Featured Home (TOP)

Recent Comments

Saturday, December 26, 2015

avathani Media Network

As-Zafar ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு

எம்.பீ.முஹம்மதுஸில்மி(கிழக்கு பல்கலைக்கழகம்)

As-Zafar ஒன்றியத்தின் முழுமையான ஏற்பாட்டில் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல், மீராவோடை "அல்-ஹிதாயா  மஹா வித்தியாலய" உயர்தர மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை வழங்கலும், "குரு பிரதீபா" விருது பெற்ற ஆசிரியரை கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக்கருத்தரங்கும்.


மேற்படி நிகழ்வானது அல்-ஹிதாயா மஹா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் 2015.12.25 ம் திகதி பிற்பகல் 03:30 மணியளவில் அமைப்பின் தலைவர்  ஏ.ஏ.சப்ரான் ,செயலாளர்  எம்.எம்.முர்சிதீன்  ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டு  இரவு 7:30 மணியளவில் நிறைவுக்கு வந்த இந்நிகழ்வில்
உதவிக் கல்வி பணிப்பாளர் (முன்பள்ளி) எச்.எம்.ஜெமிலுன் நிஷா,வைத்தியர் பீ.எம்.பிர்னாஸ், மௌலவி யு.எல்.எம்.இல்லியாஸ் (ஷர்கி),எச்.எம். பாக்கிர் (பொருளியல் விரிவுரையாளர்)  எஸ்.எ.அன்வர் ஆசிரியர், மற்றும் ஐ.எம். றிஸ்வின் (செயலாளர் அல்-கிம்மா அமைப்பு) மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், நிதியுதவி வழங்கியோர்,சமூக நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் என பல்வேறுபட்டவர்கள் கலந்துகொண்டு பாரிய இடையூறுக்கு மத்தியிலும்  மிகப்பிரம்மாண்டமாக இடம்பெற்றது 

இந்நிகழ்வானது "கிராத்"ஓதி ஆரம்பம் செய்யப்பட்டு தலைவரின் உரையும் அதனை தொடர்ந்து இந்நிகழ்வுக்கு வருகை தந்த சிறப்பாளிகளின் உரையும் இடம்பெற்றதுடன் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணக்கையளிப்பு,  கௌரவிப்ப நிகழ்வு,  உயர்தர பிரிவு மாணவர்களுக்கான வாசிகசாலைப்பிரிவு அறிமுகம் மற்றும் கருத்தரங்கு ஆகியன சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அஸ்-ஷபர் ஒன்றியம் எதிர்காலத்தில் மிகச்சிறந்த நிலையை நோக்கி நகரவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்ததோடு  இந்நோக்கம் சார்ந்த அமைப்புகள் பல இயங்கி வருகின்ற போதிலும் இவ்அமைப்பானது முன்உதாரணமாக தனது செயற்பாடுகளை செய்து வருகின்றது என பலராலும் இச்சந்தர்ப்பத்தில் பேசப்பட்டது. மேலும் இவ் ஒன்றியத்தினுடைய செயற்பாடுகளை மற்றய நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சிறப்புரையாளர்களால் வேண்டப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் எச்.எம். பாக்கிர் அவர்களால் எதிர்காலத்தில் இவ்வூரில்" வர்த்தகத்துறையை விரிவுபடுத்தல்" என்ற தொனிப்பொருளில் மிகச்சிறப்பாக மாணவர்களை மேம்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தியபின்னர் நன்றி உரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக நிறைவுக்குவந்தது








Read More
avathani Media Network

நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா.

(முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்.)

நிந்தவூர் "லகான் விளையாட்டுக் கழகத்தின் 2015 ம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழவும் வீரர்கள் கௌரவிப்பு நிகழ்வுமானது இன்று 26-12-2015 ஞாயிற்றுக் கிழமை நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் கழகத்தின் தலைவர் எ.எ.ஷாகிர் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக சுகாதார பிரதி அமைச்சர் எம்.சி.எம், பைசால் காசிம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தீன் அவர்களும் கலந்துகொண்டதோடு விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட விளையாட்டுத் துறை உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜுதீன் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களென பலர் கலந்துகொண்டனர்.

மேலும் இதில் நிந்தவூர் பிரதேச பாடசாலைகளில் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் அதிக பெறுபேறுகளை பெற்ற 36 மாணவ மாணவிகளும் கௌரவிக்கப்பட்டதுடன் 18 வறிய மாணவ மாணவிகளுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் "லகான் விளையாட்டு கழகத்தின் அனைத்து உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். லகான் விளையாட்டு கழகத்தில் 2015ம் ஆண்டின் விசேட திறமையை வெளிப்படுத்திய வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் லகான் விளையாட் கழகமானது  கழகம் உருவான காலம் தொட்டு இதுவரை காலமும் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வாருகின்றமை குறிப்பிடத்தக்கது.







