Featured Home (TOP)

Recent Comments

Friday, August 14, 2015

avathani Media Network

இறுதித் தீர்மானத்திற்கு வந்துவிட்டோம்! நீங்களும் தீர்;ப்பெழுத முன்வாருங்கள்!! ஐக்கிய மக்கள் ஒன்றியம் வெளியிட்ட பிரசுரம்:

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)

காத்தான்குடி ஐக்கிய மக்கள் ஒன்றியம் இன்று (14.08.2015) ஜும்ஆவின்போது வெளியிட்ட பிரசுரம்:

அழ்ழாஹ்வின் பாதையில் ஒன்றுபடுவோம் - 03

இறுதித் தீர்மானத்திற்கு வந்துவிட்டோம்! நீங்களும் தீர்;ப்பெழுத முன்வாருங்கள்!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அழ்ழாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றோம்.
அன்புக்கும், மதிப்புக்கும் உரிய காத்தான்குடி வாழ் உலமாக்களே, கல்விமான்களே, பெரியார்களே, நண்பர்களே, மற்றும் வாக்காளப் பெருமக்களே! அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாதுஹு.

கடந்த 2015.05.29ம் திகதி நாம் வெளியிட்ட எமது 2வது பிரசுரத்தைத் தொடர்ந்து சுமார் 75 தினங்களின் பின்னர் இன்று இந்த 3வது பிரசுரம் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்வடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த இடைப்பட்ட காலத்தில் நமது காத்தான்குடி மண்ணில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறைப் பேணும் வகையில் நிறுவப்பட்டுள்ள நூதனசாலை தொடர்பாக எமது ஐக்கிய மக்கள் ஒன்றியம் சமய, சமூக அக்கறையுடன் முன்னெடுத்த விடயங்கள் பற்றியும், தற்போது அவ்விவகாரம் தொடர்பில் நாம் மேற்கொண்டிருக்கும் இறுதித் தீர்மானம் மற்றும் எதிர்பார்ப்புக்கள் குறித்தும் எமது மக்களோடு உரையாடிக் கொள்வதே இப்பிரசுர வெளியீட்டின் நோக்கமாகும்.

எமது 2வது பிரசுரம் வெளியிட்டதையடுத்து, இந்த நூதனசாலையின் நிறுவுனரும், முன்னாள் பிரதியமைச்சருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கும், எமது ஒன்றியத்தின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. 
இச்சந்திப்பையடுத்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த நாம், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுடன் இந்நூதனசாலை விடயமாகப் பேசப்பட்ட விடயங்கள் பற்றியும், அப்பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்தும் பகிரங்கமாக விளக்கமளித்தோம்.

இதன் மூலம் இவ்விவகாரம் தொடர்பாக எமக்கும், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விபரங்களை பொதுமக்களான நீங்கள் அனைவரும் மிகவும் தெளிவாகத் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகின்றோம்.
குறிப்பாக, இந்த நூதனசாலையில் நிறுவப்பட்டுள்ள உருவச்சிலைகள் தொடர்பாக நமது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையையும், எமதூரிலுள்ள 'தஃவா' அமைப்புக்களையும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உட்பட முஸ்லிம் சமூகத்தின் கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் எவரையும் கருத்திற்கொள்ளாமல் புறந்தள்ளிவிட்டு, சர்வதேச உலமாக்களைக் கொண்டு தான் முன்னெடுத்த இந்த நூதனசாலை உருவச்சிலைகள் விடயத்தில் தீர்;வைத் திணிக்க முற்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள், எமது 02வது பிரசுர வெளியீடு மற்றும் எம்முடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தனது பிடிவாதமான கடும்போக்கிலிருந்து இறங்கி வர நேரிட்டது என்பதை இவ்விடத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதாவது, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து இந்த நூதனசாலையைப் பார்வையிடச் செய்வதற்கும், அவர்கள் சுட்டிக்காட்டுகின்ற உருவச்சிலைகளை அதிலிருந்து அப்புறப்படுத்துவதற்கும், உலமாக்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்நூதனசாலை விவகாரத்தில் எதிர்காலத்தில் செயற்படுவதற்கும் அவர் இணங்கினார்.

