Featured Home (TOP)

Recent Comments

Monday, July 13, 2015

Unknown

SLMC + NFGG இணைவின் சூத்திரமும், எதிர்கால முஸ்லிம் அரசியலும் - 02

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)


நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியல் கூட்டணியாக இணைத்துக் கொண்டிருப்பதன் மூலம், முஸ்லிம் வாக்களர்களின் மனங்களில் ஒருவிதமான வெற்றிக்களிப்பு ஏற்பட்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாகவும், தொடர்பாடல்கள் மூலமாகவும் அறிய முடிகின்றது.

எனினும், இந்த வெற்றியானது, வேட்பாளர்களாகப் போட்டியிடும் தனி நபர்களுடைய அல்லது கட்சிகளுடைய வெற்றியாக அமையாது, நமது முஸ்லிம் சமூகத்தின் முழுமையான வெற்றியாக அமைய வேண்டுமென்பதே எனது பிரார்த்தனையாகும்.

ஏனெனில், தேர்தல் காலங்களில் இஸ்லாம் வெறுக்கின்ற பட்டாசு வெடிகள், வர்ணச் சுவரொட்டிகள், விண்ணுயர்ந்த பிரமாண்டமான பதாதைகள், கழுத்தை நிறைக்கும் மலர் மாலைகள் போன்ற புகழாரச் செயற்பாடுகளுக்காக இலட்சக்கணக்கில் பணத்தை வாரியிறைத்துச் செலவிடும் நமது முஸ்லிம் அரசியல்வாதிகள், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்கள் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு கோடிக்கணக்கில் உழைத்துக் கொள்ளும் குறிக்கோளுடனே செயற்பட்டு வருவதை கடந்த காலங்களில் நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

இந்தவகையில், இஸ்லாம் வலியுறுத்துகின்ற 'நல்லாட்சிச் சிந்தனை'யுடன் முஸ்லிம் சமூக அரசியற்களத்தில் பிரவேசித்து மக்களின் வரவேற்பையும், நம்பிக்கையையும் பெற்றள்ள NFGG யானது, குர்ஆன் ஹதீஸை தனது யாப்பாகக் கொண்டு செயற்படுவதாகக் கூறிவரும் SLMC யுடன் இணைந்திருப்பது, எந்த வகையான மாற்றத்தையும், வெற்றியையும் நமது முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்தும் என்பதுவே இன்றைய வினாவாக பலரிடத்திலும் எழுந்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் வறுமை நிலையானது, இஸ்லாம் வலியுறுத்தும் பொறுமையைக் கொண்டு இந்நாட்டிலும், சர்வதேச மட்டங்களிலும் வெகுவாகவும், கௌரவமாகவும் மறைக்கப்பட்டுள்ளது. எமது முஸ்லிம் அரசியல்வாதிகளின் மேற்கண்டவாறான ஆடம்பரச் செலவினங்களைக் கண்டு மனம் வெதும்புகின்ற ஏழைகள் அநேகர். வயது வந்தும் திருமணமகாத ஏழைக்குமர்களும், தமது உயர்கல்வியைத் தொடர நாதியற்ற இளைஞர் யுவதிகளும், ஒரு வேளை உணவையாவது வயிறாற உண்டு உங்குதற்கு வழியற்ற குடும்பங்களும், கல்வி கற்றும் உரிய தொழில் வாய்ப்பற்றிருக்கும் இளந்தலைமுறையினரும் எண்ணித் தொலையாத அளவுக்கு நமது சமூகத்தில் உள்ளனர்.

இவர்களில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினருடைய தேவைகளையாவது முஸ்லிம் கட்சிகள் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் இனங்கண்டு, காலத்துக்குக் காலம் இடம்பெறும் தேர்தல்களின்போது தமது ஆடம்பரப் பிரச்சாரச் செலவினங்களுக்காக வாரியிறைக்கும் செல்வத்தைப் பயன்படுத்தி நம் சமூகத்தின் வறுமையை வெறுமையாக்க முற்பட்டிருந்தால், மு.கா. தேர்தல் களம் புகுந்த 1989ல் இருந்து இத்தேர்தல் வரையான காலப்பகுதியிலும் எத்தனையோ குடும்பங்களின் துயர்களைத் துடைத்திருக்கலாம். இளையோரின் வாழ்வுகளில் நிரந்தர வசந்தத்தைத் தோற்றுவித்திருக்கலாம்.

இந்த இடத்தில் SLMC இணைத்துக் கொண்டுள்ள NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அவர்கள் கூறிய சில கருத்துக்களை நாம் மீள்வாசிப்புச் செய்யலாம்.

1. சமூகமோ நடுத்தெருவில்...! போராளிகளோ உப்பரிகையில்..!! சமூக உரிமைகளைப் பெறுவதற்காகத் தொடங்கப்பட்ட போராட்டம் முற்று முழுவதுமாகத் தோற்றுபபோய், சமூகத்திற்காகப் போரடப் புறப்பட்ட போராளிகள் வென்றிருக்கின்ற அதிசயம் உலகிலேயே எமது நாட்டில் மாத்திரம்தான் நடைபெற்றிருக்கின்றது!

