உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறுமெனவும் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதித்துவம் 25 வீதமாக அதிகரிக்கப்படுவதற்கான சட்ட மூலம் அடுத்தமாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் மாகாண சபைகள் உள்ளூராட்சி பிரதியமைச்சர் கரு பரணவிதான தெரிவித்தார்.
25% பெண் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்துக்கும் பெற்றுக் கொள்ளும் வகையில் சட்ட மூலம் அமையுமெனவும் அவர் கூறினார்.
நேற்று மதியம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் பதிலளிக்கையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் நாட்டின் அரசியலில் புரட்சிகர மாற்றம் ஒன்று ஏற்படவுள்ளது. கடந்த காலங்களில் பெண்கள் விருப்பு வாக்கு தேர்தல் முறைமையில் கீழ் தேர்தலில் போட்டியிடுவதற்கு அஞ்சினார்கள்.
அரசியல்வாதிகளின் விதவைகளே போட்டியிடுவதற்கு முன்வந்தார்கள். உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொகுதிவாரியும், விகிதாசார முறையும் கலந்ததான புதிய முறையில் நடைபெறவுள்ளமை பெண்களுக்கு வாய்ப்பாக அமையும் என்றார்.
