(அபூநிதா)
அவதானம் - 01
அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து உறுப்பினர்களுக்காக தமிழர் முஸ்லிம்கள் என பலர் களமிறங்கியிருந்தனர்.
குறிப்பாக, இம்மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலேயே தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் களைகட்டியிருந்தன. அதிலும் குறிபாக காத்தான்குடியிலேயே எதிரும் புதிருமான பிரச்சாரங்கள், ஆளையாள் ஏசுகின்ற நிலைப்பாடு, ஒருவர் விவாதத்திற்கு அழைக்க அடுத்தவர் முடிந்தால் பதில் கொடுங்கள் என்று ஒளிந்து கொள்ளுகின்ற போக்கு என பல்வேறு விடயங்கள் காணப்பட்டன.
எப்படியோ தேர்தல் முடிந்தது. மக்கள் எதிர்பார்த்தது போல் மூன்று தமிழர்களும், இரண்டு முஸ்லிம்களும் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர். அத்தோடு பிரச்சினை முடிந்து விட்டதா என்றால் இல்லை அப்போதுதான் பிரச்சினையே தொடங்கியது.
காத்தான்குடியில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், பொறியியலாளர் சிப்லி பாறூக் ஆகியோருக்கு தேசியப் பட்டியல் கொடுக்கப்பட வேண்டும் என்ற 'தேசியப்பட்டியல்' படலம் தொடங்கியது.
குறிப்பிட்ட சில நாட்களுக்குள் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடந்து அவரது சொந்த ஊரான காத்தான்குடியில் ஊர்வலங்களும் பட்டாசு முழக்கங்களும் இடம் பெற்றன. அத்தோடு பல இடங்களில் தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்று பலர் வைத்திய சாலைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.
அது மட்டுமல்லாமல் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நியாயமான காரணங்கள் இருப்பதை நியாயப்படுத்தியும் குறிப்பிட்ட சிலர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் றவூப் ஹகீமிடம் பேச்சு வார்த்தைகளை நடாத்தியிருந்தனர். அதைப்பற்றி கவனமெடுப்பதாகவும் முடிவு சொல்வதாகவும் கருத்துத் தெரிவித்த தலைவர் இதுவரை அதற்கான சைகையைக் காட்டவில்லை.
இவை ஒரு புறமிருக்க..
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் களத்தில் தோற்றது வென்றது யார் என்பது பற்றி அவதானத்தின் முதற்பகுதியில் சிறு குறிப்பொன்றைத் தரலாம் என நினைக்கிறேன்.
நடந்து முடிந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் போட்டியிட்டவர்களில் முக்கியமானவர்களாக முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், பொறியியலாளர் சிப்லி பாறூக், அலிசாகிர் மௌலானா, அமீரலி ஆகியோர் அடங்குகின்றனர். அவர்களில் அலிசாகிர் மௌலானா, அமீரலி ஆகியோர் வெற்றிபெற ஏனைய மூவரும் தோற்றுப் போனார்கள்.
இவர்களின் வெற்றி தோல்விக்கும் அப்பால் இன்னும் சில விடயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது
SLMC
01. மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டுப்போயிருந்த SLMC என்ற மரத்தை வளர்த்தெடுப்பதற்கு SLMC தலைமைத்துவம் NFGG யையும், பொறியியலாளர் அப்துர் ரஹ்மானையும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
02. நடந்து முடிந்த தேர்தலில் தனது பெயரையும், தமது கட்சி ஆசனம் பெற்றுக் கொண்டதையும் SLMC யின் தலைமைத்துவம் உலகுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறது.
03. முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை தோற்கடிக்க வேண்டும் என்ற SLMC யின் தலைமைத்துவக் கனவு இங்கே நனவாகியிருக்கிறது.
NFGG
04. பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், தான் ஒன்பது வருடங்களாக கட்டிக்காத்து வந்த நல்லாட்சி சிந்தனையை தனது தனித்துவத்தின் மூலமும், இந்த இணைவின் மூலமும் இன்னும் வளர்த்தெடுத்திருக்கின்றார்.
05. NFGG யின் அரசியற் கொள்கையினை ஏற்றுக் கொண்டிருந்த சுமார் 8000 வாக்காளர்களின் எண்ணிக்கையினை அப்துர் ரஹ்மான் சுமார் 12000 ஆக உயர்த்தியிருக்கின்றார்.
06. உள்ளுரில் வளர்த்தெடுத்த நல்லாட்சிக் கொள்கையை மாவட்ட ரீதியில் கொண்டு செல்வதற்கு NFGG இத்தேர்தலைப் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது
சிப்லி பாறூக்
07. முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கான தனது எதிர்ப்பையும், ஆத்திரத்தையும் பாவிப்பதற்கு இந்தத் தேர்தலை சிப்லி பாறூக் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
08. குறைந்த ஆதரவாளர்களுடன் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த பொறியியலாளர் சிப்லி பாறூக் அவர்கள், பொறியியலாளர் அப்துர் ரஹ்மானின் அரசியல் மேடையையும் பயன்படுத்தி அவருக்கான ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ளார்.
ஹிஸ்புல்லாஹ்
09. எத்தனை கோடி செலவு செய்தாலும் மக்கள் அதற்காக மயங்கமாட்டார்கள் என்பதை இந்தத் தேர்தல் மூலம் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் புரிந்து கொண்டுள்ளார்.
10. அரசியலில் தமக்கு எதிரிகளாக இருந்த றஊப் ஏ மஜீத். மற்றும் சல்மா ஹம்சா ஆகியோரை தன்னோடு இணைத்துக் கொண்டதன் மூலம் எதிர் வரும் உள்ளு}ராட்சி தேர்தல்களில் தனக்கு வரும் சவால்களில் கனிசமானவற்றை ஹிஸ்புல்லாஹ் குறைத்துக் கொண்டுள்ளார்.
11. ஊரை அழகு படுத்துவதைவிட உட்கட்டமைப்பு வேலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை மக்கள் வாக்களிப்பின் மூலம் ஹிஸ்புல்லாஹ் வுக்கு விளங்கவைத்திருக்கிறார்கள்.
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)
12. காத்தான்குடியில் பல்வேறு அமைப்புக்களும், இயக்கங்களும் இருந்தும் இந்தத் தேர்தலில் தமது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தைரியமாகச் சொன்ன ஒரு முதுகெலும்புள்ள அமைப்பாக தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) இடம்பிடித்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பு:
இது ஒரு தொடர் கட்டுரையாகும். இங்கே எழுதப்படும் கருத்துக்கள் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அதனை எமக்கு எழுதி அனுப்பினால் (பெயர் முகவரியுடன்) அதனை பக்கசார்பின்றி பிரசுரிக்க முடியும்.
avathanimedia@gmail.com
avathanimedia@gmail.com
அவதானம் தொடரும்...
