1436 ம் வருடம் எம்மை விட்டுப் பிரிந்து 1437 ம் புதிய வருடத்தை நாம் சந்தித்திருக்கின்றோம். சென்ற வருடத்தில் செய்த தவறுகளை எண்ணி மனம் வருந்தி அவற்றைக் கைவிட்டு
ஈமானிய உணர்வுகளோடு புனித இஸ்லாத்துடன் பின்னிப் பிணைந்து நல்லுபதேசங்களை நாம் பெற்று நற்கருமங்களில் ஈடுபடுவோம். என்ற பேரார்வாத்தோடு இனிய இஸ்லாமிய புதுவருடத்தை இன்ஷா அல்லாஹ் எதிர்நோக்குவோம்.
ஈமானிய உணர்வுகளோடு புனித இஸ்லாத்துடன் பின்னிப் பிணைந்து நல்லுபதேசங்களை நாம் பெற்று நற்கருமங்களில் ஈடுபடுவோம். என்ற பேரார்வாத்தோடு இனிய இஸ்லாமிய புதுவருடத்தை இன்ஷா அல்லாஹ் எதிர்நோக்குவோம்.
புனித மக்காவிலிருந்து மதீனா நகரை நோக்கி இஸ்லாத்தை வேரூன்றச் செய்வதற்காக மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணத்தை மையமாக கொண்டே இஸ்லாமிய கலண்டர் உருவாக்கப்பட்டள்ளது. இஸ்லாமிய வருடக்கணக்கில் முதல் மாதம் முஹர்ரமாகும். எனினும் ஹிஜ்ரத் சம்பவம் 'ரபீஉல் அவ்வல்' மாதமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வானம் பூமி படைக்கப்பட்ட காலம் முதல் அல்லாஹ் மாதங்களின் எண்ணிக்கையை பன்னிரண்டாக ஆக்கியுள்ளான். அதில் நான்கு மாதங்கள் சங்கைப்படுத்தப்பட்டுள்ளன. (முஹர்ரம், ரஜப், துல்-கஃதா, துல்-ஹஜ்)
யுத்தங்கள், போராட்டங்கள், கொலைகளற்ற புனித மாதங்களில் முஹர்ரமும் ஒன்றாகும். ஜாஹிலிய்யா கால மக்கள் கூட இம்மாதங்களை கௌரவப்படுத்தி யுத்த நிறுத்தங்களை மேற்கொண்டார்கள்.
இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டை முதன் முதலில் கணக்கிடச் செய்தவர் இரண்டாம் கலீபா உமர் (ரழி) ஆகும். இது ஹிஜ்ரி 16 ல் முடிவு செய்யப்பட்ட இஜ்மாவாகும்.
நபி (ஸல்) குறிப்பிட்டார்கள் முஹர்ரம் அல்லாஹ்வின் மாதமாகும்.
இஸ்லாமிய வருடக்கணக்கில் சந்திரனை மையமாகக் கொண்ட முதல் மாதம் முஹர்ரம் ஆகும்.
ஜாஹிலிய்யா கால குறைஷியர்கள் முஹர்ரம் 10ம் நாள் நோன்பு நோற்றார்கள். றமழான் மாதம் கடமையான நோன்பு நோற்பதற்கு முன்னால் முஹர்ரம் மாத நோன்பையே நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் கட்டாயக் கடமையாக நோற்று வந்துள்ளார்கள். இதில் சிறுவர்களையும் நோன்பு நோக்கப் பழக்கினார்கள். பின் ரமழான் மாதம் கடமையாக்கப்பட்டதும் விரும்பியவர்கள் முஹர்ரம் மாத நோன்பை பிடிக்குமாறு கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மதீனா நகர் வந்ததும் யூதர்கள் முஹர்ரம் மாதம் 10ம் நாள் நோன்பு நோற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் காரணம் கேட்டபோது இது மகத்துவமிக்க நாள். மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமூகத்தினரையும் அல்லாஹ் பாதுகாத்து பிர்அவ்னும் அவனது கூட்டத்தினரும் நைல் நதியில் மூழ்கடிக்கப்பட்ட நாள். எனவே மூஸா(அலை) இந்நாளில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி நோன்பு நோற்றுள்ளார்கள் எனக் கூறப்பட்டதும், யூதர்களை விட நாம் மூஸா (அலை) அவர்களுடன் மிகத் தொடர்புடையவர்கள் எனக் கூறி இந்நாளை நாமும் நோன்பு நோற்று சிறப்பிப்போம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
றமழான் மாத நோன்பிற்குப் பின்னால் நோற்கப்படும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதம் என அழைக்கப்படும் முஹர்ரம் மாதத்தில் பிடிக்கப்படும் நோன்பாகும் என நபி (ஸல்) கூறினார்கள்.
முஹர்ரம் மாத ஒன்பதாம் தினத்திற்கு அறபியில் 'தாஸூஆ' என்றும் பத்தாம் தினத்திற்கு 'ஆஷூரா' என்றும் அழைக்கப்படும்.
முஹர்ரம் மாதம் 10 ம் நாள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதால் முன்சென்ற வருடம் புரிந்த சிறுபாவங்களுக்கு தெண்டப் பரிகாரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
முஹர்ரம் 10ம் நாhள் நோன்பு நோற்பது ஸூன்னத்தாகும் என நபி (ஸல்) கூறியதும் இத்தினத்தில் யூத, கிறிஸ்தவர்களும் நோன்பு நோற்கின்றார்களே என ஸஹாபாக்கள் கேட்டனர். அதற்கு நபியவர்கள் யூத, கிறிஸ்தவர்களுக்கு மாற்றம் செய்யும் விதத்தில் நான் அடுத்த வருடம் உயிருடன் இருந்தால் 'தாஸூஆ' தினமாகிய முஹர்ரம் ஒன்பதாம் தினத்தில் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள். ஆனால் சொல்லப்பட்ட அடுத்த வருடம் நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கவில்லை. வபாத்தாகிவிட்டார்கள்.
9ம்,10ம் நாற்களில் ஸஹாபாக்கள் நோன்பு நோற்றுள்ளார்கள். எனவே 9ம், 10ம் நாளிலும் அல்லது 10ம், 11ம் நாளிலும் நாம் நோன்பு நோற்பது ஸூன்னத்தாகும்.
இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரி 61ல் ஈராக்கிலுள்ள 'கர்பலா' எனும் இடத்தில் ஹழ்ரத் ஹூஸைன் (றழி) அவர்கள் அங்கு நடந்த யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார்கள். இச்சம்பவம் முஹர்ரம் 10ம் நாள் ஆஷூரா தினத்தில் நடைபெற்றதாகும்.
மௌலவி ர்ஆ. ஷாஜஹான் (பலாஹி) ஆசிரியர் JP
மட்ஃகாத்தான்குடி மத்திய கல்லூரி. காத்தான்குடி
