Featured Home (TOP)

Recent Comments

Monday, January 4, 2016

avathani Media Network

உனது அபாயா மேகத்திடம்

(எம்.எல்.எம்.அன்ஸார்)  

நீ வெளியே போகின்ற போது
அணிகின்ற அபாயாவை
இன்று பகல்
மேகம் உடுத்திருந்ததைக் கண்டேன்.
நீ காயப்போட்டிருந்ததை
அது களவெடுத்ததா?
கைமாற்றுக்குக் கொடுத்தாயா?
*
வீட்டில் நீ உடுக்கின்ற
சல்வார் ஆடைகளை அவ்வப்போது
பூ மரங்களுக்கு கொடுத்து உதவுவது எனக்குத் தெரியும்!
*
நிலவுக்கு உடுதுணிகள் வாங்கிக் கொடுப்பதற்கு
வானம் இரவில் வந்துவிட்டுப் போகிறது.
உனது இரவு ஆடைகளை  ஒருபோதும்
இரவல் கேட்பதில்லை நிலவு அதனால் !
*
சரி போகட்டும்,
கருப்பு அபாயாவை கடனுக்கு அணிந்தாலும்  
மேகம் ஒழுக்கமாகத்தான்  இருக்கிறது.
எப்படியும் இன்று சாயந்தரம் உன் வீட்டுக்கு
மச்சியைப்போல மழை வந்து சேர்ந்துவிடும்.
சமுசாவும் பறங்கி வாழைப்பழமும்
வாங்கி வை.
மழை சாப்பிட்டுவிட்டுப் போவதற்கு!
*
இந்த நாட்களில் சூரியன்
கெட்டுப் போய்த்தான் கிடக்கிறது.
சூரியனின் பார்வை படாமல்
மரங்களும் மலர்களும்
அதன் அதன் வீட்டுக்குள்
பயந்து ஒதுங்கிப்போய் நிற்கின்றன!
*
நீ சிரிப்பை இரை குத்தி
என்னை சிக்க வைத்தது போல
இன்னும் இரண்டொரு நாட்களுக்கு
மழையை மயக்கி  வைத்திருக்கச் சொல்லி
மேகங்களுக்கு புத்திகூறு.
*
மழை உன் வீட்டில் தங்கி இருந்தால்
வேலைக்கரியைப்போல  
மரங்கள் மலர்களின் ஆடைகளைக் கழுவி
புதிதாக்கிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
நீ உன் ஆடைகளை
காலையிலும் மாலையிலும் இரவல் கொடுத்துவிட்டு
புலம்பித் திரிய வேண்டியதில்லை.
*
இன்றைக்கு எப்படியும் சூரியன் அந்தி  
நாலரை மணிக்கெல்லாம் தூங்கச் சென்றுவிடும்.
நோன்புப் பெருநாளைக்கு உடுப்பு வாங்குவதற்கு 
புடவை கடைத்தெருக்களில்
பொம்பளைகள் அலை மோதுவது போல
ஊர் முழுக்க அபாயா போட்ட மேகங்கள்
உலாத்தித் திரிகின்றன!
*
இன்றைய மழை சும்மா வராது.
உனக்கு ஏதாவது
செப்பு தூக்கிக்கொண்டுதான் வரும்!







 





avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :