முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்த ஊழல் மோசடி செய்த கூட்டமே இந்த அரசாங்கத்தையும் சுற்றியி ருப்பதாக ஜனநாயக கட்சியின் தலைவர் பீல் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மட்டக்களப்பில் கடந்த
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ். எச். எம். சாபி தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா, நாட்டில் மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சி இன்னும் மலரவில்லை. அரசாங்கம் மக்கள் எதிர்பார்த்த திசையில் செல்லவேண்டுமானால் மஹிந்தவுடன் ஒட்டியிருந்தவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஜனநாயக கட்சி நாடு முழுவதிலும் தனித்து போட்டியிடுவதெனவும் முடிவு செய்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்தது நான்தான். மஹிந்தவை சுற்றியிருந்த பலர் இப்போது இந்த அரசாங்கத்தையும் சுற்றியுள்ளனர். அவர்களையும் தோற்கடிக்க வேண்டும் மஹிந்தவை தோற்கடித்த எனக்கு அவர்களை தோற்கடிப்பது பெரிய விடயமல்ல.
இந்தக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி போன்ற பழைய கட்சியல்ல. இந்தக் கட்சி ஒரு குழந்தை இப்போதுதான் வளர ஆரம்பித்துள்ளது. இதனை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் நீங்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வேண்டும் என்றார்.
இதில் மேல் மாகாண சபை உறுப்பினர் இந்திக பண்டார உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
ttnnews
