் பேணுவோம்.

சகோதரர் ஹிஸ்புல்லாவின் அரசியல் அஸ்தமனம் இத்தேர்தலில் நிச்சயம் என்பது, இப்போது அவர் முன்னெடுத்து வரும் பிரச்சார நடவடிக்கைகள் மூலம் மக்களுக்குத் தெளிவாகத் தெரிகின்றது. இதோ அவர் வெளியிட்டிருக்கும் பிரசுரத்தில் ஒரு பக்கம் மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் படத்தையும், மறுபக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் படத்தையும் சேர்த்துக் கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறும் நோக்கில் மிகவும் மலினமான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார்.

முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் முகவரியையும், உரிமைகளையும் பெறும் வகையில் தனித்துவக்கட்சியாக ஸ்ரீ.ல.மு.காங்கிரஸை உருவாக்கி, எமது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று முஸ்லிம் பிரதேசங்களையும் சேர்ந்த மக்களை 2 வருட சுழற்சி முறைப் பிரதிநித்துவ ஒப்பந்தத்தின் கீழ் ஒற்றுமைப்படுத்தி இக்கட்சியை இந்த மண்ணில் வேரூன்றச் செய்த இந்த மாமனிதரை, தனது சுயநலப் பதவி ஆசைக்காக ஒப்பந்த வாக்குறுதிக்கு மாறாகச் செயற்பட்டு இந்தத் தலைவரையே நீதிமன்றப் படிகளில் ஏறச் செய்து அலைக்கழித்து பச்சைத்துரோகமிழைத்த வரலாறைக் கொண்டவரான சகோதரர் ஹிஸ்புல்லா, 

இன்று தனது அரசியல் வங்குரோத்து நிலைமையின் காரணமாக தான் எதிர்த்தவரின் புகைப்படத்தையே தனது பிரசுரங்களில் அச்சிட்டு வெளியிட்டு மு.கா. போராளிகளிடம் அனுதாபம் பெற முற்பட்டிருப்பதானது, அவரது தோல்வி உறுதிப்படுத்தப்பட்டிருப்பதற்கு தகுமான ஆதாராமாகும்.

அதுபோன்றுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முழுக்க முழுக்க மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் ஏற்றுவதற்காக அயராது முயற்சித்து, இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால அவர்களை தெருத்தெருவாக மிகவும் கீழ்த்தரமாகவெல்லாம் விமர்சித்து, அவருக்கான ஒரு பிரச்சாரக் கூட்டதைக்கூட இந்த மண்ணில் முக்கிய இடங்களில் எங்களால் நடாத்துவதற்கு இடமளிக்காமல் தனது அரசியல் அதிகாரப்பலத்தைப் பிரயோகித்து எதிர்த்த வரலாறைக் கொண்டவரான சகோதரர் ஹிஸ்புல்லாஹ், இன்று தனது எதிரியையே தனது பிரசுரங்களில் அச்சிட்டு நல்லாட்சியை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களின் வாக்குகளுக்காக அலைவதும் அவரது தோல்வி நிச்சயமே என்பதை வலுவாக உறுதிப்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வருட கால அரசியல் ஜாம்பவானாக இருந்து வரும் அவருக்கு, அவர் ஆதரித்த இரண்டு நபர்களின் புகைப்படங்களைக்கூட அவரது பிரசுரத்தில் இடம்பெறச் செய்ய முடியாத அளவுக்கு அவர் அரசியல் வங்குரோத்து கடைநிலை அடைந்திருப்பது எமக்கும் கவலையளிப்பதாகவே உள்ளது.

எனவே, காத்தான்குடி முஸ்லிம்கள் முழு இலங்கைக்கும் முன்னுதாரணமானவர்கள். இந்த மக்கள் நமது ஊருக்கு எம்.பி. வேண்டும் என்கிற பிரதேசவாத எதிர்பார்ப்பில் இருந்து இந்தத் தேர்தலுடன் முற்றாக விடுபட்டு, இந்த மாவட்டத்திலுள்ள எல்லா ஊர்களுக்கும் இன, மத, பிரதேச வேறுபாடுகள் இல்லாத, இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகளையும், சமூகங்களின் தேவைகளையும், தேசத்தின் நலனையும் கருத்திற்கொண்டு ஊழல் மோசடி இல்லாமல், வாக்குறுதி மீறாமல், மக்களுக்கு விசுவாசமாக, மக்களின் விருப்பங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் அமைவாக முழு மாவட்டத்திற்கும் பொதுவான எம்.பி.யாக இருந்து செயற்படக்கூடிய ஒருவரைத் தெரிவு செய்வதற்குத் திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நானும் நீங்களும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்ற இக்காத்தான்குடி மண்ணுக்குப் பெருமையையும், கீர்த்தியையும் பெற்றுக் கொடுக்கும் வகையில் தகுதியும், தரமும், ஆற்றலும், அறிவும், விவேவகமும், துணிச்சலும் கொண்ட ஒருவரையே எமது ஸ்ரீ.ல.மு.கா – ந.தே.மு. கூட்டின் மக்கள் பிரதிநிதியாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி உங்களின் வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.






Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :