(எம்.எல்.எம்.அன்ஸார்)
மாடறுத்து இறைச்சி விற்பனை
செய்வது போல
நேற்றைய இரவை
இன்று காலையில் அறுத்து
வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது சூரியன்!
*
வானத்தில்
சந்து சந்தாக தொங்குகின்றன வெண் மேகங்கள்!
*
வெள்ளிக் கிழமைப் பின்னேரத்தில்
மையறுக் கிழங்குப் பொரியலுடன்
ஆறாமல் குடிக்கின்ற மாட்டுக்கால் சூப்பாக
கொதித்துக் கொண்டிருக்கிறது
உஷ்ணம்!
^
உன் வியர்வைக் கசிவுகளை
வெயில் சமைத்த
உப்பிறைச்சிக் கறி ஆணம்
கொட்டுப்பட்டது என்று
யாருக்கும் பயம் இல்லாமல்
கூறு!
*
இருளுக்கு பால் கொடுப்பதற்காக
ஆகாயம் வளர்க்கின்ற பசு மாடுதான் நிலா!
நிலவை அறுத்து இறைச்சியாக்க
சூரியன் ஒருபோதும் விரும்புவதில்லை.
*
உனது முகத்திற்கு
இன்னும் நிலவுச்சத்து
தேவை என்றால்
நீயும்
நிலவில் பால் கறந்து குடித்துக் கொள்ளலாம்!
*
ஆனால் சூரியன் மாடறுத்தால்தான்
பகலுக்கு விருந்துபோட
கறி கிடைக்கும் உனக்கு.
மூளை காய்ந்த மொக்குக்
காடுகள்
சொல்வதுபோல
தொடர்ந்து மழையை அருந்தக்
கொடுத்தால்
வயிற்றுப்போக்கு வாந்தி
வந்து
மரங்கள் செத்துப் போயிடும்.
வெயில் இறைச்சிக்கறி
சமைத்து
உண்ணக் கொடுப்பதால்தான்
அரச மர இலைகள் நோய்
நொடிகளின்றி
பச்சைப் பசேலென்று கொழுத்து
வளர்ந்திருக்கின்றன!
*
அதற்காக
அரச மரங்களுக்கு கொழுப்பு
அதிகம் என்று
கேலி கிண்டல் செய்துவிடாதே!
*
பகல் சாப்பாட்டு நேரமாச்சு.
சூரியனின் கடையில் கறி
வாங்கி
வானம் முழுக்க அடுப்புமூட்டி
வெயில் சமைத்துக் கொண்டிருக்கும்
மாட்டிறைச்சிக்கறி பொங்கி
ஊரெல்லாம் கொட்டுப்படுவதை
எந்த ராசாவால்தான் தடுக்க
முடியும்?
21-01-2016
-எம்.எல்.எம்.அன்ஸார்
