(மர்சூக் அஹமட் லெப்பை)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய பட்டியலில் இரண்டில் ஒன்றுக்கு ஒரு வாறு நீண்ட இழுபறியின் பின் ஒரு முடிவு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. அவ்வெற்றிடத்திற்கு முன்னாள் பிரதி அமைச்சர் சின்ன தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழந்த பிரதி நிதித்துவத்தை இந்த தேசிய பட்டியல் பிரதி நிதி மூலம் மீண்டும் பெற்றுக் கொண்டுள்ளது.
2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களை நியமிப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியது. அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்து கேட்பதென்று கட்சி முடிவு எடுத்திருந்தது.
ஐக்கிய தேசிய கட்சியோடு சேர்ந்து கேட்பதால் ஐந்து பேருக்கு மாத்திரம் வேட்பாளர் தரலாம் என ஐக்கிய தேசிய கட்சி கூறி இருந்தது. இதனால் பிரச்சினை பூதாகரமாக கிளம்பியது. அம்பாறையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் ஊர்களுக்கும் ஒவ்வொரு வேட்பாளர்கள் கொடுப்பது என்றாலும் 10க்கும் அதிகமான வேட்பாளர் வெற்றிடங்கள் தேவை. கிடைத்திருப்பது ஐந்து பேருக்கு மாத்திரம். எந்த ஊருக்கு ஐந்து பேரையும் வழங்குவது என்பது சிக்கல். பின்னர் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார் நான்கு பேருக்கு மாத்திரம் தான் வேட்பாளர் தருவேன் என்று. ஐந்து நாலாகியதால் இன்னும் பிரச்சினை அதிகரித்தது. ரவூப் ஹக்கீம் மீண்டும் அதிரடியாக அறிவித்தார் மூன்று பேருக்கு மாத்திரம் தான் வேட்பாளர் தர முடியும் என்று. இதனால் இன்னும் பிரச்சனை கூடியது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற பைசல் காசிமுக்கும், ஹரீசுக்கும் வேட்பாளருக்குரிய சந்தர்ப்பம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மிகுதியாக உள்ள ஒருவரை சம்மாந்துறையில் இருந்து தெரிவு செய்வதென முடிவெடுக்கப்பட்டது.
சம்மாந்துறையில் யாருக்கு வழங்குவது என்பதில் சிக்கல் தோன்றியது. முஸ்தபா லோயருக்கா?, மாகாண அமைச்சர் மன்சூருக்கா?, சவூதி தூதுவராலய மாஹிருக்கா? வழங்குவது என்பதில் சிக்கல். இறுதியில் மன்சூருக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேட்பாளர்கள் தெரிவு செய்வதில் சிக்கல்கள் உருவாகின. அலிசாஹிர் மௌலானா பசீர் சேகுதாவூதுக்கு வேட்பாளர் நியமனம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததினால் சிக்கல்கள் தோன்றின. காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினரை இணைத்துக் கொள்வதில் சிக்கல்கள் தோன்றின. பின்னர் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன.
ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் வேட்பாளர் தெரிவு செய்வதில் எந்த சிக்கல்களும் தோன்றவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சின்ன தௌபீக் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இதனால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட கட்சி பிரமுகர்கள் சின்ன தௌபீக்கை பார்த்து தாருல்ஸலாத்தில் வைத்து 'நீங்கள் மாத்திரம் தான் எந்த சிக்கலும் இல்லாமல் வேட்பாளர் நியமனம் கிடைக்கப்பெற்றிருக்கிறீர்கள். நாங்களோ எவ்வளவு இழுபறிபடுகின்றோம். நீங்கள் வெற்றி பெற எங்களது நல் வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்.' என்று வாழ்த்தி வழி அனுப்பினார்கள். இந்நேரத்தில் தாருஸ்ஸலாத்தில் கூடி இருந்த எல்லோரும் சின்ன தௌபீக்கின் வெற்றி நிச்சயம் என பேசிக்கொண்டார்கள்.
ஆனால் தேர்தல் களம் சூடுபிடிக்க சூடுபிடிக்க சின்னதௌபீக்கின் வெற்றி வாய்ப்பு கேள்விக் குறியானது. தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்பே மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன தௌபீக் தோற்றுவிடுவார் என்ற கதை பரவலாக பேசப்பட்டது. சின்ன தௌபீக்கின் தோல்வி ஓரளவு நிச்சயமானதும் சின்ன தௌபீக்கம் றவூப் ஹக்கீமும் அதிரடியான சில தேர்தல் வியூகங்களை மேற்கொண்டிருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னனியைச் சேர்ந்த டொக்டர் சாஹிருடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். டொக்டர் சாஹிருக்கு கிடைக்கின்ற விருப்பு வாக்குகளில் சின்ன தௌபீக்குக்கும் சேர்த்து விருப்பு வாக்கை வழங்க வேண்டும். அதற்கு பகரமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினருக்கு ஒரு தேசிய பட்டியல் தருவோம் என ஒப்பந்தத்தை செய்து இருந்தால் சின்ன தௌபீக் நிச்சயம் வென்று இருப்பார். ஏனெனில் சின்ன தௌபீக்குக்கு 26000 விருப்பு வாக்குகளும் டொக்டர் சாஹிருக்கு 16000 விருப்பு வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்தன. சின்ன தௌபீக்கு இன்னும் 5000 வாக்குகள் கிடைத்திருந்தால் பாராளுமன்றம் சென்றிருப்பார். முஸ்லிம் காங்கிரசுக்கு இன்னும் ஒரு ஆசனமும் அதிகரித்திருக்கும். இப்போது சின்ன தௌபீக்கு வழங்கியிருக்கின்ற தேசிய பட்டியலும் மிஞ்சியிருக்கும். அந்த தேசிய பட்டியலை ஒப்பந்தப்படி நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினருக்கு வழங்கி இருக்கலாம்.
இவ்வாறு சரியான அரசியல் வியூகம் இல்லாத காரணத்தினால் சின்ன தௌபீக் அநியாயமாக தோற்க வேண்டிய நிலை உருவானது. இதனால் முஸ்லிம் காங்கிரசுக்குரிய ஒரு பிரதி நிதித்துவம் குறைந்ததுடன் சின்ன தௌபீக்குக்கு ஒரு தேசிய பட்டியலை வழங்கியதால் மற்றவர்களுக்கு தேசிய பட்டியல் கிடைப்பதற்கான சந்தர்ப்பமும் இழக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் ஒரு முறை சின்ன தௌபீக்குக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டிருந்தது. பல முறை அவர் பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டு செல்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவியுள்ளது. நிச்சயமாக வென்று இருக்க வேண்டிய சின்ன தௌபீக் சிறிய தவறினால் தோல்வியடைந்ததால் கட்சியினுடைய தலைவர் அவருக்கு தேசிய பட்டியலை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டிருக்கின்றார்.
எனெனில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு இவரது தோல்வியால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை. இந்தவொரு நியாயத்துக்காக றவூப் ஹக்கீமினால் தேசிய பட்டியல் வழங்கப்பட்டிருந்தாலும் சரியான தேர்தல் வியூகம் இல்லாமல் அநியாயமாக தோற்றுவிட்டுவந்து சின்ன தௌபீக் தேசிய பட்டியல் ஒன்றை அநியாயமாக்கக் கூடாது. அந்த தேசிய பட்டியலானது காத்தான்குடி போன்ற முக்கியமான ஊர்களுக்கு சொந்தமானது. அவர்களும் தேசிய பட்டியலை பெற்று தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். தேசியப்பட்டியலானது சின்ன தௌபீக்குக்கு மாத்திரம் உரித்துடையானது அல்ல. தற்போது தேசிய பட்டியலை பெற்றிருக்கும் சின்ன தௌபீக் ஆனவர் எதிர்காலத்தில் தனது தவறுகளை திருத்தி தனது தோல்விக்கான காரணத்தை சரியாக அடையாளம் கண்டு அதனை சரிக்கட்டி மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்வதற்காக இப்போதே முழு மூச்சுடன் இறங்க வேண்டும். அதனை விட்டு மீண்டும் தோல்வியை தழுவி மீண்டும் காத்தான்குடி போன்ற முக்கியமான ஊர்களுக்கு கிடைக்க வேண்டிய தேசியப் பட்டியலை சின்ன தௌபீக் மீண்டும் சாப்பிடக் கூடாது.