2. கொங்றீட் வீதிகளுக்காக கிடைத்த கொமிஷன் தொகைகள், வருடாந்தம் 5000 வறிய மாணவர்களின் அப்பியாசப் புத்தகத் தேவையை அடுத்த பத்தாண்டுகளுக்குத் தீர்க்கப் போதுமானது!


3. பட்டாசு வெடிகளுக்கும், அலங்காரப் பந்தல்களுக்கும், வர்ணச் சுவரொட்டிகளுக்கும், விளம்பரப் பதாதைகளுக்குமாக வாரியிறைக்கப்படும் இலட்சக்கணக்கான பணத்தை, எமது சமூகத்தின் வறுமையைத் தீர்ப்பதற்காக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதில்லை!

இவ்வாறான சிந்தனையைத் தொடுகின்ற சீர்திருத்தக் கருத்துக்களை கடந்த தசாப்த காலமாக நம்மிடையே நயமாக எடுத்துரைத்து வந்த பொறியியலாளர் அப்துர்றஹ்மான் தலைமையிலான NFGG இப்போது இத்தனை கருத்துக்களுக்கும் பொருத்தமான SLMC யுடன் 'நல்லாட்சி'க்கான அரசியல் பயணத் தொடரில் இணைந்திருக்கின்றது.

இந்தப் பயணத்தில் SLMC NFGG யின் நல்லாட்சி அரசியல் தத்துவார்த்தத்திற்கமைய தனது கடந்த கால வழிமுறைகளை மாற்றிக் கொண்டு முஸ்லிம் சமூகத்தைப் பீடித்திருக்கும் வறுமையிலிருந்து வெற்றிபெற வழி வகுக்குமா? அல்லது NFGG, SLMC வகையறாக்களின் கால் நூற்றாண்டைக் கடந்த, சமூகத்தைத் தோற்கடித்த அரசியல் பாட்டைக்கே வழி மாறிச் செல்லுமா? என்பதை இனிவரும் எதிர்காலம் நமக்கெல்லாம் உணர்த்தி நிற்கும்.

பத்துத் தடவைகள் முழுப்பலத்துடன் முயன்றும் புரட்ட முடியாமற் போன பாராங்கல்லொன்றை, பதினோராவது தடவையில் புரட்டிச் சாதித்த வரலாற்றுக் கதைகளை நாமெல்லாம் பள்ளிப் பருவத்திலேயே படித்துணர்ந்துள்ளோம். இது, இன்று நம் காலத்திலும் மாற்று வடிவில் கண்காட்சியாக காட்டப்படுகின்றது.

ஒரு சமூகத்தில் வேரூன்றிப்போய்விட்ட மடமைகளையும், அனாச்சாரங்களையும், சுயநலன்களையும் எடுத்த எடுப்பில் ஒழித்துக் கட்டி அச்சமூகத்தைத் திருத்தி விட முடியாதென்பதற்கு, எம் இறைத்தூதர்களின் வரலாறுகள் நமக்கு முன்னுதாரணமாக இருக்கின்றன. அந்த வகையில் NFGG யின் சமூக அரசியல் விழிப்புணர்வுப் போராட்டச் செயற்பாடானது, புனித மக்கா நகரிலிருந்து புனித மதீன மாநகருக்கு ஸல்லழ்ழாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் தோழர்களும் இறைவனை மாத்திரம் நம்பியவர்களாக நிர்க்கதியாகப் புலம்பெயர்ந்த சத்தியப் போராட்ட வரலாற்றை எமக்கு நினைவுபடுத்துகின்றன.

இத்தனை காலமாக முஸ்லிம் சமூகத்தின் மக்கள் தளத்தில் நின்று இஸ்லாம் வலியுறுத்தும் 'நல்லாட்சி' தொடர்பாகவும், நேர்மை, உண்மை, ஊழல் மோசடிகளில்லாத வெளிப்படையான மக்கள் நூறு வீதமும் பயனடையும் அரசியல் கலாசாரம் குறித்தும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வந்த NFGG இப்போது SLMC என்கிற மாபெரும் அரசியல் தளத்திற்குள் பிரவேசித்து அதன் கொள்கை கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்யத் துணிந்திருக்கின்றது.

இன்ஷா அழ்ழாஹ், இந்தப் புத்வேகப் பாதையில் நாமனைவரும் எதிர்பார்க்கின்ற 'நல்லாட்சி'க்கான வெற்றியானது SLMC + NFGG எனும் இருதரப்புக்கும் கிடைக்க வேண்டுமென நாமனைவரும் பிரார்த்திப்போம். 

இந்தக் கூட்டு வெற்றி நமது முஸ்லிம் சமூகத்திற்கான பெரு வெற்றியாக அமைய வேண்டுமெனவும் இப்புனித றமழான் மாத இறுதிப்பத்தில் இறைவனிடம் இறைஞ்சுவோம்! (தொடரும்)

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :