கொழும்பு
சம்பூர் அனல் மின்நிலையத்திற்கென சுவீகரிக்கப்பட்ட காணியை மீளப் பெற்று ஏற்னவே அங்கு வாழ்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான முயற்சிகளில் களமிறங்கியிருப்பதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் நாளை (06) பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தவிருப்பதகாவும் அவர் கூறினார்.இதேவேளை, அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வலிகாமம் வடக்கு காணிகளை மீளப் பெறுவதன் மூலமும் ஏற்கனவே அங்கு வாழ்ந்த மக்களை அதில் மீளக்குடியமர்த்த முடியும். எனவே இது குறித்தும் பிரதம ருடனான நாளைய சந்திப்பின் போது கலந்துரையாடப்படுமெனவும் அவர் கூறினார்.
மேலும் சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையினால் சுவீகரிக்கப்பட்ட காணியினை மீளப்பெற்றுக் கொள்வதன் மூலமும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்களுக்கான காணி பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்குமென நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தவர்கள் இதுவரை மீளக்குடியமர்த்தப்படாமலுள்ளனர்.
இவர்கள் வாழ்ந்து வந்த காணிகள் மேற்படி காரணங்களுக்காக சுவீகரிக்கப் பட்டன. அதற்கு மேலதிகமாக மோதல் காலத்தில் இந்நியாவிற்கு இடம்பெயர்ந்த வர்கள் மற்றும் நாடற்ற நிலையிலிருக்கும் அவர்களது பிள்ளைகளையும் இலங்கைக்கு மீள் வரவழைத்து குடியமர்த்தும் பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்குள்ளது.
மீள்குடியமர்த்தும் பணிகளை ஆரம்பிப்பதற்கு தேவையான காணிகளை ஒதுக்கீடு செய்வது அவசியம் எனவே முதற்கட்டமாக சம்பூர் மற்றும் வலிகாமம் வடக்கு காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
