( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனை பிரதான வீதியிலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மையோன் முஸ்தபாவின் இல்லத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 'ஹலோ ஆங்கில ஆரம்பப் பாடசாலை' யின் திறப்பு விழா நேற்று மாலை இடம்பெற்றது.
நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், ஹலோ ஆங்கில ஆரம்பப் பாடசாலையின் அதிபருமான எம்.எம்.றகீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலய ஆரம்பக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் பிரதம அதிதியாகவும், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.பரீட் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாலைதீவு ஆரம்பக் கல்வி பயிற்றுனரான திருமதி. திலாந்தி பெரேரா, கல்முனை மஃமூத் பெண்கள் கல்லூரியின் அதிபர் திருமதி. எஸ்.ஏ.லியாகத் அலி உள்ளிட்ட கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதி பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'ஒருமனிதனின் வாழ்வில் ஆரம்பக் கல்வி மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். ஒருவரை உருவாக்குவதும், அழித்து விடுவதும் ஆரம்பக் கல்விப்பருவத்தில் அவர் பெற்றுக் கொள்கின்ற கல்வியேயாகும். எனவே ஆரம்பக் கல்வியை வழங்குவதில் பெற்றோர்கள் மிக விழிப்புடன் செயற்பட வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.