இலங்கையில் 2010முதல் 2014வரை நெருங்கிய உறவினர்களால் 1,040 சிறுவர்களும், 370 பெண்களும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுனர் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, தேசிய மகளிர் குழு ஆகியவற்றுக்கும் பொலிஸுக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நெருங்கிய உறவினர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் தேசிய மகளிர் குழுவிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளைவிட பொலிஸுக்கு மிகக் குறைந்தளவான முறைப்பாடுகளே செய்யப்பட்டுள்ளன என அமைச்சின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் ஜே.வி.பியின் விமல் ரத்நாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு சபையில் சமர்ப்பித்திருந்த பதிலிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தவை வருமாறு:-
2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை நெருங்கிய உறவினர்களால் 1,040 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 916 முறைப்பாடுகளும், பொலிஸாருக்கு 124 முறைப்பாடுகளும் அறிக்கையிடப்பட்டுள்ளன.
இதற்கமைய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 2010ல் 127, 2011ல் 165, 2012ல் 17, 2013ல் 340, 2014ல் 267 முறைப்பாடுகள் என மொத்தமாக 916 முறைப்பாடுகளும், பொலிஸாருக்கு 2010ல் 17, 2011ல் 11, 2012ல் 18, 2013ல் 46, 2014இல் 32 என மொத்தமாக 124 முறைப்பாடுகளும் அறிக்கையிடப்பட்டுள்ளன.
இதேவேளை, 2010முதல் 2014வரை நெருங்கிய உறவினர்களால் 370 பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என தேசிய மகளிர் குழுவுக்கும், பொலிஸுக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகளில் தேசிய மகளிர் குழுவுக்கு 345 முறைப்பாடுகளும், பொலிஸுக்கு 25 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மகளிர் குழுவுக்கு 2010ல் 38, 2011ல் 78, 2012ல் 93, 2013ல் 41, 2014ல் 95 என 345 முறைப்பாடுகளும் பொலிஸுக்கு 2011ல் 04, 2012ல் 04, 2013ல் 06, 2014ல் 11 என 25 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
