பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக 38 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையை நிலைநாட்டியுள்ளார். தொகுதிவாரித் தேர்தல் முறையின் கீழ் 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பியகம தொகுதியில் முதல் தடவையாக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க, 22,045 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.
அதன் பின்னர் தொடர்ச்சியாக இன்றுவரை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார். இதன் மூலம் இலங்கையில் தொடர்ச்சியாக 38 வருடங்கள் கடந்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே அரசியல்வாதி என்ற பெருமை ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் பிரதியமைச்சர், அமைச்சர், சபை முதல்வர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை அலங்கரித்துள்ளார். தற்போது மீண்டும் பிரதமராக நான்கு தடவைகள் பிரதமரான சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.
இவருடன் சமகாலத்தில் அரசியல் வாழ்வை ஆரம்பித்த காமினி ஜயவிக்கிரம பெரேரா இடையில் சிறிது காலம் மாகாண சபை முதலமைச்சராக இருந்துள்ளார். ரணிலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான மஹிந்த ராஜபக்ச, 1977ம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றிருந்தார்.
