(முஹம்மது நியாஸ்)
இஸ்லாமிய
மார்க்கத்தில் விபச்சாரக்குற்றத்திற்கு வழங்கப்படுகின்ற தண்டனை முறைகளைப்
பற்றியும் அவை தொடர்பிலான காரண, காரியங்களையும் அலசுவதற்கு முன்னால் இந்த விபச்சாரம்
என்னும் பாவகாரியம் நாம் வாழ்கின்ற சமூக, சமுதாய மட்டங்களில் எவ்வாறானதொரு பார்வையும்
வடிவமும் பெற்றிருக்கின்றதென்பதை முதலில் பார்ப்போம்.
பொதுவாகவே இன்றைய
சமகால சூழலை பொறுத்தவரைக்கும் விபச்சாரம் என்பது அது ஒரு பாவமே இல்லை என்று
கருதுகின்ற அளவுக்கு சமுதாய வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று சர்வ சாதரணமாக
மலிந்தும் நிறைந்தும் காணப்படுவதை நாம் பார்க்கிறோம். மாத்திரமல்லாது விபச்சாரத்தை
நோக்கிய, விபச்சாரத்தின் பால் அழைக்கக்கூடிய வழிவாசல்களும் இன்று
அகலத்திறக்கப்பட்டு வயது வித்தியாசம், ஆண்பெண் வேறுபாடுகள் எதுவுமின்றி அனைவரையும்
கை நீட்டி வரவேற்கின்ற அளவுக்கு இந்த விபச்சாரம் என்னும் சீர்கெட்ட கலாச்சாரம்
இன்று நம்மத்தியில் ஆழமாக வேரூன்றி அகலமாக விழுதெறிந்து நிலைகொண்டுள்ளது.
தொலைக்காட்சியில் ஒளி
பரப்பப்படுகின்ற ஒரு சாதாரண பற்பசை முதல் கொண்டு பலசரக்கு விளம்பரம் வரைக்கும்
ஆண்-பெண் சேர்க்கை, காமம், விரசம் கலந்த இரட்டை அர்த்தங்களிலான உரையாடல்கள் என்று
ஊடகங்கள் தோறும் விபச்சார சாயம் பூசப்பட்ட நிலையிலேயே தகவல்கள்
வெளிக்கொணரப்படுகின்றன.
அதேபோன்று ஆண் பெண்
கள்ளத்தொடர்புகளும் காதல் என்னும் பெயரால் அந்நிய ஆண்-பெண் சந்திப்புக்கள்,
தனிமையான நேரடி மற்றும் நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் வாயிலான உரையாடல்கள்,
இன்னபிற சமாச்சாரங்கள் என்று விபச்சாரத்தின் சகல விதமான தூண்டுகோல்களும் இன்றைய
சமூகத்தில் மிகவும் சகஜமாகவே நடைபெற்றுவதை நாம் காண்கிறோம். இதை எல்லாவற்றை
விடவும் வருடத்திற்கு ஒரு தடவை காதலர் தினம் என்னும் பெயரால் சமகால இளம் தலைமுறை இரகசியமாகவும்
பரகசியமாகவும் அரங்கேற்றுகின்ற கலாச்சார சீரழிவுகளும் அதனையொட்டி பிந்திவரும்
நாட்களில் அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகளும் அசிங்கங்களும் தனியாக பல
அத்தியாயங்கள் வடித்து எழுதுகின்ற அளவுக்கு இன்றைய சமூக சூழல் ஒரு அபாயகரமான
நிலையில் காணப்படுகிறது.
இவ்வாறு விபச்சாரம்
என்பது, விபச்சாரத்திற்கான வழிவாசல்களை திறக்கக்கூடிய ஆண்-பெண் கலப்புக்கள்,
தனிமையான சந்திப்புக்கள் மற்றும் கள்ளத்தொடர்புகள் என்பவையனைத்தும் பாவகாரியம்
என்ற உணர்வே கிஞ்சித்தும் இல்லாமல் மிகவும் சர்வ சாதாரணமாகவே
நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சமகால சூழலில் அந்த விபச்சாரத்திற்கான தண்டனையாக
“கல்லெறிந்து கொல்லுங்கள்” என்று ஒருவர் கூறினால் அல்லது ஒரு சமூகம் வாதிட்டால்
நிச்சயமாக அதை யாராலும் ஜீரணிக்கவே முடியாதென்பது உண்மைதான்.
ஆனால் சமகால மனிதநேய(?)வாதிகள்
விபச்சாரம் செய்வதற்கு கல்லெறிந்து கொல்வது கொடூரமானது என்று விளங்கிய அளவுக்கு
இந்த விபச்சாரத்தினால் குடும்ப, சமூக, சமுதாய மட்டங்களில் ஏற்படுகின்ற கொடுமைகளும்
கொடூரங்களும் அசிங்கங்களும் எத்தகையவை என்று
ஆராய்வதில்லை. அவ்வாறு ஆராய்ந்து அறிந்துகொண்டாலும் அதுபற்றி அவர்கள் வாய்திறப்பதில்லை.
மேலும் இஸ்லாமிய
மார்க்கமானது விபச்சாரத்தையும் அந்த சீர்கேட்டின் மூலம் சமூகங்களில் ஏற்படுகின்ற நிவர்த்தி
செய்யமுடியாத சீரழிவுகளையும் தடுப்பதற்கும் குடும்பங்களுக்கிடையிலான ஒரு சீரான,
கட்டுக்கோப்பான வாழ்வியல் நெறிமுறையினை நிலை நாட்டுவதற்குமே இக்கொடும்பாவத்திற்கு
மிகவும் கடுமையானதொரு தண்டனையை பரிந்துரைக்கிறது.
ஆனால் அந்த தண்டனை
முறையானது கடுமையானது, கொடூரமானது என்று கூக்குரல் எழுப்புகின்ற மனிதநேய(?)க்காவலர்கள்
யாருமே அதற்கு பகரமான அதேநேரம் தம்முடைய சமூகத்திலிருந்தும் விபச்சாரம் என்னும்
கொடிய நோயை இல்லாதொழிப்பதற்கான மாற்றுத்தீர்வொன்றை அறிமுகப்படுத்தினார்களா என்றால்
இன்றுவரைக்கும் அது பூஜ்ஜியமாகவேதான் இருந்து வருகிறது.
ஆக மொத்தத்தில்
இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை கொடூரமானது என்று கூறி அதனை புறந்தள்ள எத்தனித்து மனிதநேயம்
என்னும் பெயரால் மனித இனத்தோடு வாழ்வதற்கே தகுதியும் தராதரமுமற்ற ஆறறிவு
மிருகங்களை ஆரத்தழுவிகொள்கின்றனர். இறுதியில் அந்த கொலைகாரர்கள், காமக்கொடூரர்கள்
மூலம் சமூகங்களை செல்லரித்து துவம்சம் செய்து வருகின்ற பெரும் பெரும்
குற்றச்செயல்களைக்கூட ஒழிப்பதற்கு முடியாவிட்டாலும் குறைப்பதற்கேனும் திராணியற்ற
நிலையில் இந்த மனிதநேய(?)க்காவலர்கள் அனைவரும் மூலைகள் தோறும் முடங்கிக்கிடப்பதையே
நிதர்சனமாக நாம் காண்கிறோம்.
ஆகவே
விபச்சாரிகளுக்கு இஸ்லாமிய மார்க்கம் வழங்கக்கூடிய கல்லெறி தண்டனை மாத்திரமல்லாது
ஏனைய குற்றச்செயல்களுக்கும் கூட இஸ்லாமிய ஷரீஆ வழங்குகின்ற தணடனைகள் அனைத்தையுமே
கொடூரமானது, கடினமானது என்னும் இவர்களது வாதம் நிச்சயமாக ஒரு கலப்படமற்ற,
அர்த்தமும் அடிப்படையும் இல்லாத சுயநல வாதம்தான் என்பது இங்கு தெளிவாகிறது.
இப்போது விபச்சாரம் மற்றும் அதற்கான தண்டனைகள் தொடர்பில் இஸ்லாத்தின்
நிலைப்பாட்டை பார்ப்போம்.
இஸ்லாமிய மார்க்கத்தை
பொறுத்தவரைக்கும் எடுத்த எடுப்பிலேயே விபச்சாரிகளை கல்லெறிந்து கொல்லுங்கள் என்று
அது கூறவில்லை. மாறாக ஒரு ஆணும் பெண்ணும் விபச்சாரம் என்ற பெரும்பாவத்தை,
அசிங்கத்தை நெருங்குவதற்கான வழி வாசல்களை முதலில் இறுக அடைக்கிறது. விபச்சாரத்தை
பற்றி எச்சரிகின்ற அதே தொனியில் அந்த விபச்சாரத்தை நெருங்கக்கூடிய
செயற்பாடுகளையும் தடைசெய்கிறது. விபச்சாரத்திற்கு மாற்றீடாக திருமணம் என்னும்
மிகவும் உன்னதமான ஒரு வாழ்வியல் நெறியை போதிப்பதுடன் அதனை உற்சாகப்படுத்துகிறது.
உதாரணமாக ஒரு அந்நிய
ஆணிடம் ஒரு பெண் நளினமாக குழைந்து பேசுவதை இஸ்லாம் தடை செய்கிறது. காரணம் ஒரு பெண்
அவ்வாறு நளினமாக குழைந்து பேசுவது அந்த ஆணுடைய உள்ளத்தில் இருக்கின்ற தீய எண்ணத்தை
திறந்துவிடும் என்பதால் அதை இஸ்லாம் தடை செய்கிறது.
மேலும் ஒரு அந்நிய ஆணும்
பெண்ணும் தனியே சந்திப்பதை இஸ்லாம் தடைசெய்கிறது. காரணம் நான்கு பேருக்கு
மத்தியில் இருக்கும்போது வராத உணர்வுகளும் வார்த்தைகளும் தனியே இருக்கும்போது
உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் பீறிட்டுப்பாயும். அதனால் இருவருக்கும் இடையில்
தகாத உறவுக்கான கதவுகள் திறக்கப்படும். ஆகவே ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில்
சந்திப்பதென்பது பஞ்சும் நெருப்பும் அருகருகே இருப்பதைப்போன்ற ஒரு அபாயகரமான
சந்தர்ப்பம் என்பதால் இஸ்லாம் அதை முற்றாகவே தடை செய்கிறது.
அதேபோன்று ஆண்களுக்கு
தங்களுடைய பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறும் இஸ்லாம் ஏவல் விடுக்கிறது. ஒரு அந்நிய
பெண்ணை உற்று நோக்குகின்றபோது அப்பெண் தொடர்பில் உள்ளத்தில் எழுகின்ற ஆசைகள் அவளை
அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவைக்கும் என்பது அதற்கான காரணமாகும். அந்த வகையில்
ஆண்கள் தங்களுடைய பார்வைகளை தாழ்த்திக்கொள்ளும்படி இஸ்லாம் கட்டளையிடுகிறது.
மேலும் பெண்களை
தங்களுடைய முந்தானைகளை சீர் செய்துகொள்ளுமாறும் இஸ்லாம் கட்டளையிடுகிறது. காரணம்
ஒரு ஆண் அவன் எப்பேர்பட்ட நல்லவனாக இருந்தபோதிலும் கூட ஒரு பெண்ணை முதன் முதலாக
எதிர்கொள்கின்றபோது அவனுடைய பார்வையானது அப்பெண்ணுடைய மார்ப்புப்பகுதியில்தான்
முதன் முதலாக முட்டி மோதிவிட்டு திரும்புகிறது என்பது உளவியல் ரீதியாக இன்று நிரூபிக்கப்பட்ட
உண்மையாகும். இதற்காகத்தான் பெண்கள் முந்தானைகளை தங்களுடைய நெஞ்சுப்பகுதியின் ஏற்ற
இறக்கங்கள், திரட்சிகள் புலப்படாத விதத்தில் முற்றாக மூடுகின்ற வகையில் சீர்
செய்துகொள்ள வேண்டும் என்பது முக்காலமும் அறிந்த இஸ்லாத்தின் மிக முக்கியமான ஒரு
கட்டளையாகும்.