அதன்படி அவர் அ.இ.ஜ.உ. பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்க, அவர்களும் எமதூருக்கு வருகை தந்து இந்நூதனசாலையைப் பார்வையிட்டு தமது ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தனர். கல்வி கற்கும் நோக்கத்திற்காக இங்கு வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு, அதற்குப் பதிலாக டிஜிட்டல் முறையிலான காட்சிப் படங்களை வைக்குமாறு உலமாக்கள் ஆலோசனை தெரிவித்திருந்தனர்.

உலமாக்களின் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அவ்வாறே நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்த சகோதரர் ஹிஸ்புழ்ழாஹ், அவ்வாறான மாற்றம் ஏற்படுத்தப்படும் வரை பொதுமக்கள் பார்வையிடுவதைத் தடுத்து இந்த நூதனசாலையைத் தாம் மூடி வைப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி தற்போது வரை இந்த நூதனசாலையானது மூடப்பட்டிருப்பதை நாமனைவரும் அறிவோம்.
இதனடிப்படையில் எமது 2வது பிரசுரத்தில் நாம் முன்வைத்த நமது உலமாக்களினதும், மக்களினதும் மன ஆதங்கத்திற்கு இடைக்காலத் தீர்;வொன்று கிட்டியிருக்கின்ற போதிலும், இந்த விடயத்தில் எமது உலமாக்களினதும், மக்களினதும் ஈமானிய உள்ளங்கள் நீறு பூத்த நெருப்பாகவே இன்னமும் கணன்று கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

மேற்சொல்லப்பட்ட நடவடிக்கைகளை அடுத்து நம்மில் பலரது கவனங்களில் இருந்தும் இந்த நூதனசாலை விவகாரம் சற்று விலகிச் சென்றிருந்தாலும், எம்மைப் பொறுத்தவரை நாம் இவ்விடயத்தில் அதிகூடிய கரிசனையைத் தொடர்ந்து முன்னெடுத்தே வந்தோம்.

முன்னாள் பிரதியமைச்சருடனான எமது சந்திப்பைத் தொடர்ந்து எமக்கு எதிராகவும் சில விஷமத்தனமான கருத்துக்களை சிலர் கொண்டிருந்தபோதிலும், அவ்வாறான கருத்துக்களைப் பலருடன் பகிர்ந்து கொண்ட போதிலும் அவற்றையெல்லாம் அறிந்து நாம் இவ்விடயத்தில் சடைவடைந்து ஒதுங்கி விடாமல், தொடர்ந்தேச்சையாக சகோதரர். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுடன் தொடர்பு கொண்டு எமது மண்ணில் 'மூன்றாம் முஸீபத்'தாக முளைத்திருக்கும் இந்த உருவச்சிலைகளை அப்புறப்படுத்தும் விடயத்தில் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டே வந்தோம்.

இந்த இடத்தில் எமது ஊடக சந்திப்பின்போது நாம் இவ்வூர் மக்களிடமும், இலங்கை முஸ்லிம் சமூகத்திடமும், உலமாப் பெருமக்களிடமும, 'தஃவா' அமைப்புக்களுடனும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொண்டவாறு, இந்த உருவச்சிலைகள் விவகாரத்தை நாம் பொறுப்பேற்றுக் கையாள்வதற்குத் தீர்;மானித்துள்ளதால் இவ்விடயத்தை எவரும் கையிலெடுத்து விமர்சிக்காது பொறுமை காக்குமாறு வேண்டிக் கொண்டதற்கிணங்க, அன்றிலிருந்து இந்த விடயத்தை விமர்சிக்காமல் தவிர்த்து வந்த அனைவருக்கும் நாம் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதற்கும் கடமைப்பட்டுள்ளோம்.

நாம் தொலைபேசி மூலம் அடிக்கடி சகோதரர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை இது விடயத்தில் தொடர்பு கொண்டு வலியுறுத்தி வந்த போதிலும், அவர் இங்குள்ள உருவச்சிலைகளை அகற்றுவதாயின் 45 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும், உலமாக்களின் ஆலோசனைப்படி டிஜிட்டல் படங்களை சைனாவிலிருந்தே தயாரித்துக் கொண்டு வர வேண்டும் என்றும் பல்வேறு காரணங்களைச் சொல்லி காலங்கடத்தி வந்தது, எமக்கு ஏமாற்றத்தையே அதிகரிக்கச் செய்தது.

நேற்று முன்தினம் 12ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவும் பல முறை நாம் இது விடயமாக அவருடன் பேச விரும்பித் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதிலும், அவரது தொடர்பு பின்னிரவு 02:30 மணி வரையில் எமக்குக் கிடைக்கவில்லை. எனவே நாம் இவ்விடயத்தில் அவருடன் மேலும் தொடர்பு கொள்ளும் முயற்சிப்பை முற்றாகக் கைகழுவிவிட்டு, இப்போது ஒரு இறுதித் தீர்மானத்திற்கு வந்துள்ளோம்.

எமது இறுதித் தீர்;மானம் இரண்டு உள்ளார்ந்த நோக்கங்களைக் கொண்டதாகும். 

முதலாவது, இந்த மண்ணின் 'மூன்றாவது முஸீபத்'தாக் உருவெடுத்துள்ள இந்த உருவச்சிலைகள் விவகாரத்திற்கு மார்க்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முக்கியத்துவம் கொடுத்து மிகக்குறுகிய காலத்தில் இந்த உருவச்சிலைகளை உலமாக்களின் ஆலோசனைக்கமைவாக அகற்றுவதற்கு தமது அரசியல் அதிகாரத்தை நூறுவீதமும் பயன்படுத்த பகிரங்கமாக முன்வரும் எமது பிரதேசத்தில் மக்கள் பிரதிநித்துவத்திற்கான ஆணைகளைக் கோரி நிற்கும் மாற்றுக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் நமது பூரண ஆதரவுகளைப் பகிரங்கமாகவே வழங்குவது.

இரண்டாவது, அவ்வாறு மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் இந்தப் பாரதூரமான விடயத்தைக் கையேற்பதற்கு முன்வராத பட்சத்தில், இந்த உருவச்சிலைகளுக்கும், இதனைக் கரிசனையில் எடுக்கத்தவறிய வேட்பாளர்களுக்கும் நூறு வீதம் எதிர்ப்பைத் தெரிவித்து இப்பொதுத்தேர்தலில் சுயேட்சைக்குழுவாக 'வாள்' சின்னத்தில் போட்டியிடும் எமது ஐக்கிய மக்கள் ஒன்றியத்திற்கு வாக்களிப்பது.

இந்த இரண்டு தீர்;மானங்களிலும், நமது மாவட்டத்தில் நமக்குக்கிடைக்கவிருக்கின்ற முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவமொன்று இழக்கப்படக்கூடாது என்பதற்கே நாம் முன்னுரிமையளிக்கின்றோம் என்பதனை இப்பிரதேச வாக்காளப் பெருமக்களும், வேட்பாளர்களும் நன்கு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எமது பிரதேச, மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பலதரப்பட்ட பிரச்சினைகளிலும் பார்க்க, எமது இஸ்லாமிய நகரில் இறைவனின் சாபம் இறங்குவதற்கு ஏதுவாக முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களினால் நிறுவப்பட்டுள்ள இந்த உருவச்சிலைகளை எமது மண்ணிலிருந்தும், எமது மக்களின் மனங்களில் இருந்தும் முற்று முழுதாக அகற்ற வேண்டியதே அதிமுக்கிய தேவையாகும் என்பதனையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எமது அரசியல் நலன்களுக்காகவோ, சுய இலாபங்களுக்காகவோ, எமது மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்யும் குறுகிய மனப்பாங்குடனோ நாம் மேற்சொல்லப்பட்ட இரண்டாவது தீர்;மானத்தை எடுக்கவில்லை. 
எமது மக்களால் வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தைக் கொண்டு, எமது மார்க்கத்தின் வழிகாட்டிகளான உலமாக்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொள்ளாது புறந்தள்ளிவிட்டு, எதேச்சதிகாரமான முறையில் இந்த இஸ்லாமிய மணங்கமழும் மண்ணில் உருவச்சிலைகளை நிறுவியது மட்டுமல்லாமல், அவற்றைப் பகிரங்கமாகக் காட்சிப்படுத்துவதற்கும் அந்த அரசியல் அதிகாரத்தை ஆயுதமாகப் பாவித்த முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கு; இன்று எம்மிடம் கையளிக்கப்பட்டிருக்கின்ற, எதிர்வரும் 17ம் திகதியன்று 10 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகக்கூடிய அதே அரசியல் அதிகாரத்தைக் கொண்டு தகுந்த பதிலளிக்க வேண்டிய, படிப்பினை ஊட்ட வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. 

