வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டு 2015 ஒக்டோபர் மாதத்துடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன. எனினும் அந்த மக்கள் இன்று வரை 'அகதிகள்' என்ற அவல நாமத்துடனேயே காலத்தைக் கடத்தி வருகின்றனர்.
புதிதாக ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்திலாவது தமது மீள்குடியேற்ற கனவு நனவாகுமா என்ற ஏக்கத்தில் அந்த மக்கள் காத்திருக்கின்றனர்.
கடந்த 100 நாள் ஆட்சிக் காலத்தின் போது வட மாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சரிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அத்துடன் விரைவில் அம்மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ்-, முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்திருந்தார்.
ஆனால் 100 நாள் ஆட்சி முடிந்து தேசிய அரசாங்கத்தின் ஆட்சியில் இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இது விடயத்தில் எந்தவித ஆக்கபூர்வமான விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட வடக்கின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் யுத்தம் முடிவடைந்த பின்னர் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
ஆங்காங்கே சிறு தொகுதி மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் சகல மக்களையும் மீள்குடியமர்த்தவோ அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவோ மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை.
புதிய அரசாங்கத்தில் மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதே அமைச்சின் இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பதவி வகிக்கிறார். அந்த வகையில் இவ்விரு அமைச்சர்களும் வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அதேபோன்று இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது வட மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடப்பாடாகும்.
வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தாமதமாவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே நிலவும் ஒற்றுமையின்மையும் பிரதான காரணம் என்பதை நாம் மறந்துவிட முடியாது. அதேபோன்று வடக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கிடையே நிலவும் புரிந்துணர்வின்மையும் இனவாதக் கண்ணோட்டமும் இதற்கு மற்றுமொரு தடையாகும்.
இந்த தடைகளைத் தாண்டி நல்லாட்சி அரசில் முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இல்லாதவிடத்து வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இதன் பிற்பாடும் எட்டாக்கனியாகவே போய்விடும். அவ்வாறான ஒரு நிலை ஏற்பட நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது.
-நன்றி விடிவெள்ளி
