சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குத் தடையாக செயற்படும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிரான அடையாள வேலை நிறுத்தமும், கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று(13) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் இடம் பெற்றது.
இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கு மேற்பட்ட சுலோகங்கள், பதாகைகளை ஏந்தியவர்களாக வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அமைதியான முறையில் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் திடீரென்று அடையாள வேலை நிறுத்தத்திலும், கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டதனால் எதிர்பாராமல் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் ஏமாற்றமடைந்து, ஆத்திரப்பட்ட நிலையில் காணப்பட்டனர். சிலர் தலைவிதியை நினைத்து அழுது தீர்த்தனர்.
பலர் நமது பிராந்திய செய்தியாளரிடம் அழுதவாறு குரல் பதிவுகளையும் வழங்கினர்.
இது குறித்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியேட்சகர் டாக்டர் வை.பி.ஏ.அஸீஸ் கருத்துத் தெரிவிக்கையில் ' எமது வைத்தியசாலையில் எத்தனையோ தேவைகளும், குறைபாடுகளும் இருந்திட்ட போதிலும், அவற்றைப் பொருட்படுத்தாது பெருந் தியாகத்திற்கு மத்தியில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறோம். ஆனால், எமக்குக் கிடைக்க வேண்டிய பல உரிமைகள் எமது மேலதிகாரியான கல்முனை பிராந்திய சேவைகள் பணிப்பாளரால் தடுக்கப்பட்டுள்ளது. எனவே, எமது வைத்தியசாலையின் பராமரிப்பை மாகாண சுகாதார சேவை பணிப்பாளரின் கீழ் கொண்டு வருமாறு கோரியே இன்றைய அடையாள வேலை நிறுத்தத்தையும், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுக்கின்றோம்' எனத் தெரிவித்தார்.






