மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோரின் ரூ.20 இலட்சம் நிதிஒதுக்கீட்டில் அட்டாளைச்சேனை மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று அட்டாளைச்சேனை 'ஒஸ்றா மெடிகல் தனியார் வைத்தியசாலை'க் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
அட்டாளைச்சேனை மறுமலர்ச்சி அமைப்பின் தலைவரும், ஊடகவியலாளருமான ஏ.எல்.றமீஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதியாகவும், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல் உபகரணங்கள் அடங்கிய பெறுமதிவாய்ந்த புத்தகப் பைகள், ஊடகவியலாளர்களுக்குப் பெறுமதியான கைப்பைகள், இரத்தப்பரிசோதனை செய்வதற்கான 'குளுக்கோ மீற்றர்கள்' என்பன இலவசமாக வழங்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் சமூக சேவையாளர்கள் நால்வர் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
'சமூகத்திற்கு என்றும் அழப்பரிய சேவைகளை துணிந்து நின்று, வேதனம் பாராது, வேதனைகள் பலவற்றைச் சுமந்து, தொண்டாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் என்றும் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் எப்போதும் தேகஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் சுயபரிசோதனை செய்யக் கூடிய குளுக்கோ மீற்றர் கருவியை அன்பளிப்பாக வழங்குகின்றோம்' என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.