(எம்.எல்.எம்.அன்ஸார்)
சென்னை வெள்ளத்திற்கு
எதிராக வழக்குப்போட
சுப்ரமணிய சுவாமியைப்போல
பதறிக்கொண்டிருக்கிறது
வெயில்!
*
வெள்ளத்திற்கு எதிரான
விசாரணைகள்
தமிழ் நாட்டில் இடம்பெற்றால்
தேங்கி நின்று தப்பித்துக் கொள்ளும் என்று
வேறு மாநில ஆறுகளுக்கு
மாற்றுமாறு
தமிழன்பனைப்போல
அரசியல் பழிவாங்கத்
துடிக்கிறது சூரியன்!
*
வெள்ளத்தின் வங்கிக்
கணக்கு மீதிகள்
கடலூர் காஞ்சிபுரம்
திருவள்ளூர்
ஊர்களில் இன்னும் அப்படியே
இருக்கிறது.
மழையிடம் வாங்கிய சம்பளத்திற்கு மேலதிகமாக
அழிவுகளை அது
போன இடங்களிலெல்லாம்
சேர்த்து வைத்திருக்கிறது!
*
இன்றுவரை வெள்ளம்
62 மனிதர்களை உயிரோடு விழுங்கிக்
கொன்றதை
கண்ணால் கண்டதாக சொல்கிறது
சூரியன்!
*
ஏரி குளம் ஆறுகளின்
பெயர்களிலும்
வெள்ளம் சொத்துக்களை
பதுக்கி வைத்திருப்பதை
காட்டித்தர
தன்னையும் ஒரு தரப்பாக
சேர்க்குமாறு
வெயில் வரிந்துகட்டிக்
கொண்டு நிற்கிறது!
*
தனது வெப்பத்தை சாட்சியாக
இணைத்துக் கொண்டால்
வெள்ளத்தின் ஆட்சி நிருவாகம்
இடம் பெற்ற
மாவட்டங்களில்
தனியார் அரச சொத்துக்களை
வெள்ளம்
முறைகேடு செய்த மோசடியை
ஓரிரு நாட்களில் கண்டுபிடித்துத்
தர முடியுமென்று
உசாராகப் பார்க்கிறது
சூரியன்!
*
வெள்ளம் மீது சுமத்தப்
படும் குற்றச் சாட்டுக்களை
விசாரணை செய்வதற்காக வானம் ஏற்றுக் கொண்டாலும்
சூரியனும்
சூரியனின் கணக்கு வழக்குகளை
கவனித்துக் கொண்டிருக்கின்ற
வெயிலும்
இரண்டு மூன்று மாதங்களுக்கு
முன் சென்னைக்குள் புகுந்து
சுட்டுக் கொளுத்திப்போட்ட
வழக்குகள் இன்னும்
நிலுவையில் இருப்பதால்
வெள்ளத்திற்கு அழைப்பாணை
அனுப்புவதை
திகதி குறிப்பிடாமல்
தள்ளிப் போட்டிருக்கிறது வானம்!
*
அனால் சூரியனின் தீவிர
தொண்டரான வரட்சி
பதவியை எதிர்பார்த்து
மழையின் சொத்து விபரங்களை
வானம்
பிழையாகக் கணக்கிட்டு
வெள்ளைத்திற்கு ஆதரவாக
தீர்மானம் எடுத்திருப்பதாக
மேன்முறையீடு செய்யவும்
கூடும்!
*
இப்படிக் கவிதை எழுதியதை
எனது அறைக்குள் தரையளவு
வந்துவிட்டுச் சென்ற
தண்ணீர் கண்டுவிட்டுப்
போய்
வீதியில் நீண்டு விரிந்து
கிடந்த வெள்ளத்திடம்
கோள் மூட்டிக் கொடுத்திருக்க
வேண்டும்.
கடைக்குப் போக தெருவுக்கு வந்தேன்.
அங்கு என்னை
சீறிப் படமெடுத்து ஆடிய
வெள்ளம்
இடுப்புவரை கவ்விப்
பிடுத்துக் கொண்டது!
03-12-2015