ஆனால் இன்று நவீன
நாகரீகம் என்ற பெயரில் ஒரு பெண்ணுடைய மார்பகத்தின் தெளிவான அளவை பத்தடி தூரத்தில்
இருந்தே கணிப்பிட்டுக்கூறுகின்ற அளவுக்கு மிகவும் அசிங்கமான ஆடைகள் நடைமுறையில் இருப்பது
பெண்களுக்கான பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் என்பதை இந்த முற்போக்கு(?)வாதிகள்
யாரும் உணர்வதில்லை.
மேலும் பருவ வயதை அடைகின்றபோது
ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்கும்படி இஸ்லாமிய மார்க்கம் அவர்களுடைய
பொறுப்புதாரிகளை வலியுறுத்துகிறது. திருமணம் என்பது ஒரு ஆணையும் பெண்ணையும் தவறான
நடத்தைகளில் இருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும். அதன் காரணமாகத்தான் ஆணுக்கும்
பெண்ணுக்கும் திருமண வயது இதுதான் என்று குறிப்பிட்ட எல்லையை வகுக்காமல் அவர்கள்
தங்களுடைய உணர்வுகளை உணரத்துவங்குகின்ற பருவம் முதற்கொண்டு திருமணம்
முடித்துவைக்கும்படி இஸ்லாம் ஏவுகின்றது.
திருமணம்
முடிப்பதற்கு பொருளாதார வசதியில்லாத ஆண்கள் தங்களுடைய உணர்வுகளை
கட்டுப்படுத்திக்கொள்ளும் பொருட்டு நோன்பு நோற்குமாறும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நோன்பு என்னும் இறைவணக்கமானது ஒரு ஆணுடைய உடலில் பாலியல் ரீதியாக ஏற்படுகின்ற
வேட்கையினை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகிறது. ஆனால் இன்றைய நாட்களில்
பொருளாதார வசதியில்லாத சோம்பேறித்தனமான ஆண்கள் பெண் தரப்பாரிடம் வீட்டையும்
இன்னபிற சொத்துக்களையும் சீதனமாக அபகரித்து திருமணம் முடிக்கின்ற நடைமுறை இஸ்லாத்திற்கு
விரோதமானது என்பது தனியாக விபரிக்கப்படவேண்டிய விடயமாகும்.
அதேபோன்று திருமணம் முடித்த
கணவன்-மனைவிக்கு இல்லற வாழ்கையின் அவசியத்தை, அதன் அனுகூலத்தை எடுத்துக்கூறி
தாம்பத்திய உறவை ஊக்கப்படுத்துகின்றது இஸ்லாமிய மார்க்கம். தன்னுடைய பார்வைகளும்
உணர்வுகளும் தவறான பக்கங்களின் பால் திரும்புகின்றபோது அதற்குண்டான தேவையை
தன்னுடைய ஆகுமாக்கப்பட்ட துணையிடத்தில் மாத்திரம் தீர்த்துக்கொள்ளும்படி
இருபாலாருக்குமே இஸ்லாம் அறிவுரை வழங்குகிறது.
இது மாத்திரமல்லாது
தொழில் ரீதியாகவோ அல்லது ஏதேனும் தேவையின் நிமித்தமோ கணவன்-மனைவி பிரிந்திருக்க
நேரிடுகின்ற போது தங்களுடைய உணர்வுகளை கட்டுபடுத்திக்கொள்வதற்காக, ஒரு குறிப்பிட்ட
காலவரையறை வரைக்கும் தமது எண்ணங்களை திசை திருப்பிக்கொள்வதற்காக பல வணக்க
வழிபாடுகளை, இறை தியானங்களை இந்த இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தந்துள்ளது.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்
வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாலினத்தொடர்பு இல்லாமல் இருப்பது ஒருபோதும் முடியாத
காரியம். ஆனாலும் திருமணம் முடித்த கணவனும் மனைவியும் தங்களுடைய பொருளாதார
தேவைக்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு அவசியப்பாட்டிற்காகவோ பிரிந்திருக்கவேண்டிய
சூழல் ஏற்படுகின்றபோது இறைவன் மீதான அச்ச உணர்வு, தன்னுடைய கணவன் அல்லது மனைவிக்கு
மாத்திரமே உரித்தான கற்பு என்ற பிரத்தியேக உரிமை என்ற அமானிதத்தை
பேணிப்பாதுகாக்கும் பொறுப்புணர்வு போன்ற நற்குணங்களை இறை வணக்கம் மற்றும் இறை
தியானங்களின் மூலம் அடைந்துகொள்ளமுடியும். எனவே இறையச்சமுள்ள எந்தவொரு ஆணும் பெண்ணும்
எச்சந்தப்பத்திலும் இந்த விபச்சாரத்தின் பால் தலைசாயமாட்டார்கள் என்பது
அழ்ழாஹ்வின் வாக்குறுதியாகும்.
மேலும் இஸ்லாமிய ஷரீஆ
பெண்களுக்கு ஹிஜாப் எனும் ஆடை முறையை கடைப்பிடிக்கும் படி ஏவுகிறது. ஹிஜாப்
ஆடையானது ஒரு பெண்ணுடைய உடலில் முகம், மணிக்கட்டுக்கைகள் மற்றும் கரண்டைக்காலுக்கு
கீழுள்ள கால்ப்பாதம் ஆகியவற்றைத்தவிர ஏனைய இயற்கையாகவே அமையப்பெற்ற ஏற்ற
இறக்கங்களை, கவர்ச்சிகளை
வெளிக்காண்பிக்காத விதத்தில் அவற்றை முற்றாக மறைக்கும்படி அமைந்திருக்க
வேண்டுமென்பது இஸ்லாத்தின் கட்டளையாகும். அந்த ஆடையானது கறுப்பு நிறத்தில்தான்
இருக்கவேண்டும் என்று எதுவித சட்டதிட்டங்களும் இஸ்லாத்தில் வரையறுக்கப்படவோ
வழிகாட்டப்படவோ கிடையாது. மாறாக மறைப்பு என்பதே ஹிஜாபுடைய நோக்கமாகும். இது அந்நிய
ஆண்களுடைய உள்ளத்தில் தீய எண்ணங்கள் ஏற்படுவதை விட்டும் ஒரு பெண்ணை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய
ஒரு பலம் வாய்ந்த கேடயமாகும்.
அத்தோடு இஸ்லாமிய
மார்க்கமானது கட்டாயத்திருமணத்தை கண்டிப்புடன் தடை செய்கிறது. ஒரு பெண்ணுக்கு
பிடிக்காத மணமகனை பெற்றோர்கள், மற்றோர்களின் வலியுறுத்தலால் திருமணம் செய்து
வைப்பதையும் பின்னர் அப்பெண் தன்னுடைய கணவனை புறந்தள்ளிவிட்டு தனக்குப்பிடித்த
அந்நிய ஆடவனோடு வாசல்ப்படி தாண்டுவதையும் இன்றுநாம் மிகவும் சாதாரணமாகவே பார்க்கிறோம்.
இந்த சமுதாய சீரழிவு ஏற்படக்கூடாதென்பதற்காகவே திருமணத்தின்போது மணப்பெண்ணிடம்
அவளுடைய விருப்பத்தை கட்டாயம் கேட்டு அறிந்துகொள்ளும்படி இஸ்லாமிய மார்க்கம்
பொறுப்புதாரிகளிடத்தில் வலியுறுத்துகிறது.
அவ்வாறு மணப்பெண்ணின்
விருப்பத்துடன் நடைபெற்ற திருமணத்தில் கூட தன்னுடைய தேவையை அக்கணவனால் தீர்க்க
முடியாதென்று ஒரு பெண் உணர்கின்றபோது எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி மிகவும்
இலகுவாகவே அந்த திருமணத்தை முறைப்படி ரத்து செய்து மணவிலக்கை பெற்றுக்கொள்வதற்கும்
பின்னர் தான் விரும்பிய ஒரு ஆணை முறைப்படி இரண்டாவது திருமணம் முடிப்பதற்கும்
இஸ்லாமிய மார்க்கம் அப்பெண்ணுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கியே உள்ளது
ஏனைய சமயங்களை போன்று
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று காலாதிகாலத்திற்கும் கண்ணீரும்
கம்பலையுமாக காலத்தை கழிக்கின்ற பிற்போக்குத்தனமான சித்தாந்தத்தையும்
சடவாதத்தையும் ஒருபோதும் இஸ்லாமிய மார்க்கம் போதித்தது கிடையாது.