இன்றேல் இந்த மண்ணில் வாழுகின்ற நாம் ஒவ்வொருவரும் நாளை மறுமையில் அழ்ழாஹ்விடம் அவனது மார்க்கத்திற்கு எதிரான, எமது எதிர்கால சந்ததியினரை இணைவைப்பு எனும் கொடிய பாவத்தில் மிகத்தந்திரமாக வீழத்தச் செய்கின்ற இந்தச் சமய, சமூகத் துரோக அரசியலுக்கு அங்கீகாரம் அளித்த பாரிய குற்றச்சாட்டிற்கு நிச்சயம் உள்ளாவோம்.

அடுத்து, இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து ஆளாகி கல்வியறிவும், மார்க்க அறிவும் பெற்று எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தினதும், மாவட்டத்தினதும் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு ஆணை வழங்குமாறு கேட்டு நிற்கின்ற, சமய விழுமியங்களைப் பேணி எமது முஸ்லிம் சமூகத்தின்மீது அக்கறை கொண்டவர்கள் எனப் பிரச்சாரம் செய்து வருகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இருவரும் இந்த உருவச்சிலைகளை இந்த மண்ணிலிருந்து அகற்றுவதற்கு அயராதும், முழு மூச்சுடனும், தமது அரசியற்கட்சி மற்றும் மக்கள் சக்திகளை ஒன்று திரட்டியும் முயற்சிப்போம் என்ற முடிவுக்கு வந்து அந்த முடிவினை இப்பிரதேச மக்களுக்கு பகிரங்கமாகவும், கூட்டாகவும் மிக அவசரமாக தமது உத்தியோகப்பூர்வ இறுதிப்பிரச்சாரங்கள் முடிவடைவதற்கு முன்னால் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு அவர்களும் இந்த மார்க்கத்தின் சுமையை, எமது மக்கள் மீது முன்னாள் அரசியல் அதிகாரம் பெற்ற நம் சகோதரரால் வலிந்து திணிக்கப்பட்டுள்ள சுமையை ஏற்றுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுவார்களேயானால், மக்களாகிய நாம் எமது சத்திய சன்மார்க்கத்தின் மீதான ஐக்கியத்தையும், பற்றையும், பாசத்தையும், நாளை மறுமையில் அழ்ழாஹ்வின் பேரன்பையும், பெரும் அருளையும் பெற்றுக் கொள்ளும் ஒரே நோக்கத்தோடு எமது கையிலுள்ள வாக்காணைகளை நாம் 'லில்லாஹி - அழ்ழாஹ்வுக்காக' என்ற ஒரே எண்ணத்தோடு எமது (உங்களின்) ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் சின்னமான 'வாள்' சின்னத்திற்கு அளித்து நமது ஒட்டுமொத்த எதிர்ப்பினைத் தெரிவிக்க முன்வர வேண்டும்.