Read More
avathani Media Network

2016 முதல் கொழும்பில் சொகுசு பஸ் சேவை


அடுத்த ஆண்டு முதல் கொழும்பு நகரத்திற்குள் சொகுசு பஸ் சேவைகளை ஆரம்பிக்கப் போவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

அந்த அமைச்சின் 2016ம் ஆண்டு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரலில் இந்த திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, சிறிய பஸ்கள் 80 கொள்வனவு செய்தல், நாடு பூராகவும் உள்ள பஸ் டிப்போக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், அனைத்து டிப்போக்களுக்கும் பற்றுச்சீட்டு இயந்திரங்கள் வழங்குவதை இறுதி செய்தல் உட்பட்ட பல திட்டங்கள் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 
Read More
avathani Media Network

மூதூரில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் சொந்த வீடற்றவர்களே

சுனாமி பேரழிவு நிகழ்ந்து இன்றுடன் பதினொரு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள போதிலும், மூதூரில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் சொந்த வீடின்றி, உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக மூதூர் பிரதேச செயலாளர் யூசுப் தெரிவித்தார்.
சுனாமி பேரழிவில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூறி நாடளாவிய ரீதியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், சுனாமி அனர்த்தம் நடைபெற்று பதினொரு வருடகாலம் ஆகியுள்ள நிலையிலும் இன்னமும் மூதூரில் 118 குடும்பங்கள் தங்களுக்கென்ற சொந்த வீடுகள் இல்லாது உறவினர் மற்றும் நண்பர்களது வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் இன்னமும் தரிசு நிலங்களாகவே காட்சி அளிக்கின்றது எனக் குறிப்பிட்டார்.
மேற்படி நிகழ்வில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் சுனாமி அனர்த்தத்தில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களில் தெரிவுசெய்யப்பட்ட சில குடும்பங்கள் அரசின் வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டத்தினுள்  உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள், காசோலைகள் மற்றும் உதவிப்போருட்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் யூசுப், திருகோணமலை மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் விராஜ் திசாநாயக்க மற்றும் இராணுவ அதிகாரி கப்டன் பிறேமதிலக, கிராம சேவையாளர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
Read More
avathani Media Network

இதுவரை கலைக்கப்படாத சகல நகர சபைகளினதும் பதவிக்காலம் நீடிப்பு

இதுவரை கலைக்கப்படாதுள்ள சகல நகர சபைகளினதும் உத்தியோகபூர்வ பதவிக்காலம் மேலும 6 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இநத விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறை தொடர்பான பிரேரணைகள் பாராளுமன்றத்தில் கடந்த முறை நிறைவேற்றப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் தமது அரசாங்கம் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அது குறித்த தீர்மானங்களை மேற்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.
புதிய தேர்தல் முறை திருத்தங்களுக்காக நாடளாவிய ரீதியில் யோசனைகள் கோரப்பட்டிருந்த நிலையில் சுமார் 2000 இற்கும் அதிகமான மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
Read More
avathani Media Network

உப்புநீரில் ஒயில் கலந்து எழுதிய மரண சாசனம்



















(கலைமகன் ஹுதா உமர்)

இந்த நாள் தான் -அது 
காலையில ஏழரை எட்டு 
மணியிருக்கும் !!!

வாப்பா வட்டைக்கு 
மீன் வீசப்போகிருந்தார் 
பழுதான தையல் மெசினில 
உம்மாவும் நூல் கொருத்திருக்கா !!!!

படுத்தொளும்பி பல்லுத்தீட்டல 
பழைய சொறி புடிச்ச குண்டையெலாம் 
தண்ணியில நிரப்பி 
களுவிக்கொண்டிருக்கையில !!!!

கடல் வருகுதுகா கௌலா 
என்றொரு சத்தம் 
கடலா......?
எழும்பிப்போகி பாக்கைல 
கரவலத்தோனியொண்டு 
பர்ஸானாட கூரையில..........

பக்கத்து ஒழுங்கையால 
ஓடியவனும் ஆலிம் ரோட்ல !!!

வெள்ளைக்குட்டி ஆலிம் 
மத்ரஸாவில ஓதிக்கொண்டிருந்த 
தங்கச்சியவளையும்  இழுத்துக்கொண்டு 
ஓடிப்போகிறான் 
கரைச்சை நிரம்பி வழிகிறது......

மேல்சட்டை எதுவுமில்லை 
சின்னப்பாலத்தை அடைந்திருந்தும் 
ஒழவு மிசிநேரிப்போனப்போ 
ஒருநாளும் கண்டிராத மகாராசி 
அவ சம்மாந்துறையில 
ஒரு மஞ்சள் சட்டை தந்தா !!!!!

காலைச் சாப்பாடாக 
அவதந்த ஸ்பான்ஜ் கேக் 
இன்றும் இனிக்கிறது 
அவ மனசி போல ......

சுதாகரித்துக்கொண்டு 
இப்போதான் சுய நினைவுக்கு- வந்தேன் 

தையல் மிசினிலிருந்த உம்மா 
வலை வீசப்போன வாப்பா 
குசினிக்க இருந்த மூத்த தங்கச்சி 
குடும்பத்தாருக்கு என்னாச்சி........?

ஓ விட்டு அழுகிறேன் .....!!!
பல கிலோமீட்டர் தூரத்தை 
நடந்தே கடக்கிறேன்....

என்னோடு விளையாடிய சிலரை 
வெள்ளை புடவையால் சுத்தி 
சம்மாந்துறை நகர மண்டபத்தில்  
முகந்திறந்து காண்கிறேன்.....

இதயம் பலமடங்கு 
வேகமாக துடிக்கிறது......
என் தாய்க்கு ஒப்பான எனது 
மாமி,
ஜனாஸாவாக காண்கிறேன்.....

இப்போதுதான் மயக்கமும் 
முகவரி தருகிறது....

தாருசலாம் பள்ளியிலிருந்து 
மர்ஜானுக்கு நடந்தே போகிறேன்....

நடு வீதியில் ஒருவர் 
மலிபன் விஸ்கட் பெட்டியை 
என்கையில் 
பலவந்தமாய் -திணிக்கிறார் 

சுமந்து கொண்டே 
மர்ஜானை அடைகிறேன்.....

நண்பகல் 12.30 
என்வாழ்வில் மற்றுமொரு முறை 
கருவறையில் நான் கேட்ட 
அதே இதயத்துடிப்பு !!!

இறுக்கியணைத்து என் தாய் 
அழுத அந்த கண்ணீர் இன்று 
நினைத்தாலும் 
உடல் ஆட்டம்காணும் !!!!

அடுக்கி வைத்த
அத்தனை மையத்துக்களையும் 
சுமந்து கொண்டு 
மையவாடிப்பள்ளியும்,
மஜீது மண்டபமும் 
விரக்தியில் நிற்கிறது........!!

உலகமே அழுத -நாள் 
அது என்று அவனறிய 
ஆண்டுகள் பல 
தேவைப்பட்டது........!!!

பள்ளிகள் இல்லையென்ற 
ஏக்கம் !!!
உறவுகளை இழந்த 
விரக்தி !!!
கடந்து போக மாதங்கள் 
பல ஆகிட்டு......

எத்தனை ஆண்டுகள் 
கடந்தாலும் -அவன் 
இரண்டாவது தாயாக 
சுவாசித்த அவன் மாமி 
வரவா போகிறா..........? 





@ கலைமகன் ஹுதா உமர் 
மாளிகைக்காடு -கிழக்கு
(இந்த கவிதை 100% எனது சொந்த அனுபவம் மட்டுமே...... என்னால் வெளியிடப்பட்ட 03 வது நூலான "இசை பாடும் மூங்கில் காடு"  கவிதை தொகுப்பு  நூலில் இடம்பெற்ற கவிதை இது.)
Read More
avathani Media Network

பேய் பிடித்த வெயில்


















(எம்.எல்.எம்.அன்ஸார்)

காரம் இல்லாத காய்ந்த கொச்சிக்காயை
அரைப்பது போல
வெயிலை அரைத்து வைத்திருக்கிறது சூரியன்!
*
வெட்டுக் குத்து சண்டியனைப்போல
அடாவடித்தனம் காட்ட இந்நேரம்
வீதிக்கு வந்திருக்க வேண்டிய வெயில்
கரப்பான் பூச்சிக்கு கதறி ஓடுகிற
பொம்பளைச் சட்டியாக
நிழல்களில் போய் ஒதுங்கி நிற்கிறது!
*
பூக்களே காலால் உதைத்து
ஓரமாக்கிவிடும் அளவிற்கு
செத்த பாம்பாகிக் கிடக்கிறது
இந்த மத்தியானத்திலும் வெயில்!
*
வானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்துவிட்டு
நேற்றுப் பகல் ஊருக்குள்
அதிரடியாக நுழைந்த மழையில் பயந்து
வெயிலுக்குப் பேய் பிடித்துவிட்டதாக
பட்டப்பகலிலும் நம்புகிறது சூரியன்!
*
மஹ்ரிப் ஆகுவதற்கு இடையில் எப்படியாவது
படுத்த படுக்கையில் கிடக்கும் வெயிலை
எழுப்பாட்டி விடுவதற்கு
ஜின் வைத்தியம் பார்த்துவிட்டு வரும்படி
கதிர்களை சூரியன் அனுப்பினாலும்
நேற்று தகர்க்கப்பட்ட வானத்தை  புலனாய்வு செய்வதற்காக
மேகங்கள்
ஆகாயத்தின் எல்லாக் கதவுகளையும்
இழுத்து மூடிவிட்டதால்
கதிர்கள் வெளியேற முடியாமல்
சூரியனிடமே திரும்பிச் சென்றுவிடுகின்றன!
25-12-2015
-எம்.எல்.எம்.அன்ஸார்




Read More