இன்று தலைவர் றவூப் ஹக்கீமின் திருகோணமலை மாவட்டத்திற்கு தேசிய பட்டியலில் ஒன்றை வழங்கும் தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸ்கார்களில் 60மூமானோர் ஆதரிக்கின்றனர். அதற்கு இதுவரை காலமும் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்து வந்த பிரதிநிதித்துவத்தை இம்முறை இழந்ததுதான் காரணம். திருகோணமலைக்கு றவூப் ஹக்கீம் தேசிய பட்டியலை வழங்கியது சரி. ஆனால் சின்ன தௌபீக்குக்கு வழங்கியது சரியா என்றொரு கேள்வியும் இங்கிருக்கின்றது. ஏனெனில் சின்ன தௌபீக் பலமுறை பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக இருந்தவர். முன்பு ஒரு முறை தேசியப் பட்டியல் பிரதிநியாகவும் இருந்தவர். பிரதி அமைச்சராகவும் இருந்தவர். இவ்வளவு அதிகாரத்தில் இருந்தும் இவரால் தேர்தலில் வெல்ல முடியவில்லை என்பதால் திருகோணமலை மாவட்டத்தில் மற்றுமொருவருக்கு இந்த தேசியப்பட்டியலை வழங்கியிருக்க வேண்டும் என்பது காங்கிரஸ்கார்களின் கருத்தாகும். சின்ன தௌபீக் ஒரு பெரிய சதியால் தோற்கடிக்கப்ட்டிருந்தாலும் பரவாயில்லை. எளிதாக வெல்வதற்கு இவருக்கு சந்தர்ப்பம் இருந்தது.
எமது சமூகத்திலே முஸ்லிம் தலைவர்களுக்கு பெரும் பஞ்சம் இருக்கின்றது. றவூப் ஹக்கீம் ஒரு தேசிய தலைவராக மிளிர்வதற்கு சகல அம்சங்களும் பொருந்தியவர். அவருக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்கள் யார்? என்ற கேள்வியெழுகின்றது. தமிழ் தலைவர்களில் சம்பந்தன் ஐயா இருக்கின்றார். சுமந்திரன் இருக்கின்றார். முதலமைச்சர் விக்னேஷ்வரன் இருக்கின்றார். சுரேஷ் பிரேம சந்திரன் இருக்கின்றார். மாவை சேனாதிராசா இருக்கின்றார். சித்தாத்தன் இருக்கின்றார். போராளி சிவாஜிலிங்கம் இருக்கின்றார். இவ்வாறு தமிழ் சமூகத்திற்கு ஒருவர் இல்லாட்டி மற்றொருவர் குரல் கொடுக்க ஆயத்தமாக இருக்கின்றார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸில் ஒருவர் இல்லாவிட்டால் குரல் கொடுப்பதற்கு இன்னொருவர் இல்லை. ஓரளவு றவூப் ஹக்கீம் மாத்திரம் தான் இருக்கின்றார்.
முஸ்லிம் காங்கிரஸ்சின் அடுத்த மட்ட தலைவர்களை வளர்த்தெடுக்க வேண்டிய தலையாய பொறுப்பு றவூப் ஹக்கிமிடமே இருக்கின்றது. ஏனெனில் றவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரசில் இணையும் போது ஒரு தலைவராக இருக்கவில்லை. மறைந்த மாமனிதர் அஷ்ரப்பினால் தனக்கு பின் ஒரு தலைவராவதற்கு றவூப் ஹக்கீம் திட்டமிடப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டார். அஷ்ரப் றவூப் ஹக்கீமுக்கு செயலாளர் பொறுப்பை வழங்கினார். பின்னர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கினார். பின்னர் குழுக்களின் பிரதித் தலைவராக்கினார். பின்னர் பிரதிசபாநாயகராக்கினார். இவ்வாறுதான் றவூப் ஹக்கீம் மறைந்த மாமனிதர் அஷ்ரப்பினால் புடம் போட்டபப்ட்டார். இவ்வாறு அஷ்ரப்பினால் தனக்கு பின் இந்த கட்சிக்கும் சமூகத்திற்கும் ஒரு தலைவர் வேண்டுமென தீர்க்க தரிசனத்தோடு றவூப் ஹக்கீம் வளர்க்கப்பட்டார்.
இதே போல தனக்கு அடுத்தாக இந்த கட்சிக்கும் சமூகத்திற்கும் உரிய தலைவர்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு றவூப் ஹக்கிமிடமே இருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் சம்பந்தனாக றவூப் ஹக்கீமை நாங்கள் கொள்ளலாம். முஸ்லிம் சமூகத்தின் சுமந்திரன் யார்? முஸ்லிம் சமூகத்தின் விக்கேஸ்வரன் யார்? முஸ்லிம் சமூகத்தின் சுரேஷ் பிரம்மசந்திரன் யார்?
தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் குரல் கொடுக்க பல தலைவர்கள் இருக்கின்றார்கள். அது தவிர வெளிநாடுகளிலும் டயஸ்போறா போன்ற பல அமைப்புக்கள் தமிழர்களுக்காக பாடுபட இருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உள்நாட்டிலே குரல் கொடுக்கக்கூடிய தலைவர்கள்; யார்? வெளிநாட்டில் செயற்படக்கூடிய அமைப்புக்கள் எது?. இந்த நாட்டிலே தமிழர்களுக்கு வந்த பிரச்சினை போல் முஸ்லிம்களுக்கும் வந்திருந்தால் இன்று இந்த நாட்டிலே முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இருந்திருக்கமாட்டார்கள்.
எனவே தேசிய பட்டியல் வழங்கும் போது றவூப் ஹக்கீம் இந்த விடயங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும். இது முக்கியமான கால கட்டம். புதிய அரசியல் யாப்பு ஒன்று இந்த நாட்டிலே முதன்முறையாக மக்களால் தயாரிக்கப்படபோகின்றது. இந்த சூழலில் றவூப் ஹக்கீம் சுகவீனம் காரணமாகவோ அல்லது வெளிநாட்டில் இருப்பதன் காரணமாகவோ பாராளுமன்றத்திற்கு சமூகம் கொடுக்க முடியாவிட்டால் அன்று அந்த இடத்தை நிரப்பக்கூடிய முஸ்லிம் காங்கிரச் பாராளுமன்ற பிரதிநிதி ஒருவரும் இல்லை. இவ்வாறான தலைவர்களை றவூப் ஹக்கீம் தேசிய பட்டியலின் ஊடாக வளர்த்தெடுக்க வேண்டும். ஏனெனில் றவூப் ஹக்கீமும் அவ்வாறு தேசிய பட்டியல் ஊடாக வளர்க்கப்பட்டவர்தான். உதாரணமாக எஞ்சினியர் அப்துர்ரஹ்மான், சட்டத்தரணி நிசாம் காரியப்பர் போன்றவர்களை முஸ்லிம் சமூகத்தின் சுமந்திரனாக, முஸ்லிம் சமூகத்தின் விக்னேஷ்வரனாக வளர்த்தெடுக்க முடியும். இவர்கள் தேர்தலின்போது தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்ல முடியாதவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்களுடைய சேவை சமூகத்திற்கு தேவை. தேசியப் பட்டியல் உருவாக்கபட்டதன் நோக்கமும் இவ்வாறானவர்களுடைய சேவையை நாட்டிற்கு பெற்றுக்கொடுப்பதே. றவூப் ஹக்கீம் தேசிய பட்டியல் வழங்கும் போது தனியே கட்சியின் நலனை மாத்திரம் பாராமல் சமூக நலனையும் கருத்திற் கொண்டு தேசிய பட்டியலை வழங்க வேண்டும்.
தேசிய பட்டியல் உருவாக்கப்பட்டதன் நோக்கம் திசை மாறி தலைவருக்கு நெருக்கமானர்களுக்கும் தலைவருக்கு வேண்டியவருக்கும் வழங்கும் சூழல் உருவாகியுள்ளது. இன்று முஸ்லிம் காங்கிரசிலே யார் யார் தனக்கு தேசிய பட்டியல் வேண்டுமென கேட்பது என்பது ஒரு விவஸ்த்தை இல்லாமல் போய்விட்டது. உதாரணமாக களுத்துறையை சேர்ந்த அஸ்லம் என்பருக்கு றவூப் ஹக்கீம் ஒரு தேசியபட்டியலை சென்ற முறை வழங்கியிருந்தார். இரண்டு வருடம் மூன்று வருடம் இல்லாமல் முழுமையாக ஆறு வருடமும் வழங்கியிருந்தார். இம்முறை தேர்தலிலே அஸ்லம் தோற்றுவிட்டார். தோற்ற கையோடு அடுத்த நாளே 'இம்முறையும் மீண்டும் தனக்கு தேசிய பட்டியல் வழங்க வேண்டும்' என்று றவூப் ஹக்கீமின் வீட்டில் சம்மானங்கொட்டி உட்காந்திருந்தார். இவர் ஒரு வெட்கம் உள்ளவர் என்றால் என்ன செய்திருப்பார் 'றவூப் ஹக்கீம் என்னை நம்பி முழுமையாக 6 வருடம் தேசிய பட்டியலை தந்திருந்தாரே. நான் நன்றாக வேலை செய்திருந்தால் பாராளுமன்ற தேர்தலிலே வெற்றிபெற்றிருப்பேனே. அநியாயமாக 6 வருடமும் தேசியப் பட்டியலை தின்று விட்டேனே. என்னை நம்பி தந்த றவூப் ஹக்கீமின் முகத்தில் எப்படி விழிப்பேன்' என்று பச்சாதாபப்பட்டு ஒரு வருடத்திற்கு றவூப் ஹக்கீமின் முகத்தில் விழிக்காமல் வெட்கபட்டு அஸ்லம் முக்காடு போட்டு கொண்டு திரிந்திருப்பார். ஆனால் அவ்வாறு இல்லாமல் மீண்டும் தேசியப் பட்டியலை கோரும் 'தில்' எவ்வாறு அஸ்லமுக்கு வந்தது?. இந்த 'தில்' அஸ்லமுக்கு வர காரணம் தேசியப் பட்டியலின் தந்தை பசீர் சேகுதாவூத் இந்த கட்சியில் இருப்பது தான் காரணம். தோற்று, தோற்றுப்போய் மீண்டும் மீண்டும் தேசிய பட்டியலை பெறலாம் என்ற வழிகாட்டி பசீர் சேகுதாவூத் இருக்கும் வரை அஸ்லம் போன்றவர்கள் உருவாகத்தான் செய்வார்கள். நல்ல விடயங்களில் மறைந்த மாமனிதர் அஷ்ரபின் முன்மாதிரியை பின்பற்றக் கூடியவர்கள் இக்கட்சியிலே பலர் இருக்கிறார்கள். ஆனால் தேசியப் பட்டியல் விடயத்தில் பசீர் சேகுதாவூதைப் பின்பற்றக் கூடியவர்கள் இப்போது உருவாகி வருகிறார்கள். முஸ்லிம் காங்கிரசுக்குள் பல பசீர் சேகுதாவூத்கள் உருவாகுவது இந்த கட்சிக்கு நல்லதா ?. ஒரு பசீர் சேகுதாவூத் இந்த கட்சிக்கு பேதாதா?.
றவூப் ஹக்கீமிடம் இருக்கும் சில நல்ல பண்புகளை இங்கு நாம் சுட்டிக் காட்டியே ஆக வேண்டும். றவூப் ஹக்கீம் எப்போதும் இந்த தேசியப் பட்டியலை பணத்திற்கு விற்பதில்லை. அதேபோல சீடிக்களின்(ஊனு) அச்சுறுத்தல்களுக்கும் அடி பணிந்தும் தேசிப்பட்டியலை வழங்குவதில்லை. தினம் தினம் சீடிக்களுக்கு பயந்து சாவது கோழைத்தனம். என்றோ ஒரு நாள் அந்த சீடியை எதிர்கொள்வதே வீரம் என்பதை தற்போது றவூப் ஹக்கீம் நன்றாக புரிந்துள்ளார்.
மேலும் தலைமைத்துவத்திற்கு மிகப் பொருத்தமானவர் றவூப் ஹக்கீம்தான். முஸ்லிம் காங்கிரசில் உள்ள மும்மணிகளில் இருவருமான தொடர்ந்து தேசியப் பட்டியலை அலங்கரிக்கும் அவ்விருவருக்கும் தேசியப்பட்டியல் இம்முறை வழங்காவிட்டால் அவர்கள் இருவரும் பேரியல் அஷ்ரபுடனும் சேகு இஸ்ஸதீனுடனும் அதாவுள்ளாவுடனும் ஹிஸ்புல்லாவுடனும் சேர்ந்து புதிய கட்சி உருவாக்க இருப்பதாக செய்தி அடிபடுகின்றது. இவர்கள் என்ன கட்சி தொடங்கினாலும் இவர்களால் எல்லாம் சமூகத்திற்கு தலைவர்களாக முடியாது. ஏனெனில் இவர்களால் தலைவர்களாக ஆக முடியுமாக இருந்தால் இதுவரைக்கும் தலைவர்களாகி இருப்பார்கள்.
எனவே மறைந்த மாமனிதர் அஷ்ரப் எவ்வாறு றவூப் ஹக்கீமுக்கு தேசியப்பட்டியல் உட்பட பல பதவிகளை வழங்கி தனக்கு அடுத்த தலைவராக வளர்த்தாரோ அதே போல றவூப் ஹக்கீமும் தேசியப்பட்டியலை பொருத்தமானவர்களுக்கு வழங்கி அதன் மூலம் சமூகத்தையும் பாராளுமன்றத்தையும் அலங்கரிக்கின்ற அடுத்த தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்.
(மர்சூக் அஹமட் லெப்பை)
Mob
: 0777801382
