நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்படும் தகுதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே உண்டு என உலமா கட்சித் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கம் என்பது ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குமிடையிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,
நாடாளுமன்றத்தை பொறுத்தவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெயர் அங்கு இல்லை எனவும் மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயரே உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த இருபது பேர் அரசுப் பக்கம் தாவியதாகவும், இவ்வாறு பெரும் தொகையினர் அரசுக்கு ஆதரவாக மாறிய போதும் எதிர்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு கட்சியை சேர்ந்தோர் நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பிலோ அல்லது எதிர் தரப்பிலோ அமர்வதனால் அக்கட்சி ஆளும் தரப்பாகவோ எதிர்தரப்பாக கருதப்படமாட்டாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருப்பதால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியான தமது கட்சி ஆளும்தரப்பில் உள்ளதாக அறிவிக்கும் பட்சத்தில் சிலவேளை அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்த்தை இழக்கலாம் எனக் கூறியுள்ளார்.
ஆக மொத்தத்தில் இதன் இறுதி தீர்மானம் ஜனாதிபதி கையிலேயே உள்ளதென முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
