கொழும்பு -
மக்களுடைய பணங்களை மோசடி செய்தவர்கள் தேசிய அரசாங்கம் அமைத்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முன்வராமை ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல என வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தேசிய அரசாங்கம் என்ற பேச்சுக்கு இடமில்லை என சுசில் பிரேமஜயந்த எம்.பி தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
பத்தரமுல்லை செத்சிறிபாயவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சியின் போது மக்களுடைய வறுமையை போக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் ஊழல் மோசடி செய்து தமது குடும்பங்களையே போஷித்தார்.
வீடமைப்பு மற்றும் சமுர்த்தியில் பல்வேறு ஊழல்களும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் ஆராய்வதற்கு தனிக் குழுக்கள் அமைத்தது மாத்திரமன்றி சர்வதேச கணக்காய்வு குழுவொன்றும் இலவசமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
எனவே, சமுர்த்தி என்பது மக்களுடைய பணங்களை கொண்டு நாட்டின் வறுமையை போக்குவதாகும். எனினும் முன்னைய அரசாங்கம் இதற்கு நிதியையும் ஒதுக்கிடவில்லை.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொது செயலாளர் தேசிய அரசாங்கம் என்ற பேச்சுக்கு இடமில்லை என கூறியுள்ளார். இது ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல. நாட்டில் மக்களுடைய பணங்களை மோசடி செய்தவர்கள் நல்லாட்சிக்கு உதவாமை பெரிய ஆச்சரியமல்ல.
நாம் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் வரை ஒரு சதமேனும் ஊழல் செய்யப்போவதில்லை. மக்களுடைய பணங்களை மக்களுக்கே வழங்குவோம். ஆட்சியாளர்கள் உழைத்த காலத்திற்கு முடிவுகட்டிவிட்டு அப்பாவி மக்கள் வாழ்க்கையை விடிவுக்கு கொண்டுவருவோம் என்றார்.
Source - Virakesary
