(Mujeeb Ibrahim இன் முகநூலில் இருந்து . நன்றிகள் அவருக்கு..)
ஒரு சமூகத்தை சிதைத்து விடுவதற்கான தந்திரோபாய வழி அதன் அறிவுக்கருவூலங்களை அழித்துவிடுவதே!
யாழ்ப்பாண நூலகத்தை பேரினவாதிகள் எரித்ததும் இந்த இலக்கோடுதான். அது பல வருடங்களின் பின்னர் மீள் கட்டுமானத்திற்கு உட்பட்டாலும் அந்த நூலகத்தில் எரிந்து சாம்பலாய் போன விலை மதிக்கவொண்ணா நூல்களையும், அரிய அறிவுப்பொக்கிஷங்களையும் இனி யார் தருவார்?
எனது ஊரிலும் ஒரு நூலகம் இருந்தது... கிழக்கு மாகாணத்திலேயே அது போன்றதொரு நூலகம் அந்த காலப்பகுதிகளில் இருக்கவில்லை!
நேர்த்தியான யெளவன அமைப்புடைய அந்த நூலகம் , கண்ணாடிகளால் ஆன கட்டட அலங்காரத்தை கொண்டதனால் அதன் விசாலமும், வெளிச்சமும் மெருகேறி காணப்பட்டது.
ஏகப்பட்ட நூல்களோடு, வாசிப்புக்கு, கற்றலுக்கென வெவ்வேறு சிறந்த வசதிகளோடு வாழ்ந்த வாசிகசாலை அது!
தொண்ணூறாம் ஆண்டுகளில் புலிகளின் அட்டகாசமும், அடக்கு முறைகளும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதனால், எமதூர் மாணவர்கள் ஊருக்கு வெளியில் எங்கும் கல்வியை தேடி செல்தல் முடியாதிருந்த காலம்.
அப்படிப்போனால் உயிரோடு திரும்பவொண்ணாதென்ற அச்சம்!
அந்த இக்கட்டான வேளையில் ஆபத்பாந்தவனாய் அமைந்தது அந்த நூலகந்தான்.
இப்போது வைத்தியர்களாய், எந்திரிகளாய், சட்டத்தரணிகளாய், பிரதேச செயலாளர்களாய், இன்னும் பலவாய் உலகெங்கும் பரந்து வாழும் தொண்ணூறுகளின் மாணவச்செல்வங்களுக்கு அந்த நூலகத்தில் ஒரு சேவகன் இருந்தார்.....!
புத்தகப்பூச்சிகளாய் காலை முதல் இரவு வரை மாணவர்கள் அங்கே தவங்கிடந்தனர்.... மாலை 5 மணிக்கு மூடவேண்டிய நூலகத்தை பரீட்சை காலங்களில் இரவு 10 மணிவரை அவர் திறந்திருந்தார்!
ஆர்வமுள்ள மாணவர்கள் பலருக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று காலடியில் பாடப்புத்தகங்களை விநியோகம் செய்தார்...
குறிப்பிட்டளவு பரீட்சை வழிகாட்டிகளும், பாஸ் பேப்பர் நூல்களும் இருந்த காரணத்தால் நூலக நேரத்தில் அதனை படிக்க முடியாமல் போன மாணவர்களுக்கே இந்த பிரத்தியேக சேவையினை எதனையும் உபகாரமாய் எதிர்பாராமல் அவர் வழங்கிவந்தார்.
வாரமொரு உபயோகமான திரைப்படம் காட்சிப்படுத்தப்படும்...
உமர் முக்தாரை நான் கண்டதும் அங்குதான்!
மாணவர்கள் படிக்கும் பகுதி மயான அமைதி கொண்டிருக்கும்... அதிலும் அவர் அந்த பக்கம் வந்தால், குண்டூசி விழுமோசை கூட கேட்டுவிடும்.
அவ்வளவு பயம்!
ஐந்தாறு ஆண்கள் பாடசாலை அதிபர்களிடம் இருக்கவேண்டிய ஒட்டு மொத்த கண்டிப்பும், கடுமையும் அவரிடம் இருந்தது!
அதே வேளை, அவசிய நேரம் கனிவும் இருந்தது.
நூலகராக, ஆசானாக, அதிபராக, தந்தையாக, நண்பராக அவர் இருந்தார்.
ஒரு நாள் அந்த நூலகத்தை இடித்தார்கள்!
அந்த இடத்தில் கலாச்சார மண்டபம் ஒன்றை கட்டினார்கள்!
அப்போது இருந்ததை விட அழகான பெரிய நூலகமொன்றை கட்டித்தருவதாக அதை உடைத்தவர்கள் சொன்னார்கள்!
அப்போதே பலத்த சோகச்சுமைகளோடு அந்த நூலகச்சேவகரும் தனது வேலையை துறந்து போனார்!
எமது கனவு நூலகம் தகர்ந்து போய் பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது......அது போல ஒன்று மீண்டும் வரவில்லை!
இன்று அந்த நூலகரும் இறந்து போனதாய் சேதி வந்தது!!!
நெஞ்சு கனத்திருக்கிறது.
அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் சுவர்க்கத்தை அருள பிரார்த்திப்போம்.
"கல்விக்கு உயிர் கொடுத்தோர் மரிப்பதில்லை, மனித மனங்களில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்"
(Mujeeb Ibrahim இன் முகநூலில் இருந்து . நன்றிகள் அவருக்கு..)