எமது கோரிக்கையானது, காசு பணமோ, பட்டம் பதவிகளோ, சொத்து சுகங்களோ அல்ல. எமது மண்ணில் நடப்பட்டுள்ள 'மூன்றாவது முஸீபத்'தை முற்று முழுதாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக நாம் இப்போது முன்வைத்துள்ள முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் தவிர்ந்த ஏனைய நமது பிரதேச வேட்பாளர்கள் இருவரும் ஒன்றிணைந்து ஒரே கட்சிச் சின்னத்தில் அரசியல் ஆணைகளைக் கேட்பது போல் இருவரும் ஒன்றிணைந்து எமது மக்களின் கோரிக்கை எனும் முதலாம் தரத்தில் முன்வைக்கும் இச்சுமையை தமது கழுத்துக்களில், தலைகளில் சுமப்பதற்கு முன்வருவார்கள் என்றால் நாமும் எமது முழுப்பலத்தையும், வளத்தையும், இந்த ஊர் மக்களையும் ஒன்று திரட்டி அவர்களுக்கு 'புதிய அரசியல் சக்தி'யை அளித்து எமது பிரதிநிதிகளாக அங்கீகரித்து ஆணைகளை ஆயிரமாயிரமாக மரச்சின்னத்திற்கும், அவர்களின் விருப்பு இலக்கங்களுக்கும் வழங்குவதில் எஞ்சிய இறுதி இரு தினங்களிலும் இராப்பகலாக கண் துஞ்சாது, ஊண் கொள்ளாது, ஓய்வை ஹறாமாக்கிக் கொண்டு ஊர் முழுக்க ஒருங்கிணைத்துச் செயற்பட உழைப்போம் என்பதை இத்தால் அழ்ழாஹ்வின் மாளிகையின் முன்னால் நின்று இப்பிரசுரம் மூலம் பிரகடனம் செய்கின்றோம்.

இன்னமும் நாம் பொய்யர்களின் பேச்சைக் கேட்பதற்குத் தயாரில்லை. ஏமாற்றுக்காரர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு பணிந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் வழங்கிய அரசியல் அதிகாரத்தை அழ்ழாஹ்வின் மார்க்கத்திலும் துஷ்பிரயோகம் செய்தவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளவேண்டிய எந்தத் தேவையும் எமக்கில்லை. இந்த உருவச்சிலைகள் விடயத்தில் இன்னமும் அடங்கிப்போக வேண்டிய நிலைமையும் எமக்கில்லை.

புறப்பட்டு விட்டோம்! தீர்;மானம் எடுத்து விட்டோம்! சக வேட்பாளர்களின் விருப்பறியக் காத்திருக்கின்றோம். நாளை விடிகின்ற பொழுது, இந்த ஊரில் சத்திய சன்மார்க்கத்தை உறுதிப்படுத்திய நாளாக விடிய வேண்டும்! அந்த உறுதிப்பாட்டுக்காக நாம் ஒவ்வொருவரும் என்ன விலையைக் கொடுப்பதற்கும் தயாராக வேண்டும். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவித்து இச்சமூகத்தை ஏய்த்துப் பிழைத்து அரசியல் ஜாம்பவான் என்ற அதிகார மமதையில் அரசியல் போதையில் ஆடியவர்களை வரும் 17ம் திகதி அதிகாலைப் பொழுதில் மீண்டும் ஒரு முறை இந்த மண்ணிலிருந்து 'காணமல் போனவர்'களாக நாம் பிரகடனம் செய்ய வேண்டும். 

எல்லாம் வல்ல அழ்ழாஹ் எமது தூய நோக்கங்களுக்கும், செயற்பாடுகளுக்கும் இம்மையிலும், மறுமையிலும் நற்கூலியை வழங்கியருள்வானாக என்று மாத்திரம் நாம் ஆதரவு வைக்கின்றோம்! அல்ஹம்துலில்லாஹ்!! அழ்ழாஹு அக்பர்!! வலில்லாஹில்ஹம்து!!




avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :