Featured Home (TOP)

Recent Comments

Thursday, January 28, 2016

avathani Media Network

எதிர்காலத்தில் பட்டதாரிகள் உருவாகுவது கேள்விக்குறியாக மாறும்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்.

(ஜுனைட்.எம்.பஹ்த்)
பட்டதாரிகளுக்கு 10,000.00 ரூபாய் ஊதியம் கொடுத்து மாகானத்திற்கு வெளியில்
அனுப்பினால் எதிர்காலத்தில் பட்டதாரிகள் உருவாகுவது கேள்விக்குறியாக மாறும் என
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.....
2016ம் ஆண்டிற்கான முதலாவது கிழக்குமாகாண சபை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை
(26.01.2016) அன்று திருகோணமலை பேரவைச் செயலகத்தில் சபை தவிசாளர் கௌரவ சந்திரதாச கலபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் குறைந்த ஊதியத்துடன் வெளி மாகாணங்களில்
நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விஷேட பிரேரணை ஒன்று கிழக்கு மாகாணசபை
உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

இவ் அமவர்வில் உரையாற்றிய அவர் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த பட்டதாரிகளுக்கான
பயிற்சி நியமனத்தைப் பெற்றிருக்கின்ற அநேகமான பட்டதாரிகள் ரூபா 10,000.00
ஊதியத்துடன் மாகாணத்துக்கு வெளியே நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது
இப்பட்டதாரிகளை பாரிய அசௌகரியங்களுக்கும் கஷ்டத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் என்ற வகையில் அவர்களை உடனடியாக
மாகாணத்துக்குள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்சபையில்
முன்மொழிந்தார்.

இலங்கையில் பல தசாப்தங்களாக எமது மாணவச் செல்வங்கள் இலவசமாக கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழகங்கள் வரையும்
இலவசக் கல்வியினை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் பன்னிரெண்டு
ஆண்டுகள் பாடசாலைகளிலும் அதனைத் தொடர்ந்து 3,4,5 வருடங்கள் அவர்களுடைய
பட்டப்படிப்புகளை பல்கலைக்கழகங்களிலும் முடித்துவிட்டு, மேலும் இரண்டு மூன்று வருடங்கள் தாமதத்தின் பின்பு அவர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுகின்றபோது
பத்தாயிரம் ரூபாவினைக் கொடுத்து மாகாணத்துக்கு வெளியில் அதுவும்
தூரப்பிரதேசங்களுக்கு அவர்களை அனுப்புகின்ற இந்தச்செயலானது எதிர்வரும்
காலங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்வது ஒரு கேள்விக்குறியானதொரு விடயமாக மாறும் என்பது என்னால் உறுதியாகச்சொல்ல முடியும். ஏனென்றால் தற்போது வளர்ந்து வருகின்ற இளம் சமூகம் வேகமாக பொருளாதாரத்திலும் வாழ்க்கையிலும் முன்னுக்கு
வரவேண்டுமென்று நினைத்துக்கொண்டு பல கற்பனைகளுக்கு மத்தியில் தங்களுடைய கல்விகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண் பிள்ளைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் தாங்கள் பொருளாதாரத்தினை ஈட்டி வாழ்க்கையினை வளப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று
விரும்புகின்ற இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான தூர இடங்களுக்குப் பட்டதாரிகளை அதுவும் பத்தாயிரம் ரூபா ஊதியத்தினைக் கொடுத்து அவர்களை பயிலுனர்களாக ஒரு
வருடத்துக்கு அமர்த்துவதென்பது நிச்சயமாக அவர்கள் மீது ஒரு பாரிய
சுமையைச்சுமத்துகின்ற ஒரு விடயமாக நான் பார்க்கின்றேன்.

அந்த வகையில் கிழக்கு
மாகாணத்திலிருந்து ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கொழும்பு, கண்டி
என்று பல்வேறு இடங்களில் மாகாணத்திற்கு வெளியில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
வளர்ந்து கொண்டிருக்கும் இந்த கல்விச் சமூகத்தில் அதிகமானவர்கள் பெண்களாகவே
இருக்கின்றனர், பல்கலைக் கழகங்களில் 60 வீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உயர்
கல்வி கற்கின்றனர்.
பெண்களை தூர இடங்களுக்கு நியமித்து அனுப்புகின்ற பொழுது அவர்களால்
தொடர்ச்சியாக வேலைசெய்ய முடியாது போகின்றது.

எங்களுக்கு பல அனுபவங்கள்
இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு
வேலைவாய்ப்பினைப் பெற்றுவருகின்றவர்கள் பெண்களாக இருந்தால் அவர்கள் 2 அல்லது 3 வருடங்களில் திருமணம்செய்து ஓரிரு வருடங்களில் கர்ப்பிணியாகின்றார்கள்
அவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு போக்குவரத்து
செய்யமுடியாது போன்ற காரணங்களை முன்வைத்து தற்காலிக இடமாற்றம் செய்து
அவர்களின் பிரதேசங்களில் கடமை புரிகின்றனர், இலங்கை சட்டத்தின் பிரகாரம்,
அவர்களது மகப்பேற்றுக்கு பின்னர் 81 வேலை நாட்கள் அவர்களுக்கு விடுமுறை
கிடைக்கின்றது. சிசுவொன்றினை பெற்றெடுத்தபின்பு மீண்டும் ஏறத்தாள 9 மாதங்கள்
விடுமுறை முடித்து மீண்டும் கடமைக்கு வருவதற்கு அவர்களுடைய சிசு தடையாக
அமைகின்றது.

இவ்வாறு பட்டதாரிகளாக உருவாகின்ற பெண்களுடன் ஒப்பிடும்பொழுது அவர்களுக்கு
சமமாக ஆண்களும் உருவாக வேண்டும் என்ற தேவைப்பாடு இருக்கின்றது. இந்த
தேவைப்பாட்டை தடுத்து நிறுத்துவதற்குரிய முக்கிய காரணி ஒரு பிள்ளை சாதாரண தரம் கற்கின்றபொழுது தனியார் கல்வி நிறுவனங்கள் கருத்தரங்கு நடாத்துகின்ற போர்வையில் சாதாரண தரம் கற்றபின்பு 2, 21/2 வருடங்கள் உயர்கல்வி கற்கவேண்டும் அதன்பின் கிட்டத்தட்ட 1வருடம் காத்திருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகி 3 அல்லது 5 வருடங்கள் பல்கலைகழகங்களில் கழிக்கவேண்டும் ஆகமொத்தத்தில் 6,7
வருடங்கள் செலவு செய்து பட்டப்படிப்பின் பின் ஒரு தொழிலை பெறுவதாக இருந்தால் மீண்டும் 2,3 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர்களை தவறாக வழிகாட்டுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இவ்வாறான செயற்பாடுகள் சாதகமாக
அமைவதுடன் மாணவர்கள் கல்வியை இடைநடுவில் கைவிட முற்படுவார்கள். அதிகமான
பிள்ளைகள் சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்து உயர்தர
கல்வியினை தொடராமல் விட்டுவிட்டு தனியார் கல்வி நிறுவனங்களில் 06 மாத குறுகிய
காலப்பயிற்சிநெறி ஏதேனுமொன்றை முடித்துக்கொண்டு வளைகுடா நாடுகளுக்கு
வேலைவாய்ப்பு பெற்று செல்கின்றனர். இதற்கு காரணம் என்ன? அவர்கள் ஒப்பிட்டு
பார்க்கின்றனர் 8,9 வருடங்கள் முடிந்த பிற்பாடு ரூபா 10,000.00; சம்பளத்திற்கு
வேலை செய்வதா அல்லது 06 மாத குறுகிய கால பயிற்சிநெறி ஏதேனுமொன்றை
முடித்துக்கொண்டு ரூபா 100,000.00 சம்பளம் பெறக்கூடிய அந்த வேலைவாய்ப்பினை
பெறுவதா என்ற வினாவிற்கு விடைகானும் முகமாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஆண்கள்
பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் உழைத்து வாழ வேண்டிய தேவைப்பாடும்
கட்டாயமும் இம் மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு
குடும்பத்தில் 2,3 பெண்பிள்ளைகள் இருப்பின் அக்குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளை
மீது பாரிய சுமைகள் சுமத்தப்படுகின்றன ஏனெனில் தனது பெண்சகோதரிகளுக்குரிய
கடமைகளை மேற்கொள்ளவேண்டும் வீடுகட்ட வேண்டும் என்ற கடமைகள் வரும்போது அவன்
தனது கல்வியினை இடைநடுவே நிறுத்திவிட்டு தனது குடும்பத்திற்காக தனது கல்வியினை தியாகம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று கஷ்டப்படும் அந்த நிலைமையும், கல்வியிலே ஆண்பிள்ளைகள் இல்லாமல் போகின்றதோர் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் கிழக்குமாகாணத்தில் மட்டுமல்ல அகில இலங்கை
முழுவதும் உள்ள ஆண்பிள்ளைகள் தமது கல்வியினை இடைநடுவே நிறுத்தி விட்டு
வெளிநாடுகளிலும், இங்குள்ள சிறிய சிறிய கூலிவேலைகள் அல்லது அவர்களுடைய கல்வி
தகைமைக்குப்பதிலாக அவர்கள் பொருளாதாரத்தினை ஈட்டுகின்ற வேறுசெயற்பாடுகளில்
ஈடுபடுவதனூடாக எதிர்காலத்தில் கல்வியை இழந்த சமூகமாக இலங்கை மாறக்கூடிய
துர்ப்பாக்கிய நிலைமை இருக்கின்றது, ஆகவே இந்த செயற்பாடானது நிச்சயமாக
வடக்கிலே வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரி பயிலுனர் வேலைவாய்ப்புக்களும்
வடமாகாணத்திற்குள்ளேயே வழங்கப்பட்டிருக்கின்றது ஏன் கிழக்கு மாகாணத்திற்கு
மாத்திரம் இவ்வாறானதோர் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தினை
உங்களிடம் கேட்கின்றேன். ஆகவே உடனடியாக முதலமைச்சரும், இங்குள்ள அமைச்சரவை
வாரியமும் இதற்குரிய தீர்வொன்றை கண்டறிந்து, அவர்களின் கஷ்ட நிலைமையை
கருத்திற்கொண்டு அவர்கள் பெப்ரவரி மாதம் 13ம் திகதிக்குமுன் பொறுப்புக்களை
பாரமெடுக்குமுன் அவர்களை உடனடியாக மாகாணத்திற்குள் உள்வாங்கி அந்தந்த
மாவட்டங்களில் நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கிழக்கு
மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது பிரேரணையை
முன்வைத்து உரையாற்றினார்.





Read More
avathani Media Network

தேசியப்பட்டியல்

(மர்சூக் அஹமட் லெப்பை)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய பட்டியலில் இரண்டில் ஒன்றுக்கு ஒரு வாறு நீண்ட இழுபறியின் பின் ஒரு முடிவு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. அவ்வெற்றிடத்திற்கு முன்னாள் பிரதி அமைச்சர் சின்ன தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழந்த பிரதி நிதித்துவத்தை இந்த தேசிய பட்டியல் பிரதி நிதி மூலம் மீண்டும் பெற்றுக் கொண்டுள்ளது. 
2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களை நியமிப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியது. அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்து கேட்பதென்று கட்சி முடிவு எடுத்திருந்தது.

ஐக்கிய தேசிய கட்சியோடு சேர்ந்து கேட்பதால் ஐந்து பேருக்கு மாத்திரம் வேட்பாளர் தரலாம் என ஐக்கிய தேசிய கட்சி கூறி இருந்தது. இதனால் பிரச்சினை பூதாகரமாக கிளம்பியது. அம்பாறையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் ஊர்களுக்கும் ஒவ்வொரு வேட்பாளர்கள் கொடுப்பது என்றாலும் 10க்கும் அதிகமான வேட்பாளர் வெற்றிடங்கள் தேவை. கிடைத்திருப்பது ஐந்து பேருக்கு மாத்திரம். எந்த ஊருக்கு ஐந்து பேரையும் வழங்குவது என்பது சிக்கல். பின்னர் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார் நான்கு பேருக்கு மாத்திரம் தான் வேட்பாளர் தருவேன் என்று. ஐந்து நாலாகியதால் இன்னும் பிரச்சினை அதிகரித்தது. ரவூப் ஹக்கீம் மீண்டும் அதிரடியாக அறிவித்தார் மூன்று பேருக்கு மாத்திரம் தான் வேட்பாளர் தர முடியும் என்று. இதனால் இன்னும் பிரச்சனை கூடியது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற பைசல் காசிமுக்கும், ஹரீசுக்கும் வேட்பாளருக்குரிய சந்தர்ப்பம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மிகுதியாக உள்ள ஒருவரை சம்மாந்துறையில் இருந்து தெரிவு செய்வதென முடிவெடுக்கப்பட்டது. 

சம்மாந்துறையில் யாருக்கு வழங்குவது என்பதில் சிக்கல் தோன்றியது. முஸ்தபா லோயருக்கா?,  மாகாண அமைச்சர் மன்சூருக்கா?, சவூதி தூதுவராலய மாஹிருக்கா? வழங்குவது என்பதில் சிக்கல். இறுதியில் மன்சூருக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேட்பாளர்கள் தெரிவு செய்வதில் சிக்கல்கள் உருவாகின. அலிசாஹிர் மௌலானா பசீர் சேகுதாவூதுக்கு வேட்பாளர் நியமனம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததினால் சிக்கல்கள் தோன்றின. காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினரை இணைத்துக் கொள்வதில் சிக்கல்கள் தோன்றின. பின்னர் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. 

ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் வேட்பாளர் தெரிவு செய்வதில் எந்த சிக்கல்களும் தோன்றவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சின்ன தௌபீக் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இதனால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட கட்சி பிரமுகர்கள் சின்ன தௌபீக்கை பார்த்து தாருல்ஸலாத்தில் வைத்து 'நீங்கள் மாத்திரம் தான் எந்த சிக்கலும் இல்லாமல் வேட்பாளர் நியமனம் கிடைக்கப்பெற்றிருக்கிறீர்கள். நாங்களோ எவ்வளவு இழுபறிபடுகின்றோம். நீங்கள் வெற்றி பெற எங்களது நல் வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்.' என்று வாழ்த்தி வழி அனுப்பினார்கள். இந்நேரத்தில் தாருஸ்ஸலாத்தில் கூடி இருந்த எல்லோரும் சின்ன தௌபீக்கின் வெற்றி நிச்சயம் என பேசிக்கொண்டார்கள். 

ஆனால் தேர்தல் களம் சூடுபிடிக்க சூடுபிடிக்க சின்னதௌபீக்கின் வெற்றி வாய்ப்பு கேள்விக் குறியானது. தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்பே மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன தௌபீக் தோற்றுவிடுவார் என்ற கதை பரவலாக பேசப்பட்டது. சின்ன தௌபீக்கின் தோல்வி ஓரளவு நிச்சயமானதும் சின்ன தௌபீக்கம் றவூப் ஹக்கீமும் அதிரடியான சில தேர்தல் வியூகங்களை மேற்கொண்டிருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னனியைச் சேர்ந்த டொக்டர் சாஹிருடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். டொக்டர் சாஹிருக்கு கிடைக்கின்ற விருப்பு வாக்குகளில் சின்ன தௌபீக்குக்கும் சேர்த்து விருப்பு வாக்கை வழங்க வேண்டும். அதற்கு பகரமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினருக்கு ஒரு தேசிய பட்டியல் தருவோம் என ஒப்பந்தத்தை செய்து இருந்தால் சின்ன தௌபீக் நிச்சயம் வென்று இருப்பார். ஏனெனில் சின்ன தௌபீக்குக்கு 26000 விருப்பு வாக்குகளும் டொக்டர் சாஹிருக்கு 16000 விருப்பு வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்தன. சின்ன தௌபீக்கு இன்னும் 5000 வாக்குகள் கிடைத்திருந்தால் பாராளுமன்றம் சென்றிருப்பார். முஸ்லிம் காங்கிரசுக்கு இன்னும் ஒரு ஆசனமும் அதிகரித்திருக்கும். இப்போது சின்ன தௌபீக்கு வழங்கியிருக்கின்ற தேசிய பட்டியலும் மிஞ்சியிருக்கும். அந்த தேசிய பட்டியலை ஒப்பந்தப்படி நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினருக்கு வழங்கி இருக்கலாம். 

இவ்வாறு சரியான அரசியல் வியூகம் இல்லாத காரணத்தினால்  சின்ன தௌபீக் அநியாயமாக தோற்க வேண்டிய நிலை உருவானது. இதனால் முஸ்லிம் காங்கிரசுக்குரிய ஒரு பிரதி நிதித்துவம் குறைந்ததுடன் சின்ன தௌபீக்குக்கு ஒரு தேசிய பட்டியலை வழங்கியதால் மற்றவர்களுக்கு தேசிய பட்டியல் கிடைப்பதற்கான சந்தர்ப்பமும் இழக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் ஒரு முறை சின்ன தௌபீக்குக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டிருந்தது. பல முறை அவர் பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டு செல்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவியுள்ளது. நிச்சயமாக வென்று இருக்க வேண்டிய சின்ன தௌபீக் சிறிய தவறினால் தோல்வியடைந்ததால் கட்சியினுடைய தலைவர் அவருக்கு தேசிய பட்டியலை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டிருக்கின்றார். 

எனெனில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு இவரது தோல்வியால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை. இந்தவொரு நியாயத்துக்காக றவூப் ஹக்கீமினால் தேசிய பட்டியல் வழங்கப்பட்டிருந்தாலும் சரியான தேர்தல் வியூகம் இல்லாமல் அநியாயமாக தோற்றுவிட்டுவந்து சின்ன தௌபீக் தேசிய பட்டியல் ஒன்றை அநியாயமாக்கக் கூடாது. அந்த தேசிய பட்டியலானது காத்தான்குடி போன்ற முக்கியமான ஊர்களுக்கு சொந்தமானது. அவர்களும் தேசிய பட்டியலை பெற்று தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். தேசியப்பட்டியலானது சின்ன தௌபீக்குக்கு மாத்திரம் உரித்துடையானது அல்ல. தற்போது தேசிய பட்டியலை பெற்றிருக்கும் சின்ன தௌபீக் ஆனவர் எதிர்காலத்தில் தனது தவறுகளை திருத்தி தனது தோல்விக்கான காரணத்தை சரியாக அடையாளம் கண்டு அதனை சரிக்கட்டி மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்வதற்காக இப்போதே முழு மூச்சுடன் இறங்க வேண்டும். அதனை விட்டு மீண்டும் தோல்வியை தழுவி மீண்டும் காத்தான்குடி போன்ற முக்கியமான ஊர்களுக்கு கிடைக்க வேண்டிய தேசியப் பட்டியலை சின்ன தௌபீக் மீண்டும் சாப்பிடக் கூடாது. 