அதேபோன்று
ஆண்களுக்கும் கூட ஒரேயொரு மனைவியோடு தொடர்ச்சியாக வாழ்ந்து அந்த வாழ்க்கை
சலித்துப்போகின்றபோது மேற்கொண்டு இன்னொரு பெண்ணை வைத்து பரிபாலிக்கின்ற அளவுக்கு
வசதி, வாய்ப்புக்கள் இருந்தால் முறையாக பலதார மணம் செய்வதற்கும் கூட இஸ்லாம் தாராளமாக
அனுமதி வழங்கியேயுள்ளது.
இவ்வாறு இஸ்லாமிய
மார்க்கமானது “விபச்சாரிகளை கல்லெறிந்து கொல்லுங்கள்” என்று பொத்தாம்பொதுவாகக்
கூறிவிட்டு தானுண்டு தான்பாடுண்டு என்று இருந்துவிட்டுப்போகின்ற ஒரு கோட்பாடாக
இல்லாமல் அது இந்த விபச்சாரம் என்னும் கொடும்பாவத்தை சமூகத்திலிருந்தும்
இல்லாதொழிப்பதற்காக மிகப்பாரியளவிலான தீர்வுத்திட்டங்களை தன்னகத்தே வகுத்துவைத்துள்ளது.
ஆண் பெண் கலாச்சார
கட்டமைப்பு தொடர்பாக உலகில் வேறெந்த சமய சித்தாந்தங்களும் வழிகாட்டியிராத, போதனை
செய்திராத அளவுக்கு விபச்சாரம் என்ற பெரும்பாவத்தின் பக்கம் ஒரு ஆணோ பெண்ணோ
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நெருங்கவே அவசியமில்லாத விதத்தில் இஸ்லாமிய மார்க்கம்
கலாச்சார கட்டமைப்பு தொடர்பாக மிகவும் நேர்த்தியாக, செப்பனிடப்பட்ட பல சீரிய வழிகாட்டல்களை
மனித குலத்திற்கு வழங்கியுள்ளது.
விபச்சாரம்
செய்யக்கூடிய எந்தவொரு முஸ்லிமும் அந்த
விபச்சாரத்தை எவ்வழியிலும் எள் முனையளவும் கூட நியாயப்படுத்த முடியாத
அளவுக்கு ஆண் பெண் இருபாலாரினது வாழ்க்கையிலுமுள்ள பாலியல் தேவைப்பாட்டிற்கான
முறைகேடான அத்தனை வழிவாசல்களையும் முற்றாகவே இழுத்து மூடியுள்ளது.
ஒரு ஆணுக்கும்
பெண்ணும் தம்முடைய பாலியல் இச்சைகளை முறையான வழியில் தீர்த்துக்கொள்வதற்காக
மிகவும் நேர்த்தியான பல வழிகாட்டல்களை, சலுகைகளை, வசதி வாய்ப்புக்களை எல்லாம்
பொறுப்புடனும் அக்கறையுடனும் ஏற்படுத்திக்கொடுத்துவிட்டுத்தான் அதற்கு மாற்றமாக
செயற்பட்டால் மிகக்கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்கையும்
விடுக்கிறது.
(விபச்சாரத்தின்
மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற சீரழிவுகள், அதற்குண்டான தண்டனை முறைகள் மற்றும்
சவூதி அறேபியா போன்ற நாடுகளில் சமகாலத்தில் காணப்படுகின்ற சட்ட முறைமைகள் தொடர்பான
விடயங்களை இறைவன் நாடினால் அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஆராய்வோம்)
