வலம்புரி கவிதா வட்டத்தின் 21வது கவியரங்கு கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் பௌர்ணமியன்று(27.10.2015) நடைபெற்றது. குறிஞ்சித் தென்னவன் அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்கினார். பிரபல மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கம் பிரதம அதிதியாக கலந்து வகவ கவிதைகள் குறித்தும், குறிஞ்சித் தென்னவன் குறித்தும் சிறப்பான கருத்துக்களை முன்வைத்தார்;.
வகவ ஸ்தாபக உறுப்பினர் காத்திபுல் ஹக் எஸ்.ஐ.நாகூர் கனி வரவேற்புரை நிகழ்த்தினார்.
'இந்த கவிஞர்களின் கவிதா ஆற்றலை கண்ணுற்று நான் மெய்சிலிர்த்து நிற்கிறேன். தமிழ்ச்சங்கத்தில் மட்டும்தான் தமிழ் வளர்க்கப்படுகிறது என்ற எண்ணம் இங்கே வந்து நீங்கள் வெளிப்படுத்திய ஆற்றலினைப் பார்த்தபோது மாறிப்போனது. தமிழ்ச் சங்கத்தில் மட்டுமல்ல வாழைத்தோட்டத்திலும் தமிழ் வளர்க்கப்படுவதைப் பார்த்து பிரமித்து நிற்கிறேன மிகவும் அருமையான கவிதைகள் இங்கே வாசிக்கப்பட்டன. வித்தியாசமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன என்று கூறிய மு.சிவலிங்கம் அவர்கள் குறிஞ்சித் தென்னவனின் ஆற்றல்களை சிறப்பாக எடுத்துரைத்தார்.
'1934ம் ஆண்டு சுப்பையா முருகம்மா தம்பதிகளுக்கு மகனாப் பிறந்தவர் குறிஞ்சித் தென்னவன். அவரது இயற்பெயர் வேலு ஆகும். 5ம் வகுப்புவரைதான் படித்தவர். அதனால்தான் அவரது கவிதைகள் யதார்த்த தன்மை மாறாதிருந்தன. மரபுக் கவிதைகளையே அவர் எழுதினார். குறும்பாக்களையும் எழுதியுள்ளார்.ஆய்வாளர்கள் மலையகத்தில் பாரதிக்குப் பிறகு பாரதிதாசனுக்குப் பிறகு குறிஞ்சித்தென்னவனையே குறிப்பிட்டுள்ளனர். கலாபூஷணம், கவிச்சுடர், தமிழ்மணி போன்ற பல பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். 'எனக்குத் தொழில் கவிதையல்ல, எனது ரத்த நாளங்களில் ஓடும் உயிர்த் துடிப்பு' என பாடியவர் குறிஞ்சித் தென்னவன் என்றார்.
மேலும் உரையாற்றிய மு.சிவலிங்கம் அவர்கள் 'பத்திரிகை ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்விடுக்க விரும்புகிறேன். இன்றும் மலையகம் பற்றிய ஆக்கங்களுக்கு கூடையோடு கொழுந்து பறிக்கும் பெண்களையே படமாக இடுகிறீர்கள். ஏதோ இன்றும் ஆதிகால மனிதர்கள் அங்கு வாழ்வது போன்று. இன்று பல சவால்களை வெற்றி கொண்டு பல உயர் பதவிகளை மலையக இளைஞர்கள் வகிக்கிறார்கள். பல டாக்டர்கள், வக்கீல்கள், பேராசிரியர்கள் அங்கே உருவாகியிருக்கிறார்கள். எனவே மலையகம் பற்றிய கருத்துகளை மாற்றி அமையுங்கள். அவர்களை கேவலமாக காட்டாதீர்கள்' என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
வகவ தேசிய அமைப்பாளர் கலா விஸ்வநாதனால் வெளியிடப்படும் 'கவின்' சஞ்சிகை பிரதம அதிதிக்கு கையளிக்கப்பட்டது.
இளநெஞ்சன் முர்ஷிதீனின் தலைமையில் மிகவும் விறுவிப்பான கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர்கள் எம்.ஏ.எம்.ஆறுமுகம், வெளிமடை ஜஹாங்கீர், மாவை சோமசுந்தரம், இப்னு அஸூமத், எஸ்.தனபாலன், எம்.எச்.எம்.நவ்ஸர் (நௌஷாத்), எம்.பிரேம்ராஜ், புல்மோட்டை யாசிர் எம். ஹனீபா, வதிரி சீ. ரவீந்திரன், இம்போர்ட் மிரர் இணையதள செய்தி ஆசிரியர் அட்டாளச்சேனை எஸ்.எல்.எஸ்.ரிஸ்லி சம்சாத், கலா விஸ்வநாதன், கிண்ணியா அமீர் அலி, ஈழ கணேஷ், கவிக்கமல் ரசீம், மேமன்கவி, கலைவாதி கலீல், ஷங்கர் கைலாஷ், அலி அக்பர் ஆகியோர் கவிமழை பொழிந்தனர். ஜெர்மனியைச் சேர்ந்த கவிதாயினி மீரா குகன் வகவத்துக்கு அனுப்பி வைத்த கவிதை கவிதாயினி கலையழகி வரதராணியால் வாசிக்கப்பட்டது. பெங்களுரிலிருந்து வருகை தந்திருந்த பி.கே. சங்கர் அவர்களின் கவிதையும் வாசிக்கப்பட்டது.
உடுவை தில்லை நடராஜா, த. மணி, சமூகஜோதி ரபீக், எம்.எஸ்.எம்.ஜின்னா, கே. பொன்னுதுரை, கல்முனை முபாரக், கனிவுமதி, எஸ்.பரீனா, உஸ்மான் மரிக்கார், கே.திவாகர், எஸ்.ஏ.கரீம், எம்.இன்ஹாம், என்.ஐ.அஹமத், ஏ.ஆர்.எம.பரீத் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.