இன்று தலைவர் றவூப் ஹக்கீமின் திருகோணமலை மாவட்டத்திற்கு தேசிய பட்டியலில் ஒன்றை வழங்கும் தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸ்கார்களில் 60மூமானோர் ஆதரிக்கின்றனர். அதற்கு இதுவரை காலமும் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்து வந்த பிரதிநிதித்துவத்தை இம்முறை இழந்ததுதான் காரணம். திருகோணமலைக்கு றவூப் ஹக்கீம் தேசிய பட்டியலை வழங்கியது சரி. ஆனால் சின்ன தௌபீக்குக்கு வழங்கியது சரியா என்றொரு கேள்வியும் இங்கிருக்கின்றது. ஏனெனில் சின்ன தௌபீக் பலமுறை பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக இருந்தவர். முன்பு ஒரு முறை தேசியப் பட்டியல் பிரதிநியாகவும் இருந்தவர். பிரதி அமைச்சராகவும் இருந்தவர். இவ்வளவு அதிகாரத்தில் இருந்தும் இவரால் தேர்தலில் வெல்ல முடியவில்லை என்பதால் திருகோணமலை மாவட்டத்தில் மற்றுமொருவருக்கு இந்த தேசியப்பட்டியலை வழங்கியிருக்க வேண்டும் என்பது காங்கிரஸ்கார்களின் கருத்தாகும். சின்ன தௌபீக் ஒரு பெரிய சதியால் தோற்கடிக்கப்ட்டிருந்தாலும் பரவாயில்லை. எளிதாக வெல்வதற்கு இவருக்கு சந்தர்ப்பம் இருந்தது. 

எமது சமூகத்திலே முஸ்லிம் தலைவர்களுக்கு பெரும் பஞ்சம் இருக்கின்றது. றவூப் ஹக்கீம் ஒரு தேசிய தலைவராக மிளிர்வதற்கு சகல அம்சங்களும் பொருந்தியவர். அவருக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்கள் யார்? என்ற கேள்வியெழுகின்றது. தமிழ் தலைவர்களில் சம்பந்தன் ஐயா இருக்கின்றார். சுமந்திரன் இருக்கின்றார். முதலமைச்சர் விக்னேஷ்வரன் இருக்கின்றார். சுரேஷ் பிரேம சந்திரன் இருக்கின்றார். மாவை சேனாதிராசா இருக்கின்றார். சித்தாத்தன் இருக்கின்றார். போராளி சிவாஜிலிங்கம் இருக்கின்றார். இவ்வாறு தமிழ் சமூகத்திற்கு ஒருவர் இல்லாட்டி மற்றொருவர் குரல் கொடுக்க ஆயத்தமாக இருக்கின்றார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸில் ஒருவர் இல்லாவிட்டால் குரல் கொடுப்பதற்கு இன்னொருவர் இல்லை. ஓரளவு றவூப் ஹக்கீம் மாத்திரம் தான் இருக்கின்றார். 

முஸ்லிம் காங்கிரஸ்சின் அடுத்த மட்ட தலைவர்களை வளர்த்தெடுக்க வேண்டிய தலையாய பொறுப்பு றவூப் ஹக்கிமிடமே இருக்கின்றது. ஏனெனில் றவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரசில்  இணையும் போது ஒரு தலைவராக இருக்கவில்லை. மறைந்த மாமனிதர் அஷ்ரப்பினால் தனக்கு பின் ஒரு தலைவராவதற்கு றவூப் ஹக்கீம் திட்டமிடப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டார். அஷ்ரப் றவூப் ஹக்கீமுக்கு செயலாளர் பொறுப்பை வழங்கினார். பின்னர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கினார். பின்னர் குழுக்களின் பிரதித் தலைவராக்கினார். பின்னர் பிரதிசபாநாயகராக்கினார். இவ்வாறுதான் றவூப் ஹக்கீம் மறைந்த மாமனிதர் அஷ்ரப்பினால் புடம் போட்டபப்ட்டார். இவ்வாறு அஷ்ரப்பினால் தனக்கு பின் இந்த கட்சிக்கும் சமூகத்திற்கும் ஒரு தலைவர் வேண்டுமென தீர்க்க தரிசனத்தோடு றவூப் ஹக்கீம் வளர்க்கப்பட்டார். 

இதே போல தனக்கு அடுத்தாக இந்த கட்சிக்கும் சமூகத்திற்கும் உரிய தலைவர்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு றவூப் ஹக்கிமிடமே இருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் சம்பந்தனாக றவூப் ஹக்கீமை நாங்கள் கொள்ளலாம். முஸ்லிம் சமூகத்தின் சுமந்திரன் யார்? முஸ்லிம் சமூகத்தின் விக்கேஸ்வரன் யார்? முஸ்லிம் சமூகத்தின் சுரேஷ் பிரம்மசந்திரன் யார்? 
தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் குரல் கொடுக்க பல தலைவர்கள் இருக்கின்றார்கள். அது தவிர வெளிநாடுகளிலும் டயஸ்போறா போன்ற பல அமைப்புக்கள் தமிழர்களுக்காக பாடுபட இருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உள்நாட்டிலே குரல் கொடுக்கக்கூடிய தலைவர்கள்; யார்? வெளிநாட்டில் செயற்படக்கூடிய அமைப்புக்கள் எது?. இந்த நாட்டிலே தமிழர்களுக்கு வந்த பிரச்சினை போல் முஸ்லிம்களுக்கும் வந்திருந்தால் இன்று இந்த நாட்டிலே முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இருந்திருக்கமாட்டார்கள்.

எனவே தேசிய பட்டியல் வழங்கும் போது றவூப் ஹக்கீம் இந்த விடயங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும். இது முக்கியமான கால கட்டம். புதிய அரசியல் யாப்பு ஒன்று இந்த நாட்டிலே முதன்முறையாக மக்களால் தயாரிக்கப்படபோகின்றது. இந்த சூழலில் றவூப் ஹக்கீம் சுகவீனம் காரணமாகவோ அல்லது வெளிநாட்டில் இருப்பதன் காரணமாகவோ பாராளுமன்றத்திற்கு சமூகம் கொடுக்க முடியாவிட்டால் அன்று அந்த இடத்தை நிரப்பக்கூடிய முஸ்லிம் காங்கிரச் பாராளுமன்ற பிரதிநிதி ஒருவரும் இல்லை. இவ்வாறான தலைவர்களை றவூப் ஹக்கீம் தேசிய பட்டியலின் ஊடாக வளர்த்தெடுக்க வேண்டும். ஏனெனில் றவூப் ஹக்கீமும் அவ்வாறு தேசிய பட்டியல் ஊடாக வளர்க்கப்பட்டவர்தான். உதாரணமாக எஞ்சினியர் அப்துர்ரஹ்மான், சட்டத்தரணி நிசாம் காரியப்பர் போன்றவர்களை முஸ்லிம் சமூகத்தின் சுமந்திரனாக, முஸ்லிம் சமூகத்தின் விக்னேஷ்வரனாக வளர்த்தெடுக்க முடியும். இவர்கள் தேர்தலின்போது தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்ல முடியாதவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்களுடைய சேவை சமூகத்திற்கு தேவை. தேசியப் பட்டியல் உருவாக்கபட்டதன் நோக்கமும் இவ்வாறானவர்களுடைய சேவையை நாட்டிற்கு பெற்றுக்கொடுப்பதே. றவூப் ஹக்கீம் தேசிய பட்டியல் வழங்கும் போது தனியே கட்சியின் நலனை மாத்திரம் பாராமல் சமூக நலனையும் கருத்திற் கொண்டு தேசிய பட்டியலை வழங்க வேண்டும்.

தேசிய பட்டியல் உருவாக்கப்பட்டதன் நோக்கம் திசை மாறி தலைவருக்கு நெருக்கமானர்களுக்கும் தலைவருக்கு வேண்டியவருக்கும் வழங்கும் சூழல் உருவாகியுள்ளது.  இன்று முஸ்லிம் காங்கிரசிலே யார் யார் தனக்கு தேசிய பட்டியல் வேண்டுமென கேட்பது என்பது ஒரு விவஸ்த்தை இல்லாமல் போய்விட்டது. உதாரணமாக களுத்துறையை சேர்ந்த அஸ்லம் என்பருக்கு றவூப் ஹக்கீம் ஒரு தேசியபட்டியலை சென்ற முறை வழங்கியிருந்தார். இரண்டு வருடம் மூன்று வருடம் இல்லாமல் முழுமையாக ஆறு வருடமும் வழங்கியிருந்தார். இம்முறை தேர்தலிலே அஸ்லம் தோற்றுவிட்டார். தோற்ற கையோடு அடுத்த நாளே 'இம்முறையும் மீண்டும் தனக்கு தேசிய பட்டியல் வழங்க வேண்டும்' என்று றவூப் ஹக்கீமின் வீட்டில் சம்மானங்கொட்டி உட்காந்திருந்தார். இவர் ஒரு வெட்கம் உள்ளவர் என்றால் என்ன செய்திருப்பார் 'றவூப் ஹக்கீம் என்னை நம்பி முழுமையாக 6 வருடம் தேசிய பட்டியலை தந்திருந்தாரே. நான் நன்றாக வேலை செய்திருந்தால் பாராளுமன்ற தேர்தலிலே வெற்றிபெற்றிருப்பேனே. அநியாயமாக 6 வருடமும் தேசியப் பட்டியலை தின்று விட்டேனே. என்னை நம்பி தந்த றவூப் ஹக்கீமின் முகத்தில் எப்படி விழிப்பேன்' என்று பச்சாதாபப்பட்டு ஒரு வருடத்திற்கு றவூப் ஹக்கீமின் முகத்தில் விழிக்காமல் வெட்கபட்டு அஸ்லம் முக்காடு போட்டு கொண்டு திரிந்திருப்பார். ஆனால் அவ்வாறு இல்லாமல் மீண்டும் தேசியப் பட்டியலை கோரும் 'தில்' எவ்வாறு அஸ்லமுக்கு வந்தது?. இந்த 'தில்' அஸ்லமுக்கு வர காரணம் தேசியப் பட்டியலின் தந்தை பசீர் சேகுதாவூத் இந்த கட்சியில் இருப்பது தான் காரணம். தோற்று, தோற்றுப்போய் மீண்டும் மீண்டும் தேசிய பட்டியலை பெறலாம் என்ற வழிகாட்டி பசீர் சேகுதாவூத் இருக்கும் வரை அஸ்லம் போன்றவர்கள் உருவாகத்தான் செய்வார்கள். நல்ல விடயங்களில் மறைந்த மாமனிதர் அஷ்ரபின் முன்மாதிரியை பின்பற்றக்  கூடியவர்கள் இக்கட்சியிலே பலர் இருக்கிறார்கள். ஆனால் தேசியப் பட்டியல் விடயத்தில் பசீர் சேகுதாவூதைப் பின்பற்றக் கூடியவர்கள் இப்போது உருவாகி வருகிறார்கள். முஸ்லிம் காங்கிரசுக்குள் பல பசீர் சேகுதாவூத்கள் உருவாகுவது இந்த கட்சிக்கு நல்லதா ?. ஒரு பசீர் சேகுதாவூத் இந்த கட்சிக்கு பேதாதா?.

றவூப் ஹக்கீமிடம் இருக்கும் சில நல்ல பண்புகளை இங்கு நாம் சுட்டிக் காட்டியே ஆக வேண்டும். றவூப் ஹக்கீம் எப்போதும்  இந்த தேசியப் பட்டியலை பணத்திற்கு விற்பதில்லை. அதேபோல சீடிக்களின்(ஊனு) அச்சுறுத்தல்களுக்கும் அடி பணிந்தும் தேசிப்பட்டியலை வழங்குவதில்லை. தினம் தினம் சீடிக்களுக்கு பயந்து சாவது கோழைத்தனம். என்றோ ஒரு நாள் அந்த சீடியை எதிர்கொள்வதே வீரம் என்பதை தற்போது றவூப் ஹக்கீம் நன்றாக புரிந்துள்ளார்.

மேலும் தலைமைத்துவத்திற்கு மிகப் பொருத்தமானவர் றவூப் ஹக்கீம்தான். முஸ்லிம் காங்கிரசில் உள்ள மும்மணிகளில் இருவருமான தொடர்ந்து தேசியப் பட்டியலை அலங்கரிக்கும் அவ்விருவருக்கும் தேசியப்பட்டியல் இம்முறை வழங்காவிட்டால் அவர்கள் இருவரும் பேரியல் அஷ்ரபுடனும் சேகு இஸ்ஸதீனுடனும் அதாவுள்ளாவுடனும் ஹிஸ்புல்லாவுடனும் சேர்ந்து புதிய கட்சி உருவாக்க இருப்பதாக செய்தி அடிபடுகின்றது. இவர்கள் என்ன கட்சி தொடங்கினாலும் இவர்களால் எல்லாம் சமூகத்திற்கு தலைவர்களாக முடியாது. ஏனெனில் இவர்களால் தலைவர்களாக ஆக முடியுமாக இருந்தால் இதுவரைக்கும் தலைவர்களாகி இருப்பார்கள். 

எனவே மறைந்த மாமனிதர் அஷ்ரப் எவ்வாறு றவூப் ஹக்கீமுக்கு தேசியப்பட்டியல் உட்பட பல பதவிகளை வழங்கி தனக்கு அடுத்த தலைவராக வளர்த்தாரோ அதே போல றவூப் ஹக்கீமும் தேசியப்பட்டியலை பொருத்தமானவர்களுக்கு வழங்கி அதன் மூலம் சமூகத்தையும் பாராளுமன்றத்தையும் அலங்கரிக்கின்ற அடுத்த தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்.

(மர்சூக் அஹமட் லெப்பை)
Mob : 0777801382

Read More
avathani Media Network

தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் NTJ க்கு உடனடியாகத் தேவை

எமது குல்லிய்யதுல் முவஹ்ஹிதீன் அறபுக்கல்லூரியில் நான்கு வருட ஷரீஆவின் கற்கையை மேற்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சாதாரண தரப்பரீட்சைக்கான பாடங்களைப் போதிப்பதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றனர். தற்போதைய சூழலில் ஆங்கிலப்பாடம் மாத்திரம் ஓரு ஆசிரியரால் எமது கல்லூரியில் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனைய பாடங்களான கணிதம், விஞ்ஞானம், தமிழ் ஆகிய பாடங்களைப் போதிப்பதற்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆசிரியர்களுக்கான ஊதியம் இன்ஷா அல்லாஹ் நேரில் பேசி அறியத்தரப்படும். இது சம்பந்தமாக தொடர்பு கொள்ள: 0652248630, 0778970288
Read More
avathani Media Network

காத்தான்குடி பிரதான வீதி வடிகான் பிரச்சினைக்கு உடனடி தீர்வு..

(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி வடிகான்களில் குப்பை, கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களும்,பாதசாரிகளும் பாரிய சுகாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்துவருவதாக எமது செய்தியின் ஊடாக அதிகாரிகளின் கவணத்திற்கு கொண்டுவந்தோம் .
இப் பிரச்சினைய கவனத்தில் கொண்டு இன்று உரிய இடத்திற்கு விரைந்த காத்தான்குடி சுகாதார அதிகாரி டாக்டர் U.L.M. நஸ்ரூத்தீன் மற்றும் சுகாதார பரிசோதகர் M.றஹ்மத்துல்லாஹ் ஆகியோருடன் காத்தான்குடி நகர சபை செயளாளர் J.சர்வேஷ்வரன் அவர்களின் வேண்டு கோளில் நகர சபை கழிவகற்றல் ஊழியர்களால் உடனடியாக வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டது...
எமது செய்தியை கவனத்திற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எமது நண்றிகள்...





Read More
avathani Media Network

காத்தான்குடி பிரதேச விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் பிரதியமைச்சருடன் முபீன் சந்திப்பு

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி பிரதேச விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் விசேட சந்திப்பு 25.01.2016 ஆம் திகதியன்று விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான முபீனுக்கும் இடையில் அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்றது. 


மேற்படி சந்திப்பில் காத்தான்குடி பிரதேச விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டது. காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது மைதான அபிவிருத்தி காத்தான்குடி ஆரயம்பதி எல்லையில் அமைந்துள்ள விக்டரி மைதானத்தை விசேடமாக அபிவிருத்தி செய்தல் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் காத்தான்குடி பிரதேச விளையாட்டுக் கழகங்களை ஊக்கப்படுத்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 


இதன்போது கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ் தான் விரைவில் காத்தான்குடிக்கு விஜயம் செய்து மேற்படி மைதானங்களை பார்வையிடுவதுடன் விளையாட்டுக் கழகங்களையும் நேரில் சந்தித்து காத்தான்குடி விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதாக இணைப்புச் செயலாளர் முபீனிடம் உறுதியளித்தார். 
Read More
avathani Media Network

தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்தம்


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் இன்று (28) காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக பாராமெடிக்கல் மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுவதாக அதன் தலைவர் அஜித். பீ. திலகரத்ன கூறினார். 

குறித்த கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாவிட்டால் மேலும் பரந்தளவிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அவர் கூறினார். 
Read More
avathani Media Network

காத்தான்குடி ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

(எம் எச் எம் அன்வர்)

காத்தான்குடி டீன் வீதியில் இயங்கும் ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் தனவந்தர் ஒருவரின் நிதிப்பங்களிப்புடன் காத்தான்குடி மீடியா போரத்தின் உப தலைவர் எஸ் எம் எம் முஸ்தபா பலாஹி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று 26.01.2016 வழங்கி வைக்கப்பட்டன
படத்தில் அதிபர் அன்வர் சாதிக் உடன் மாணவர்களும் காணப்படுகின்றனர் மேற்படி பாடசாலைக்கு நாங்களும் உதவுவோம்








Read More